“தமிழக அரசியல் சூழலை படமாக உருவாக்குவார் முருகதாஸ்”: விஷால் நம்பிக்கை!
நீட் பிரச்சனை மற்றும் தமிழக அரசியல் சூழல் ஆகியவற்றை ஏ.ஆர்.முருகதாஸ் படமாக உருவாக்குவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக விஷால் தெரிவித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஸ்பைடர்’. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். தாகூர் மது தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பை வெளியிடவுள்ளது லைகா நிறுவனம்.
‘ஸ்பைடர்’ தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க செயலாளர் மற்றும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இவ்விழாவில் மகேஷ்பாபுவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்பதற்காக மட்டுமே கலந்து கொண்டுள்ளேன். தமிழ் மக்கள் நிச்சயம் அவரை ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘ஸ்பைடர்’ உருவாகியுள்ளது. இப்படம் வெளியாகும் சமயத்தில் ஆந்திராவே திருவிழா கோலத்தில் இருக்கும்.
இந்தியாவில் உள்ள முக்கியமான சமூக பிரச்சினைகளை தன்னுடைய படங்களில் கூறுபவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் ஒரு சிறந்த இயக்குநர். அவர் இன்னும் நிறைய தமிழ்ப் படங்கள் இயக்க வேண்டும். இந்தி திரையுலகிற்கு செல்ல வேண்டாம். நீங்கள் எங்களுக்குத் தேவை. நீட் பிரச்சனை மற்றும் தமிழக அரசியல் சூழல் ஆகியவற்றை அவர் படமாக உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு விஷால் பேசினார்.
நாயகன் மகேஷ்பாபு பேசியதாவது:
திரையுலகிற்கு வந்து 18 வருடங்கள் கழித்து, இன்று எனக்கு முதல் படம் நடிப்பது போன்ற உணர்வு கிடைத்துள்ளது. நானும் முருகதாஸும் ஒரு படத்தில் இணைய 10 வருடங்களாக முயற்சித்து வருகிறோம். அந்த முயற்சி இந்த பிரம்மாண்ட படத்தில் நிறைவேறியுள்ளது.
120 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். அதை தயாரிக்க எங்கள் தயாரிப்பளர்கள் முன் வந்தது மிகப் பெரிய விஷயம். இரு மொழிகளில் வெளியானால் தான் முதலீட்டை திரும்ப எடுக்க முடியும். அதனால் தான் தமிழிலும் படத்தை எடுத்திருக்கிறோம்.
இந்தப் படம் ரொம்பவே கஷ்டமான படம். பின்னணி இசைக்காக அரிதாக தான் படங்கள் பேசப்படும். அந்த வகையில் ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் வல்லவர். எஸ்.ஜே.சூர்யா 12 வருடங்களுக்கு முன்பு என்னை இயக்கினார். இன்று என்னோடு சேர்ந்து நடித்திருக்கிறார்.
எனக்கு பெரும்பாலும் ரீமேக் படங்களில் விருப்பமில்லை. ஆனால் ‘துப்பாக்கி’ படத்தைப் பார்த்து கொஞ்சம் ஆசைப்பட்டேன். இப்போது அதன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்தது மகிழ்ச்சி
இவ்வாறு மகேஷ்பாபு பேசினார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:
10 வருடங்களுக்கு முன்பு விஜயவாடாவில் மகேஷ்பாபு நடித்த ‘ஒக்கடு’ படத்தைப் பார்த்தேன். அப்படம் வெளியாகி 3 வாரம் ஆன பிறகும்கூட அப்படத்தை ஒரு திருவிழா போல கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர் ’போக்கிரி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை இயக்க ஆசைப்பட்டு அவரிடம் பேசினேன். பின் ’துப்பாக்கி’ படத்தை நானே தயாரித்து அவரை இயக்கி விட வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போது தான் அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதை வீணாக்கி விடக் கூடாது என்று தான் அதை தமிழிலும் எடுத்து அவரை தமிழுக்கு கொண்டு வர ஆசைப்பட்டேன்.
மற்ற படங்கள் மாதிரி இல்லாமல் முழுக்க, ஒவ்வொரு காட்சியையும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுத்தோம். எனக்கும் உடன் நடித்த நடிகர்கள் எல்லோருக்குமே மகேஷ்பாபு ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார். அமீர்கானுக்குப் பிறகு, படம் முடிந்த பிறகும் ஏதாவது காட்சி எடுக்க வேண்டும் என்றால் கூறுங்கள் தேதிகள் தருகிறேன் என்று சொன்ன நாயகன் என்றால் அது மகேஷ்பாபு மட்டுமே. இந்த படத்தின் வெற்றி நிச்சயம் மகேஷ்பாபுவுக்கு தான் போய்ச் சேரும்.
இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.