சொர்க்கவாசல் – விமர்சனம்
நடிப்பு: ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி (நடராஜ்), சானியா ஐயப்பன், ஷராஃபுதீன், பாலாஜி சக்திவேல், ஹக்கிம் ஷா, ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன் ஜேசுதாசன், சாமுவேல் ராபின்சன், காகா கோபால், பொற்கொடி, சந்தானபாரதி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சித்தார்த் விஸ்வநாத்
ஒளிப்பதிவு: பிரின்ஸ் ஆண்டர்சன்
படத்தொகுப்பு: செல்வா ஆர்.கே
இசை: கிறிஸ்டோ சேவியர்
தயாரிப்பு: திங்க் ஸ்டூடியோஸ், ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
’சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் கதைச் சுருக்கத்தைப் பார்ப்பதற்குமுன், அது தொடர்பான ஓர் உண்மைச் சம்பவத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். அது ஏற்கெனவே தெரிந்தது தான் எனில், இப்போது நினைவுபடுத்திக் கொள்வோம்…
1999ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள், இந்திய சிறைச்சாலை வரலாற்றில் ஒரு கருப்பு நாள். அன்று சென்னை மத்திய சிறையில் கைதிகள் நடத்திய கலவரத்தில், ஜெயிலர் ஜெயக்குமார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏராளமான கைதிகள் உயிரிழந்தார்கள்.
கைதிகளின் கலவரத்துக்குக் காரணம் – பாக்ஸர் வடிவேலு என்ற கைதியின் மரணம்.
குத்துச் சண்டை வீரராகத் திகழ்ந்த பாக்ஸர் வடிவேலு, கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் பெரிய தாதாவாகவும் விளங்கினார். இதனால் 1998ஆம் ஆண்டு அவர் மீது குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் போடப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். என்ன தான் சிறையில் அடைக்கப்பட்டாலும், தாதா என்பதால் அவருக்கு வெளியே இருந்தது போல் உள்ளேயும் ரவுடிகளின் ஆதரவு இருந்தது. அதனால் அதிகாரிகளுக்கு அடங்காமல், ராஜா போல் சிறையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், 1999, நவம்பர் 18, காலைப் பொழுது பாக்ஸர் வடிவேலுவின் மரணச் செய்தியுடன் புலர்ந்தது. கைதிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். முந்தைய நாள் வடிவேலு வயிற்று வலியால் துடித்ததாகவும், அவரை சிறைக் காவலர்கள் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் சிறை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதை கைதிகள் நம்பத் தயாராக இல்லை. எந்த போதைப் பழக்கமும் இல்லாத, 38 வயதே ஆன குத்துச் சண்டை வீரர் திடீரென ஏற்பட்ட வயிற்றுவலியால் மாரடைப்பு வந்து உயிரிழந்தார் என்றால் எப்படி நம்புவார்கள்? அவரை அடித்து தான் கொன்று விட்டார்கள் என கைதிகள் திடமாக நம்பியதால் கலவரம் வெடித்தது. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், சிறை நிர்வாகத்தை எதிர்த்து பெரிய அளவில் கலவரத்தில் ஈடுபட்டார்கள். இந்த பயங்கர கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.
கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காவலர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, சம்பவத்தன்று சிறையில் இருந்தவர்கள் கூறினார்கள்.
உண்மையில் பாக்ஸர் வடிவேலு எப்படி இறந்தார்? ஜெயிலர் ஜெயக்குமாரை கொன்றது யார்? என்கிற கேள்விகளுக்கு இதுவரை சந்தேகத்திற்கிடமில்லா விடைகள் என எதுவும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த ஓய்வு பெற்ற சிறைத்துறை டிஐஜி ராமச்சந்திரன் முன்வைக்கும் வெர்ஷனை, அன்று சிறையிலிருந்த அரசியல் கைதிகள் நிராகரிக்கிறார்கள். அவர்கள் வேறொரு வெர்ஷனை முன்வைக்கிறார்கள்.
பரபரப்பூட்டும் இச்சம்பவத்தை மையமாகக் கொண்டு, அதில் சில கற்பனை கதாபாத்திரங்களையும், சில புனைவு சம்பவங்களையும் புகுத்தி எடுக்கப்பட்டிருப்பது தான் ‘சொர்க்கவாசல்’ திரைப்படம்.
இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம் என்னவெனில், 1999-ம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் கலவரம் வெடித்து பல உயிர்கள் பலியாகின்றன. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி இஸ்மாயில் (நட்டி நடராஜன்) தலைமையிலான ஆணையத்தை அமைக்கிறது மாநில அரசு. அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணை வழியே கதை சொல்லப்படுகிறது. அதன்படி மத்திய சிறையில் இருக்கும் – பாக்ஸிங் தெரிந்த – தாதாவான சிகா (செல்வராகவன்) திருந்தி வாழ முடிவெடுத்து, தனது ஆதரவாளர்களை குற்றச்செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்.. ஆனால், புதிதாக வரும் துணை ஜெயிலர் சுனில் குமார் (ஷராஃபுதீன்), தாதா சிகாவை ஒடுக்கி, ஒன்றுமில்லாமல் முடக்க நினைக்கிறார்.
இந்தச் சூழலில், செய்யாத ஒரு கொலைக் குற்றத்துக்காக சிறைக்கு வருகிறார் நாயகனும், ரோட்டோரம் இட்லி – தோசை கடை வைத்து நடத்துபவருமான பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி). சிறைக் கொடுமை அவரை கடுமையாக சோதிக்கிறது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கப்படவிருக்கும் ஒரு நாளில் பெரிய சம்பவம் ஒன்று சிறையில் நிகழ்ந்து, அதையொட்டி பயங்கர கலவரம் வெடிக்கிறது. இதில் எந்த தொடர்பும் இல்லாத பார்த்திபன் பரிதாபமாக சிக்கித் தவிக்கிறார். இறுதியில் அவர் அதிலிருந்து வெளியேறினாரா, இல்லையா? என்பது ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் பார்த்திபனாக ஆர்ஜே பாலாஜி நடித்திருக்கிறார். கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்குள் இருக்கும் அற்புதமான குணச்சித்திர நடிகர் இதில் வியப்பூட்டும் வகையில் வெளிப்பட்டு, அவருக்கு உயர்வான இன்னொரு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். பாராட்டுகள்.
நாயகனின் தாய் வேணியம்மாளாக வரும் பொற்கொடி, காதலி ரேவதியாக வரும் சானியா ஐயப்பன், நண்பன் ஆனந்தாக வரும் காகா கோபால், அசிடிட்டி பிரச்சனையால் அவதிப்பட்டாலும் ஒவ்வொருவரையும் துருவித் துருவி விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி இஸ்மாயிலாக வரும் நட்டி, தாதா சிகாவாக வரும் செல்வராகவன், போலீஸ் கட்டபொம்மனாக வரும் கருணாஸ், துணை ஜெயிலர் சுனில் குமாராக வரும் ஷராஃபுதீன், டைகர் மணியாக வரும் ஹக்கிம் ஷா, கெண்ட்ரிக்காக வரும் சாமுவேல் ராபின்சன், குக்கர் பஷீராக வரும் பாலாஜி சக்திவேல், மோகனாக வரும் ரவி ராகவேந்திரா, சீலனாக வரும் ஷோபா சக்தி என்ற அந்தோணி தாசன் ஜேசுதாசன், உள்துறை அமைச்சராக வரும் சந்தானபாரதி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சித்தார்த் விஸ்வநாத் இப்படத்தை இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தேவையான அளவு கற்பனை கதாபாத்திரங்களையும், புனைவு சம்பவங்களையும் சேர்த்து, சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை பரபரப்பாக நகர்த்திச் சென்றுள்ளார். சிறைச்சாலையின் கொடூர முகத்தை இவர் அளவுக்கு விரிவாக இதற்குமுன் எந்த இயக்குநரும் சொன்னதில்லை. வாழ்த்துகள் சித்தார்த் விஸ்வநாத்.
பிரின்ஸ் ஆண்டர்சனின் ஒளிப்பதிவு, எஸ்.ஜெயச்சந்திரனின் கலை இயக்கம், செல்வா ஆர்.கே-யின் படத்தொகுப்பு, கிறிஸ்டோ சேவியரின் இசை, தினேஷ் சுப்பராயனின் சண்டை அமைப்பு போன்ற நேர்த்தியான தொழில்நுட்பங்கள் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘சொர்க்கவாசல்’ – அவசியம் கண்டு களிக்க வேண்டிய படம்!