“ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!”
சாதி ஒழிப்பு குறித்த படங்கள் வர வேண்டும் என்று ரஜினி விரும்புவது உண்மை ரஜினியின் மனம் திறந்த பேட்டி இன்னும் வரவில்லை என்பேன் ரஜினி சுயசரிதை எழுத வேண்டும். கண்டிப்பாக அதில் சமூக ரீதியாக, தான் நொறுக்கப்பட்ட அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும்.
சமீபத்தில் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூலினை படித்து வியந்து இருக்கிறார் என்று கேள்வி பட்டேன். ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அது ஏன் என்று சொல்ல விரும்பவில்லை.
ஒன்று மட்டும் உண்மை. ரஜினிக்குள் ஒரு ஆழமான விளிம்பு நிலை மனிதன் இருக்கிறான். வர்த்தகத்திலும் சூழ்நிலை கைதியாகவும் சிக்கி தவிப்பதும் உண்மை.
எவிடன்ஸ் கதிர்
சமூக செயல்பாட்டாளர்
# # #
எவிடன்ஸ் கதிரின் மேற்கண்ட பதிவுக்கு வந்துள்ள எதிர்வினைகளில் சில…
Selva ji: உண்மை. மகிழ்ச்சி.
கருப்பு கருணா: விட்டா அம்பேத்கர் ரேஞ்சுக்கு கொண்டுபோயிடுவீங்க போலிருக்கே தோழா…
மு.ரா.பேரறிவாளன்: ‘பணக்காரன்’ படத்தில் ஒருவர் ரஜினியை “சேரிக்காரன்…” என்பார். “யாரை பார்த்துடா சேரிக்காரன்னு சொன்னே?” என்று மீண்டும் மீண்டும் அவன் சட்டையை உலுக்குவார் ரஜினி. கடைசியாக, “ஆமான்டா, நான் சேரிக்காரன்தான்டா” என்பார்.
Arun Mo: “சாதி ஒழிப்பு குறித்த படங்கள் வர வேண்டும் என்று ரஜினி விரும்புவது உண்மை” என்றும், “ரஜினியின் சமூக பாகுபாடு குறித்த நேர்காணல் வர வேண்டும்” என்றும் ஒரு முக்கிய செயல்பாட்டாளர் முகநூலில் எழுதியதை படிக்க நேர்ந்தது. இன்னும் கொஞ்சம் போனால் தலித் மக்களின் விடுதலைப் போராளியாகவே ரஜினியை சித்தரித்து விடுவார்கள் போல.
ரஜினி ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்தோ, சாதீய அடுக்குகள் குறித்தோ சிந்தித்தும் இருக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால், இன்னமும் சாதி பிரச்னை இருக்கிறதா என்றுகூட வெளிப்படையாக கேட்க கூடியவர்.
ரஜினி ஒரு வியாபாரி. அதை தாண்டி, அவர் பிராமணர்களின் பினாமியாகவே செயல்படுபவர். கபாலி படத்தைக்கூட சோ ராமசாமிக்குத் தான் திரையிட்டுக் காட்டினார். அதே இடத்திற்கு தொல்.திருமாவளவனை அழைத்திருக்கக் கூடாதா? ஏன் செய்யவில்லை?
கபாலி படத்தில் நடித்ததால் மட்டும் ரஜினியை ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான ஒருவராக பார்ப்பது ஒரு வகையான மன நோய்.
Abi Sheik: நீங்கள் சொல்வது உண்மை தான் தோழர். இருந்தாலும், ரஜினி என்ற பிம்பம் பேசும் வசனங்களும், கபாலியின் கதையும் மக்கள் மத்தியில் ஒரு தலித்திய அரசியலை விவாதிக்க, முணுமுணுக்க வைத்திருக்கிறது. கபாலி என்ற படைப்பின் தாக்கம் சரியான அளவுகோலில் மக்களிடையே சென்றடைந்துள்ளது.
அமரகீதன்: “எந்திரன், சிவாஜி படங்களை பார்க்க அழைக்கும்போது நேரமில்லை என்று கூறிய சோ, இப்போது அவரே அழைத்து, கபாலி பார்க்க வேண்டும் என்று கூறியது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கென தனி காட்சியே திரையிட்டோம். படம் பார்த்த பிறகு இரவு முழுவதும் ரஜினியை அவ்வளவு புகழ்ந்து பேசியிருக்கிறார்” என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ‘கபாலி’ சக்சஸ் மீட்டில் பேசியிருக்கிறார்.
(பார்க்க: http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/66626-producer-thanu-got-emotional-over-rajinis-word.art)
இதன்படி பார்த்தால், சோ, தானே விரும்பி கேட்டுக்கொண்டதன் பேரில் தான் அவருக்கு ‘கபாலி’ போட்டுக் காட்டப்பட்டதே தவிர, ரஜினி விரும்பி அழைத்து சோவுக்கு திரையிட்டு காட்டவில்லை.