மானுடத்தின் உன்னதமான கனவை இவ்வுலகம் கண்டு 107 வருடங்கள் ஆகி விட்டன!
மானுடத்தின் உன்னதமான கனவை இவ்வுலகம் கண்டு 107 வருடங்கள் ஆகி விட்டன.
குறைந்த நேர உழைப்பு என்பது சாத்தியம் என்பதை இவ்வுலகம் கண்டது.
குடும்பத்துக்கு அடிப்படையான குழந்தை பராமரிப்பை அரசு ஏற்ற அதிசயத்தை இவ்வுலகம் கண்டது.
மக்களின் ஆரோக்கியமும் அரசு பராமரிக்க முடியும் என்பதை உலகம் கண்டது.
பெண்கள், உண்மையான பெண் விடுதலையை குடும்ப அமைப்பில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் பெற முடியுமென நிரூபிக்கப்பட்டது.
மக்களுக்கு தேவையான உணவுகளையும் அரசே அளிக்க முடியும் என்பதை உலகம் கண்டது.
தொழிலாளர்களின் உரிமை என்றால் என்னவென உலகம் கண்டது.
இந்த உலகை தம் உழைப்பால் உருவாக்கியவர்களுக்கான ஆட்சி அமைந்தால் அது எத்தனை அற்புதமாக இருக்கும் என்பதை முதன்முதலாக இந்த உலகம் பார்த்தது.
பிற நாடுகளில் சங்கங்கள் உருவாவதை அந்த நாட்டு அரசுகள் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மருத்துவமும் கல்வியும் அடிப்படை வசதிகளும் பெண்களுக்கான அதிகாரமும் தொழிலாளர் உரிமையும் கொடுக்க வேண்டிய கட்டாயங்களும் உருவானது.
லெனினும் ஸ்டாலினும் கட்டியெழுப்பிய அந்த மகோன்னத மானுடக் கனவு, சோவியத் யூனியன்!
நவம்பர் புரட்சியால் விண்டெழுந்த சோவியத் யூனியன், மானுடத்தின் கனவு மட்டுமின்றி, மார்க்சியம் என்கிற அரசியல் தீர்க்கத்தின் சாட்சியமும் கூட.
சோவியத் போன்ற சோசலிச சமூகம் உருவாவது கோட்பாட்டில்தான் நடக்கும், யதார்த்தத்தில் சாத்தியமில்லை என சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உருவானது. சோவியத் உருவானபின் அவதூறு கதைகளை முதலாளித்துவ நாடுகள் கட்டவிழ்த்து சோவியத்தை சாய்க்க பார்த்தன. அதுவும் நடக்கவில்லை. 72 வருடங்களுக்கு வலிமையுடன் நின்றது.
சோவியத் உடைந்த பிறகு வந்த இடதுசாரிகள், சோவியத் புத்தகங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கூட்டங்களை உருவாக்கினார்கள். மார்க்ஸையும் லெனினையும் முன் வைத்த கோட்பாட்டை அந்தந்த கோட்பாட்டு சூழலில் பொருத்தி, நம் சூழலுக்கானதை சமைக்க தவறினார்கள்.
லெனினும் ஸ்டாலினும் முன் வைத்த தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமையை பொருட்படுத்தாத இடதுசாரிகள்தான் இன்று அதிகம். நவதாராளவாதத்தை அணுக முடியாமல் தவிக்கும் இடதுசாரிய அமைப்புகளும் கட்சிகளும் உலகளவில் உண்டு. சோவியத்தின் போல்ஷ்விக் கட்சி அமைப்பு பாணியையே நூற்றாண்டு தாண்டி தொடரும் அவலமும் உண்டு. புரட்சி செய்வதையோ அதன் மூலமாக அடிப்படை சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதையோ இடதுசாரிய அமைப்புகளும் கட்சிகளும் உதிர்த்து காலங்கள் ஆகி விட்டன. அரசு மறுக்கும் உரிமைகளை போராடி பெற்றுத் தந்து, எந்த அரசதிகாரம் மாற்றப்பட புரட்சி செய்ய வேண்டுமோ அந்த அரசதிகாரம் நீடிக்க உதவும் அமைப்புகளாக அவை சுருங்கி விட்டன.
தற்கால அரசின்தன்மை, சர்வதேச நிலை, சமூக இயக்க முறை, கார்ப்பரேட் மூலதனம், surveillance, மதவாத, இனவாத மேலாதிக்க அரசியல், தேசிய இன விடுதலைப் போராட்டங்கள், தொழில்நுட்பங்கள், நாடுகள் என்கிற சிந்தனையின் குரூரம், அரசதிகாரத்தின் அசுர பலம், நவதாராளவாத சிந்தனை, முதலாளித்துவ பற்சக்கரங்களுக்கு வாழ்க்கையைத் தொலைக்கும் மக்கள், உலக முதலாளிகள் ஒன்றுபட்டு தொழிலாளர்கள் உதிரியாக்கப்பட்டிருக்கும் சூழல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் மக்களுக்கான ராணுவமும் ஆயுதம் தாங்கிய அரசியலும் தீவிரவாதம் என நம்ப வைக்கப்பட்டிருக்கும் பொதுபுத்தி போன்ற புதிய நிலைகளை கையாளுவதற்கான புதிய வகை சிந்தனை போக்குகள் இல்லாமல் சோவியத் போன்ற ஓர் அற்புதத்தை நிகழ்த்துவது சாத்தியமில்லை.
நவம்பர் புரட்சியின் சிறப்பே லெனின்தான். மார்க்சிய எழுத்துகளை அவர் வேதாகமம் ஆக்கி இருந்தால் சோவியத் நேர்ந்திருக்காது. ரஷ்யாவின் சூழலுக்கும் அக்காலக்கட்ட உற்பத்தி முறை, ஆட்சியதிகாரம், சமூக முறை மற்றும் மக்கள் சிந்தனை போன்றவற்றுக்கு ஏற்ப மார்க்சியத்தை தகவமைத்து அரசியல் ஆக்கினார். அவரின் காலத்துக்கு பிறகு அவரை லெனினியம் ஆக்கினோம். அந்த லெனினியத்தை இந்தியச் சூழலுக்கு உவப்பானதாக மாற்றாமல் தோற்றோம்.
அன்றைப் போல இன்று லெனின்களும் இல்லை. ஸ்டாலின்களும் இல்லை. போல்ஷ்விக்குகளும் இல்லை.
அய்ஜாஸ் அகமது சொன்னது போல நவம்பர் புரட்சி போன்ற ஒரு புரட்சியை உருவாக்க நூற்றாண்டுகளை தாண்டி போல்ஷ்விக்குகள் எப்படி சிந்தித்திருப்பார்கள் என முதலில் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கு முதலில் நாம் போல்ஷ்விக்குகள் இல்லை என்கிற உண்மையை, கசப்பாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எனினும் எவர் தடுத்தாலும், முயன்றாலும் சோவியத்தை மறைக்க முடியாது. போலவே சோவியத் போன்ற ஒரு மானுட உன்னதம் மீளுவதையும் எவரும் தடுத்திட முடியாது.
இயற்கை பரிணாமத்தை பற்றி பேசும் ஜுராசிக் பார்க் பட வசனம், Nature will find its own way என்பது. போலவே புரட்சியும் அதற்கான வழியை நிச்சயமாக தேர்ந்தெடுக்கும்.
மனித குல நீட்சிக்கான ஒரே வழி, அது மட்டும்தான்!
-RAJASANGEETHAN