சொப்பன சுந்தரி – விமர்சனம்

நடிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமிப்ரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், மைம் கோபி, சுனில் ரெட்டி, ஷா ரா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: எஸ்.ஜி.சார்லஸ்

ஒளிப்பதிவு: பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன்

படத்தொகுப்பு: சரத், புவன் ஸ்ரீனிவாஸ்

பாடலிசை: அஜ்மல் தஹஸீன்

பின்னணி இசை: விஷால் சந்திரசேகர்

தயாரிப்பு: பாலாஜி & விவேக் ரவிச்சந்திரன்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

’சொப்பன சுந்தரி’ என்ற பெயரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். மாபெரும் வெற்றிப்படமான ’கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் நகைச்சுவை மன்னர்களான கவுண்டமணி – செந்தில் ஜோடி, ஒரு காரையும் அதை வைத்திருந்த சொப்பன சுந்தரியையும் தொடர்புபடுத்தி, என்றென்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய அட்டகாசமான காமெடி பண்ணியிருப்பார்கள். அதுபோல, ஒரு காரை சொந்தமாய் வைத்துக்கொள்ள பலர் போட்டியிடும் இந்த படத்துக்கு மிகப் பொருத்தமாகவே ‘சொப்பன சுந்தரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஒரு நகைக்கடையில் பணிபுரியும் இளம்பெண் அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்), தனது அம்மா லட்சுமியம்மாள் (தீபா ஷங்கர்),  வாய்பேச இயலாத அக்கா தேன்மொழி (லட்சுமிப்ரியா சந்திரமௌலி), நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் அப்பா ஆகியோருடன் குறைந்த வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். இவரது அண்ணன் துரை (கருணாகரன்) ஏற்கெனவே திருமணமாகி தனிக்குடித்தனம் போய்விட்டார்.

அகல்யா வேலை செய்யும் நகைக்கடைக்கு வந்து நகை வாங்கும் அண்ணன் துரை, அங்கு தரப்படும் பரிசுக்கூப்பனை மட்டும் அகல்யாவின் முகத்தில் வீசி எறிந்துவிட்டுப் போகிறார். ஆனால் அந்தக் கூப்பனுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது. அது அகல்யாவின் வீட்டில் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது.

அகல்யாவின் அக்கா தேன்மொழியை பெண் பார்க்கவரும் மாப்பிள்ளை (ஷா ரா), தனக்கு அந்த புத்தம் புது கார் வரதட்சணையாகக் கிடைக்கும் என்பதால் திருமணத்துக்கு ஓ.கே. சொல்கிறார். தேன்மொழியிடம் தனியாகப் பேச வேண்டும் என்று தேன்மொழியுடன் அந்த காரில் வெளியில் செல்கிறார்.

அப்படி அந்த காரில் போகும்போது தேன்மொழிக்கு கார் ஓட்ட கற்றுத் தருகிறார் மாப்பிள்ளை. அப்போது அந்தக் காரில் ஒருவன் அடிபட்டு விழுந்து சாகிறான். பின்னால் போலீஸ் வருவதைப் பார்த்த மாப்பிள்ளை, சடலத்தை காரின் டிக்கியில் ஏற்றி, காரை கொண்டுவந்து தேன்மொழியின் வீட்டில் நிறுத்திவிட்டு, நாளைக்கு வந்து காரில் இருக்கும் சடலத்தை அப்புறப்படுத்துவதாக சொல்லிவிட்டுப் போகிறார்.

மறுநாள் காலையில் அகல்யாவின் வீட்டுக்கு தன் மனைவி மற்றும் மைத்துனர் டேஞ்சர் மாமா (மைம் கோபி) சகிதம் வரும் துரை, “இந்தக் கார் நான் வாங்கிய நகைக்கான கூப்பனால் கிடைத்தது. அதனால் இந்தக் கார் எனக்குத் தான் சொந்தம். கார் சாவியைக் கொடு” என்று தகராறு செய்கிறார்.

இந்தச் சண்டையில் கார் கண்ணாடி உடைந்து காரும் டேமேஜ் ஆகிறது. கூடவே குடும்பத்தினர் அனைவருமே காயம் அடைகிறார்கள். விவகாரம் போலீஸ் நிலையத்துக்குப் போகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் (சுனில் ரெட்டி) அகல்யாவைப் பார்த்தவுடன் அவர் மீது மோகம் கொண்டு, அவரை அனுபவிக்கத் துடிக்கிறார்.

இறுதியில், கார் யாருக்குச் சொந்தமாகிறது? அதன் டிக்கியில் இருந்த சடலத்தின் கதி என்ன? இன்ஸ்பெக்டரின் மோகவலையில் சிக்காமல் அகல்யா எப்படி தப்பிக்கிறார்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறது ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தின்  மீதிக்கதை.

0a1d

கதையின் நாயகி அகல்யாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இது மிகப் பொருத்தமான கதாபாத்திரம். படம் நெடுகிலும் தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். படுத்த படுக்கையாகக் கிடக்கும் அப்பா, விவரம் தெரியாத அம்மா, திருமணத்திற்குக் காத்திருக்கும் அக்கா, பொறுப்பில்லாத அண்ணன் என்று இந்த நால்வரையும் சமாளித்து வாழும் வாழ்க்கையை திரையில் அருமையாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன்னை கண்ணாலேயே காமத்துடன் பார்த்து ரசித்து சித்ரவதை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டரை துணிச்சலுடன் எதிர்கொண்டு, கடைசியில் அவரை இக்கட்டில் மாட்டிவிடும்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார். பாராட்டுகள்.

அகல்யாவின் அக்கா தேன்மொழியாக தேசிய விருதுபெற்ற  நடிகை லட்சுமிப்ரியா சந்திரமௌலி நடித்து இருக்கிறார். வாய்பேச இயலாத அந்த கதாபாத்திரத்திற்கு தனது இயல்பான நடிப்பு மூலம் நியாயம் செய்திருக்கிறார்.

அம்மா லட்சுமியம்மாளாக வரும் தீபா ஷங்கர், வழக்கம் போல தனக்கே உரித்தான பாணியில் சிரிக்க வைக்கிறார். ரெடின் கிங்ஸ்லியும் கூட தனது வழக்கமான நடிப்பின் மூலம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனாக வரும் சுனில் ரெட்டி, வில்லனாக மிரட்டியிருக்கிறார். அகல்யாவின் அண்ணன் துரையாக வரும் கருணாகரன் வெறும் காமெடியனாக இல்லாமல் எதிர்மறை கதாபாத்திரத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார்.

மைம் கோபி, ஷா ரா உள்ளிட்ட ஏனைய நடிகர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி இந்த டார்க் காமெடி ஜானர் கதையை மெருகேற்றி இருக்கிறார்கள்.

“அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் அது மீள முடியாத குற்றத்தில் போய் முடியும்” என்கிற திருக்குறளை மையக் கருத்தாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ். மிகவும் எளிமையான  கதையை மிகவும் சுவாரசியமாக நகர்த்திச் சென்றிருக்கிறார். காலத்துக்கேற்ற அவரது வசனங்களும் கவனிக்க வைக்கின்றன.

பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோரின் ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

‘சொப்பன சுந்தரி’ – குடும்பத்துடன் கண்டு களிக்கத்தக்க ‘காமெடி சுந்தரி’!