சுமோ – விமர்சனம்

நடிப்பு: சிவா, பிரியா ஆனந்த், யோஷினோரி தாஷிரோ, யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ், நிழல்கள் ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேத்தன், ஸ்ரீநாத், பெசண்ட் ரவி மற்றும் பலர்
கதை, இயக்கம்: எஸ்.பி.ஹோசிமின்
ஒளிப்பதிவு: ராஜீவ் மேனன்
படத்தொகுப்பு: பிரவீன் கேஎல்
இசை: நிவாஸ் கே.பிரசன்னா
தயாரிப்பு: ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் லிமிடெட்’ ஐசரி கே.கணேஷ்
பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்
சென்னையில் வசிக்கும் அலைச் சறுக்கு (Surfing) விளையாட்டு வீரரான நாயகன் சிவா, வழக்கம் போல் ஒருநாள் அலைச் சறுக்கு விளையாட கடலுக்குச் செல்லும்போது, சுமார் 170 கிலோ எடையுடன் கனமான உடலமைப்பு கொண்ட ஒரு நபர் (யோஷினோரி தாஷிரோ), கடற்கரையில் ஒதுங்கி, மயங்கிக் கிடப்பதை பார்க்கிறார். அந்த நபரை சிவா மீட்டு, தான் பணிபுரியும் விடிவி கணேஷின் உணவகத்துக்கு அழைத்து வருகிறார். வேறு நாட்டவரான அந்த நபர் எந்த நாட்டவர் என்பது உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியாததோடு, தான் யார் என்பதும் மறந்துபோய், ஒரு குழந்தையின் மனநிலையில் இருக்கிறார். எதுவும் பேச முடியாமல் தவிக்கும் அவரை சிவாவே பராமரித்து வருகிறார்.

ஒரு கட்டத்தில், அந்த நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், ஜப்பானில் பிரபலமான ’சுமோ மல்யுத்த வீரராக’ திகழ்ந்தவர் என்பதும் சிவாவுக்குத் தெரிய வருகிறது. அவரை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பும் முயற்சியில் சிவா ஈடுபடுகிறார். ஆனால், சுமோ வீரர் மீண்டும் ஜப்பானுக்கு வருவதை விரும்பாத ஒரு கும்பல், அவரை அங்கு வரவிடாமல் தடுக்க தீவிரமாக முயற்சி செய்கிறது. அவர்களது முயற்சிகளை முறியடித்து, சுமோ வீரரை சிவா மீண்டும் ஜப்பானுக்கு அழைத்துச் சென்றாரா? சுமோ வீரரை ஜப்பானுக்கு வர விடாமல் தடுப்பவர்கள் யார்? எதற்காக தடுக்கிறார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘சுமோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, அலைச் சறுக்கு விளையாட்டு வீரராக சிவா நடித்திருக்கிறார். ’காமெடி ஹீரோ’ என பெயர் பெற்றிருக்கும் அவர், இந்த படத்திலும் தனது வழக்கமான பாணியிலேயே நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
அவரது காதலியாக பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். அளவோடு நிறைவாக நடித்திருக்கிறார்.
கதையின் மைய கதாபாத்திரமான சுமோ வீரராக, ஜப்பானைச் சேர்ந்த நிஜ சுமோ வீரர் யோஷினோரி தாஷிரோ நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சகலத்தையும் மறந்து ஒரு குழந்தையின் மனநிலையில் வெகுளியாக நடந்துகொள்ளும் அவர், பின்னர் ஜப்பானில் பங்கேற்கும் சுமோ மல்யுத்த போட்டியில் அதிரடி சாகசங்கள் செய்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறார்.
நாயகியை ஒருதலையாகக் காதலித்து மொக்கை வாங்குபவராக வரும் யோகி பாபு, நாயகன் பணி புரியும் உணவகத்தின் உரிமையாளராக வரும் விடிவி கணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சதீஷ், தண்ணியடிக்கும் தமிழாசிரியராக வரும் நிழல்கள் ரவி, ஜப்பான் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் ஏஜெண்டாக வரும் ஸ்ரீநாத், மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி, சேத்தன், பெசண்ட் ரவி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ஹோசிமின். மொழி கடந்து, தேசம் கடந்து, மனிதர்களை இணைக்கும் உன்னத சாதனம் உலக அளவில் அன்பு மட்டுமே என்ற அற்புதமான கருத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிவாவே இப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். அவரது யதார்த்தமான வசனங்கள் இதம். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை, ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு, பிரவீன் கேஎல்-ன் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கதைக்கும், காட்சிகளுக்கும் ஏற்ப பயணித்திருக்கின்றன.
‘சுமோ’ – ஒருமுறை பார்க்கலாம்!
ரேட்டிங்: 2.5/5