ஒரு அர்பன் நக்சலின் வெற்றி!
பாயல் கபாடியா குறும்பட மற்றும் ஆவணப்பட இயக்குநர். அவரது புதிய படம் ‘All We Imagine As Light’ சமீபத்தில் கான்ஸ் திரைப்பட விழாவின் கிராண்ட் ப்ரி விருதை வென்றிருக்கிறது. கான்ஸ் விழாவின் இரண்டாவது மதிப்புக்குரிய விருது இது. இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பாயல் தட்டிச் செல்கிறார். ‘யாருய்யா இந்தப் பாயல்?’ என்று உலகெங்கும் திரைத்துறையினர் கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டில் அவரைச் சுற்றிப் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. ‘உன்னால் இந்தியாவே பெருமை கொள்கிறது!’ என்று பிரதமர் மோடி X தளத்தில் ட்வீட் பதிந்திருக்கிறார்.
பாயல் குறித்து இந்தியா இப்போதுதான் பெருமை கொள்கிறது. ஆனால் இந்த விருதுக்கு முன்னர் வரை அவர் இந்தியாவின் அவமானமாகவே இந்திய அரசுகளால் பார்க்கப்பட்டிருக்கிறார்.
பாயல் புனேவில் இயங்கும் Film and Television Institute of Indiaவில் (FTII) படித்தவர். 2015ல் இந்த நிறுவனத்துக்கு இந்துத்துவ சார்புடைய கஜேந்திர சௌகான் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாயந்த FTIIக்கு தகுதியற்ற ஒருவரை நியமிப்பதா என்று மாணவர்கள் போராட்டங்களை துவக்கினார்கள். அந்தப் போராட்டத்துக்கு பாயல் கபாடியாதான் தலைமை வகித்து நடத்தி இருந்தார். அப்போது அந்தப் போராட்டத்துக்காக அவர் மீது மஹாராஷ்டிர போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. அவருக்கு FTIIயில் வழங்கப்பட்டிருந்த ஸ்காலர்ஷிப்பை ரத்து செய்தார்கள். ‘அர்பன் நக்சல்’ போன்ற வழக்கமான அவதூறுகள் அவர் மீது வீசப்பட்டன.
ரத்தான அந்த ஸ்காலர்ஷிப்பை 2017ல் வந்த புதிய தலைவர் மறுபடி அனுமதித்தார். அதை வைத்துதான் அப்போது தான் தயாரித்திருந்த குறும்படத்தை பாயலால் கான்ஸ் விழாவில் திரையிட முடிந்தது.
ஆனால் பதியப்பட்ட அந்த வழக்கு இன்னமும் நடந்து வருகிறது. இப்போது ஃபிரான்ஸ்சில் இருந்து திரும்பி வந்தாலும் பாயல் கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் நடையாய் நடக்கத்தான் வேண்டி இருக்கும்.
இந்த லட்சணத்தில் அவரை நடத்தியவர்கள்தான் இப்போது ‘இந்தியாவின் பெருமை’ என்று ட்வீட் பதிகிறார்கள். இதில் கூடுதல் கொடுமை அவரை அந்தப் பாடு படுத்திய FTII தனது அதிகாரபூர்வ X தளத்தில் அவரைப் பாராட்டி ‘எங்க ஸ்டூடண்ட்’ என்று பீற்றிக்கொண்டு பதிவு போட்டிருக்கிறது. அந்த ட்வீட்டை இதர மாணவர்கள் கிண்டலும் நக்கலும் சேர்த்துப் பகிர்ந்து வருகிறார்கள்.
இதுதான் இந்துத்துவத்தின் பாசாங்குத்தனம். நேற்று வரை தேசத் துரோகியாக இருந்த பாயல் கபாடியா இன்று ஒரு வெளிநாட்டு விருது வாங்கியவுடன் தேசத்தின் பெருமையாகி விட்டிருக்கிறார். ஒருவேளை அந்த விருது கிடைக்காமல் இருந்திருந்தால் இன்னமும் தேசத் துரோகியாகவே தொடர்ந்திருப்பார்.
ஒரு அர்பன் நக்சலை தேசத்தின் பெருமையாக மாற்றிக் காட்டிய ஃபிரான்ஸ் நாட்டுக்கு நன்றிகள் பல. விருது வென்ற பாயல் கபாடியாவுக்கு நல் வாழ்த்துகள். கான்ஸ் நகரத்தைக் கலக்கியது போலவே இந்திய கோர்ட்டுகளையும் ஒரு கலக்கு கலக்கி வழக்குகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வர வாழ்த்துகிறோம்! –
-ஸ்ரீதர் சுப்ரமணியம்