ஸ்ட்ரைக்கர் – விமர்சனம்

நடிப்பு: ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், கஸ்தூரி சங்கர், அபிநயா சதீஷ்குமார் மற்றும் பலர்

இயக்கம்: எஸ்.ஏ.பிரபு

ஒளிப்பதிவு: மனீஷ் மூர்த்தி

படத்தொகுப்பு: நாகூரான்

இசை: விஜய் சித்தார்த்

தயாரிப்பு: ஜேஎஸ்ஜே சினிமாஸ்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அகமது

ஆவிகளுடன் பேசும் முயற்சி எப்படி விபரீதமாக மாறுகிறது என்பது ‘ஸ்ட்ரைக்கர்’ திரைப்படத்தின் லைன்.

நாயகன் ஜஸ்டின் விஜய் தனது மேல் படிப்பை முடித்துவிட்டு, கார் மெக்கானிக் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். பல கார்களை பழுது பார்க்கும் அவர்,  ஒரு காரை முழுவதுமாக பழுது பார்த்து முடிப்பதற்கு முன்பாகவே, அந்த கார் டெலிவரி செய்யப்படுகிறது. அக்காரில் பயணம் செய்தவர்கள் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கிறார்கள். இதை அறிந்த ஜஸ்டின் விஜய் மிகுந்த கவலையடைகிறார்.

அந்த சமயத்தில் ஜஸ்டின் விஜய்யின் நண்பர்கள் சிலர் அமானுஷ்யங்கள் பற்றி அவரிடம் பேசுகிறார்கள். பிறகு அவர் தனது மெக்கானிக் வேலையை விட்டுவிட்டு, அமானுஷ்யங்களைப் பற்றி கற்றுக்கொடுக்கும் இன்ஸ்டிடியூட் ஒன்றில் சேர்ந்து படிக்கிறார். அங்கு அமானுஷ்யங்களைப் பற்றி பாடம் நடத்துபவராக  கஸ்தூரி இருக்கிறார். அவர்  அமானுஷ்யங்கள் என்றால் என்ன? அவை எங்கெங்கு உள்ளன? என்பதைப் பற்றி மாணவர்களுக்கு முழுமையாக சொல்லிக் கொடுக்கிறார். ஜஸ்டின் விஜய் மிக ஆர்வமாக பல சந்தேகங்களை கஸ்தூரியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்.

யூடியூப் சேனல் நடத்திவரும் யூடியூபரான நாயகி வித்யா பிரதீப், அமானுஷ்யங்கள் தொடர்பாக பேட்டி எடுக்க ஜஸ்டின் விஜய்யை சந்திக்கிறார். பின் இருவரும் பழகி காதலர்கள் ஆகிறார்கள்.

ஒரு நாள் ஜஸ்டின் விஜய்யும், வித்யா பிரதீப்பும் பங்களா ஒன்றுக்குள் செல்கிறார்கள். “ஓஜோ போர்டு” வைத்து அங்கு அமானுஷ்யங்கள் இருக்கின்றனவா, இல்லையா என்று  சோதிக்கிறார்கள். அப்போது ஆவி வருவது போல் மிரட்டலாக காட்சிகள் நிகழ்கின்றன. உடனே ஆவியுடன் ஓஜா போர்டு மூலம் அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். அப்படி ஆவியுடன் பேசும் முயற்சியை ஜஸ்டின் விஜய் தொடரும்போது, அந்த ஆவி வித்யா பிரதீப்பின் உடம்பில் புகுந்து அவரது குரலில் பேசி எச்சரிக்கிறது. பிறகும் அந்த முயற்சியில் ஈடுபடும் ஜஸ்டின் விஜய்யையும், வித்யா பிரதீப்பையும் ஆவி ஆட்டிப்படைக்கிறது. இறுதியில், அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா, இல்லையா? என்பது ‘ஸ்ட்ரைக்கர்’ திரைப்படத்தின் மீதி கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஜஸ்டின் விஜய் நிச்சயம் ஹீரோ மெட்டீரியல் தான். எனினும், கூடுதலாக நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொள்வது பிரகாசமான எதிர்காலம் அமைய நல்லது. நாயகியாக நடித்திருக்கும் வித்யா பிரதீப், தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ஆவியை வரவழைத்து, ஆவியுடன் பேசும் காட்சிகளில் பரபரப்பையும் பதற்றத்தையும் பார்வையாளர்களுக்கு கடத்தியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.பிரபு.

விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், மனீஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவும் நன்று.

ஸ்ட்ரைக்கர் – அமானுஷ்யப் பட பிரியர்களுக்கு பிடிக்கும்!