சூது கவ்வும் 2 – விமர்சனம்

நடிப்பு: மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, கவி, கல்கி, அருள்தாஸ், யோக் ஜேபி, கராத்தே கார்த்தி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: எஸ்.ஜே.அர்ஜுன்

ஒளிப்பதிவு: கார்த்திக் கே தில்லை

படத்தொகுப்பு: இக்னேஷியஸ் அஸ்வின்

பாடலிசை: எட்வின் லூயிஸ் விஸ்வநாத்

பின்னணி இசை: ஹரி எஸ்.ஆர்

தயாரிப்பு: திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் & தங்கம் சினிமாஸ்

தயாரிப்பாளர்: சி.வி.குமார் & எஸ்.தங்கராஜ்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில், 2013ஆம் ஆண்டு – அதாவது 11 ஆண்டுகளுக்கு முன் – வெளியான திரைப்படம் ‘சூது கவ்வும் 1’ . இது திரைக்கதை, இசை, நடிப்பு என எல்லா தளங்களிலும் மாபெரும் வெற்றி பெற்ற கல்ட் திரைப்படம். அந்த படத்தில் நடித்த அனைவருமே இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக ஜொலிக்கிறார்கள். அப்படத்தின் தொடர்ச்சி என்பதால், மிர்ச்சி சிவா நடிப்பில், எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ திரைத்துறையினர், விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இந்த ‘சூது கவ்வும் 2’ பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஆளுங்கட்சி நிறுவனரான கண்ணபிரானுக்கு (வாகை சந்திரசேகர்) திடீரென நினைவு திரும்புகிறது. ஊழல்வாதியான சத்யசீலன் (ராதாரவி) முதல்வராக இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைகிறார். தனது விசுவாசியும் நேர்மையானவருமான ஞானோதயத்தின் (எம்.எஸ்.பாஸ்கர்) மகன் நிதியமைச்சர் அருமை பிரகாசம் (கருணாகரன்), ஊழலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். முதலமைச்சர் சத்யசீலனுக்கு எதிராக கட்சி ஆரம்பிக்கிறார் கண்ணபிரான். ஆனால், ‘கேம் ஆப்’ மூலமாக மக்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை அள்ளலாம் என்கிறார் அமைச்சர் அருமை பிரகாசம். அதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்குகிறார்.

இந்நிலையில், ஆட்களைக் கடத்தி பிழைப்பு நடத்தும் நாயகன் குருநாத் (மிர்ச்சி சிவா), தனது கற்பனையுலக காதலி அம்முவின் (ஹரிஷா ஜஸ்டின்) மரணத்துக்கு நிதியமைச்சர் அருமை பிரகாசம் தான் காரணம் என்று கருதி, பழிவாங்க அவரை கடத்துகிறார்.

இதற்கிடையே, குருநாத்தைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் போலீஸ் அதிகாரி பிரம்மா (யோக் ஜேபி).

இவர்களுக்குள் நடக்கும் பிளாக் ஹியூமர் கலாட்டா தான் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும் 1’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ள இப்படத்தில், விஜய் சேதுபதி ஏற்ற அதே வேடத்தை – நாயகன் குருநாத் கதாபாத்திரத்தை – மிர்ச்சி சிவா தொடர்ந்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத வேடம் என்பதால் அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார். நிறுத்தி நிதானமாக கடத்தலுக்கான விதிகளை பேசுவது, கடத்தியவர்களை கண்ணியமாக நடத்துவது, காவல்துறையிடம் கண்ணியமாக நடந்துகொள்வது, பாம்புக்காக நடுங்குவது, இல்லாத காதலிக்காக உருகிப்போவது என தனது கதாபாத்திரத்தை ரசித்து செய்துள்ளார்.

நாயகி அம்முவாக வரும் ஹரிஷா ஜஸ்டின், கொஞ்சம் காமெடி மூலமும், நிறைய கவர்ச்சி மூலமும் தன் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார்.

படத்தின் இரண்டாவது நாயகன் என்று சொல்லும் அளவுக்கு கருணாகரனுக்கு நிதியமைச்சர் அருமை பிரகாசம் என்ற முக்கியமான ரோல். அதை அவரும் நன்றாக பயன்படுத்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

முதலமைச்சர் சத்யசீலனாக வரும் ராதாரவி, அரசியல் கட்சி தலைவர் கண்ணபிரானாக வரும் வாகை சந்திரசேகர் ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார்கள்.

ரவுடி டாக்டராக வரும் அருள்தாஸ், போலீஸ் அதிகாரி பிரம்மாவாக வரும் யோக் ஜேபி, ஞானோதயமாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், தேவநாயகமாக வரும் கராத்தே கார்த்தி, காலியாக வரும் கல்கி, அசால்ட்டாக வரும் கவி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

நகைச்சுவைக் கதையை சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் ரசிக்கும்படி சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.அர்ஜுன். அரசியல் நையாண்டியுடன் தொடங்கும் படத்தில், கற்பனை காதலி உட்பட முந்தைய படத்தின் சாயலிலேயே பல காட்சிகள் இருந்தாலும், பல இடங்களில் டார்க் காமெடி நன்றாகவே ஒர்க் ஆவுட் ஆகியிருக்கிறது. போதையில்லை என்றால் பாம்பு தெரிவது, பணம் வழங்குவதற்கு கேம்ஆப், வெள்ளை நிற சித்ரவதை அறை, கண்ணுக்குத் தெரியாத காதலிக்கு குண்டு பாய்ந்ததாக மருத்துவமனை செல்வது என பல ஐடியாக்கள் ரசிக்க வைக்கின்றன. கதைக்கும் திரைக்கதைக்கும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால், படம் ரசனையாக இருந்திருக்கும்.

இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத்தின் பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை, முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை காட்டிய விதம் என முழு படத்தையும் முதல் பாகத்தை மனதில் வைத்தே காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் அதிகம் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.

‘சூது கவ்வும் 2’ – காமெடியாக இருப்பதால் கண்டு களிக்கலாம்!