”இதுதான் திராவிட மாடல் ஆட்சி”: நரேந்திர மோடி முன்னிலையில் மு.க.ஸ்டாலின் அதிரடி விளக்கம்!
மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆன பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரை வருமாறு:
தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் திறப்பு விழாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, காணொளி காட்சி மூலம் பங்கேற்றுள்ள ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய அமைச்சர்கள் எல்.முருகன், வி.கே.சிங், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்பெருங்குடி மக்கள் அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க கூடிய முதல் அரசு விழா, இந்த விழா. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பாகவும், தமிழக முதல்வராகவும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. கல்வி, மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகைகளில் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு அளித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழக மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவமானது.
தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியானது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. தமிழகத்தின் வளர்ச்சியே திராவிட மாடலாகும். அனைவரையும் உள்ளடக்கிய இந்தவளர்ச்சியை தான் திராவிட மாடல் ஆட்சி என குறிப்பிடுகிறோம்.
நமது நாட்டின் வளர்ச்சியிலும், ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு மிக முக்கிய பங்களிப்பை தருகிறது என்பது பிரதமருக்கு தெரியும் என்று நம்புகிறேன்.
சிலவற்றை எடுத்துரைக்க வேண்டுமானால், இந்தியாவின் மொத்த உற்பத்தி ஜிடிபி மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 9.22%, ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6% இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4% ஜவுளித்துறை பங்களிப்பில் 19.4%, கார்கள் ஏற்றுமதியில் 32.5%, தோள் பொருட்கள் ஏற்றுமதியில் 33%. ஆனால், ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21% மட்டுமே. எனவே, தமிழ்நாட்டை போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும், வகிக்கக் கூடிய பங்கிற்கு ஏற்ப ஒன்றிய அரசும் திட்டங்களிலும், நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதுதான் உன்மையான கூட்டுறவு கூட்டாட்சியாக அமையும்.
தமிழ்நாட்டின் கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவ மக்களின் பாரம்பரிய மீன்படி பகுதியில் அவர்களின் உரிமைகள நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கு இது தகுந்த தருணம் என்பதை நினைவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். 15.05.22 வரை தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை என்பது 14ஆயிரத்து 6 கோடி ரூபாய். இந்த தொகையை விரைந்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பல்வேறு மாநிலங்களில் வருவாயானது முழுமையாக சீரடையாமல் இருக்கும் இந்த காலத்தில் ஜிஎஸ்டி இழப்பிட்டை ஜூன் 2022க்கு பின்னரும் குறைந்தது, இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தர வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன். பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமாயாய் உலக செம்மொழிகளில் இன்றளவும் உயிர்ப்போடு விளங்கக்கூடிய தமிழை இந்திக்கு இணையாக அலுவல் மொழியாக, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.
இறுதியாக மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீட் முறையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதுகுறித்து சட்டம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை விரைந்து விளங்கிட வேண்டும் என பிரதமரை இந்த தருணத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இந்த கோரிக்கையில் இருக்கக்கூடிய நியாயத்தை பிரதமர் உணர்வார் என்று நான் உளமாற நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் உரையாற்றினார்.