”அம்பேத்கர் பற்றி அவதூறு பேச்சு: அமித் ஷாவுக்கு ஸ்டாலின், உதயநிதி பதிலடி!
அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின்போது மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது ஏழு பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” என பேசினார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அமித்ஷா பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின்:
அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், ”அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
உதயநிதி:
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அமித்ஷாவின் விமர்சனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், ”எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும். அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்!” என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
திருமாவளவன்:
”ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு வயிற்றெரிச்சல்” என விசிக தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ”புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்திவிட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம். அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் “விசுவரூபம் ” எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்!” என பதிவிட்டுள்ளார்.