மீட்பு முயற்சி தோல்வி: குழந்தை சுஜித் வில்சன் உயிரிழப்பு!
மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித் வில்சன், சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்..
இது குறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
27 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்க மேற்கொண்ட முயற்சிகள், ஆழ்துளைக் கிணற்றின் விட்டத்தின் அளவு குறுகியதாக இருந்ததால் தோல்வியடைந்தன.
சனிக்கிழமை அதிகாலை 70 அடி ஆழத்துக்கும் கீழே குழந்தை சுஜித் சென்றுவிட்டான்.
பல்வேறு உபகரணங்களுடன் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சனிக்கிழமை வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மீட்புப் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைத் தலைவர் காந்திராஜன் தலைமையில், அமைச்சர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், ஓ.என்.ஜி.சி, என்.எல்.சி. குழுவினர் ஆலோசித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆழ்துளைக் கிணறு அருகே மூன்றரை மீட்டர் பக்கவாட்டில் ரிக் இயந்திரம் மூலம், குழிதோண்டி, அதன் வழியாக தீயணைப்பு வீரரை அனுப்பி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரிக் இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சம்பவ இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. 7 மணியளவில் மீட்புப் பணிகள் தொடங்கிய நிலையில் மூன்று மணி நேரத்தில் 18 அடி வரை தோண்டியது. அதன்பின் கடுமையான பாறைகள் தென்பட்டதால், ரிக் இயந்திரம் மணிக்கு 2 அடிக்கு மேல் துளையிட முடியாமல் திணறியது. மேலும் துளையிடும் கருவியின் முனைப் பகுதிகள் சேதமடைந்தன.
இதையடுத்து அந்த இயந்திரத்தைவிட 3 மடங்கு திறன் மிக்க ரிக் இயந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. புதிய ரிக் இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் தனது பணியைத் தொடங்கியது. திங்கள்கிழமை இரவு வரை சுமார் 53 அடி ஆழம் வரை துளையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து துளையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடினமான பாறைகள், மழை, மண்சரிவு, இயந்திரம் பழுது ஆகியவை மீட்புப் பணிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றன.
மீட்பு பணியின்போது, ரிக் இயந்திரத்தின் பற்கள் பாறையின் இடையே மாட்டியதில் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டதால் பாறையை உடைப்பதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து சுமாா் 60 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட குழியில் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா் அஜித்குமார் இறங்கிப் பார்த்தார். அப்போது மிகப்பெரிய அளவிலான உடைக்கப்பட்ட கல் மீட்பு பணிக்குத் தடையாக இருந்தது தெரியவந்தது.
சுமார் 100 கிலோ எடை கொண்ட அந்தக் கல் கயிற்றின் மூலம் வெளியே தூக்கி எடுத்து வரப்பட்டது. கல்லை எடுத்த பின்னா் துளையிடும் பணி மிக விரைவாக நடைபெற்றது.
இந்நிலையில் இரவு 2.35 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், குழந்தை சுஜித் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இரவு 10.30 மணி அளவில் இருந்து ஆழ்துளை கிணற்றில் துர்நாற்றம் வருகிறது எனவும், குழந்தையின் உடல் சிதைந்ததால் இந்த துர்நாற்றம் வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் வழிகாட்டுதலின்படி குழந்தையின் உடலை மீட்க அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
ஆழ்துளைக் கிணற்றில் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் உடலை தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டனர். பின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடல் சிதைந்த நிலையில் எடுக்கப்பட்டது.
இதையடுத்து, குறிப்பிட்ட ஆழ்துளைக் கிணறும், சுஜித்தை மீட்க தோண்டப்பட்ட அனைத்து குழிகளும் கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டன.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சுஜித் உடல் ஒப்படைக்கப்பட்ட்து.
சுஜித் உடலுக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜோதிமணி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் சுஜித் வில்சன் உடல் பாத்திமாபுதூர் கல்லறையில் செவ்வாய்கிழமை காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.