”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது!”
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) வெளியிட்டுள்ள அறிக்கை:-
சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவி பாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மனஉளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர், தனது தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள குறிப்பில், தனது மரணத்திற்குக் காரணமான பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளிலும் மதவெறிச் செயல்கள் தலைவிரித்தாடும் நிலையில், தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி சென்னை ஐஐடியில் சேர்த்ததாகவும், அப்படி இருந்தும் தன் மகளைச் சிறுமைப்படுத்தி, மனஉளைச்சலுக்கு உட்படுத்தி உயிர்ப்பலிக்கு ஆளாக்கிவிட்டதாக சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் தாயார் தெரிவித்திருப்பது, நமது தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது. இது வேதனைக்குரியதும் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமான நிகழ்வாகும்.
தமிழ்நாட்டு மாணவர்கள், பிற மாநிலங்களின் கல்வி நிலையங்களில் தற்கொலைக்கும் மர்ம மரணங்களுக்கும் உள்ளாகும்போது, நமக்கு ஏற்படும் பதைப்பும் துடிப்பும், இந்த மாணவியின் சோகமயமான உயிரிழப்பிலும் ஏற்படுகிறது.
மாணவியின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேரள முதல்வர் கோரியிருக்கிறார்.
மாநிலத்தை ஆள்பவர்கள், இதனைக் கவனத்தில் கொண்டு நியாயமான, நேர்மையான, வெளிப்படைத்தன்மை கொண்ட சுதந்திரமான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
விசாரணைக்கு காலவரையறையும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சென்னை ஐஐடியில் இருந்து இத்தகைய சர்ச்சைகள் எழுவது புதிதல்ல.
தமிழ்நாட்டின் தலைநகரில் ஐஐடி இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற தமிழ் மறையாம் திருக்குறள் காட்டும் சமூக நீதிக்கு எதிரான சாதி – மத பேதம் கொண்ட சனாதனப் போக்கு, கல்விப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிலரின் மனதில் குடிகொண்டிருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்களை நடத்துவதும் இத்தகைய விபரீத விளைவுகளுக்குக் காரணமாகிவிடுகின்றது.
கல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து, நம் இந்திய தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, சமமான உரிமையுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் மேம்பட ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.