“விட்றாத ரஞ்சித்து… விட்றாத…!”
என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குமுன் நான் ‘கத்தி’ – ‘மெட்ராஸ்’ கதை சம்பந்தமாக எழுதிய பதிவு என் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். அது பலரை சென்றடைந்தபோது, சம்பந்தப்பட்ட படங்களில் ஒன்றான ‘மெட்ராஸ்’ பட இயக்குனர் பா.ரஞ்சித்தையும் சென்றடைந்தது. அந்த பதிவில் அவரே வந்து, தன்னை அணுகி விவரம் கேட்காமல் நான் பதிவிட்டதற்கு காரணம் கேட்டு, தன் தொலைபேசி எண்ணையும் பதிந்திருந்தார். மாலையில் பதிவிட்டுவிட்டு, அந்த பதிவை என் காலைப் பொழுதில் தான் பார்த்தேன்.
நான் அவரை தொலைபேசியில் அழைத்தேன். இந்த நிமிடம் வரை, அவரை அழைத்துப் பேசிய விஷயங்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
பா.ரஞ்சித்திடம் எனக்கு சட்டென ஈர்ப்பை உண்டாக்கிய முதல் விஷயம், அவருடைய பொறுமை. நான் எழுதிய பதிவின் தாக்கம் அறிந்து அது நேரடியாகவோ, மறைமுகமாகவோ சிறிதேனும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், என் மீது கோபம் கொள்ளாமல், என்னிடம் அதிர்ந்தோ மரியாதைக் குறைவாக பேசவோ, நடக்கவோ இல்லை. நான் இந்த தளத்தில் இருக்கும் லட்சக்கணக்கான கோடிக்கணக்கானவர்களில் ஒருவன். அவ்வளவு தான். என்னிடம் விளக்கமளிக்க அவசியம் அவருக்கும் இல்லை. ஆனால், அரை மணி நேரத்துக்கும் மேல் அந்த உரையாடல் நீடித்தது. இந்த உரையாடலில் யாரையும் தரம் தாழ்த்தியோ, மூர்க்கத்தனமான கோபத்தை வெளிப்படுத்தியோ அவர் பேசவே இல்லை. இது முதல் விஷயம்.
இரண்டாவது, அவருடைய பணிவு. இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் உரையாடலில் யாரையும் ஒருமையிலோ, நேரடியாக பெயர் சொல்லியோ ஒரு வார்த்தைகூட அவதூறாகவோ, பழிச்சொல்லாகவோ அவரது வாயிலிருந்து வரவில்லை.
இவ்வளவு நடந்தும் பா.ரஞ்சித்துக்கு கண்மூடித்தனமாக யாருடனும் விரோதம் பாராட்டும் குணம் இல்லை என்பது பெரும் ஆச்சர்யமாகவும், ஆறுதலாகவும் இருந்தது.
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்துக்கு (‘கபாலி’க்கு) பா.ரஞ்சித் இயக்குனர் என்ற செய்தி எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தவேயில்லை. இது பா.ரஞ்சித்தின் நல்ல குணாம்சங்களுக்கு தாமாக வந்து சேர்ந்த பரிசாகவே என் மனதுக்கு தோன்றியது. இதை சிலரிடம் வெளிப்படையாக சொல்லியும் இருக்கிறேன்.
இப்போது என்னளவில் முக்கியமான சில விஷயங்கள்.
பணிவும், பொறுமையும் எவ்வளவு நல்ல தனிமனித குணங்களோ, அது சினிமா போன்ற வெகுஜன ஊடகங்களில் – நான் அறிந்த வரையில் – சிலரின் வளர்ச்சிக்கு பெரிதாக உதவிக்கு வந்ததில்லை. சூப்பர் ஸ்டார் போன்ற ஒரு சிலருக்கு அந்த குணாம்சங்கள் உதவியிருந்தாலும், இதை ஆணித்தரமாக என்னால் பொதுவெளியில் கூற முடியும்.
பா.ரஞ்சித்தின் பேட்டிகளையும், அவரது சமீபத்திய படைப்பான ‘கபாலி’யையும் பார்த்ததில் என் அனுமானங்கள் இவை தான். இவை அனுமானங்கள் மட்டுமே. தனி ஒருவரின் குணாதிசயங்களை பொதுவெளியில் விவாதிப்பதற்காக இந்த பதிவை நான் எழுதவில்லை என கூறிக்கொண்டு தொடர்கிறேன்.
1.இவ்வளவு வியாபார பலம் உள்ள ஒரு பெரும் கலைஞனை இயக்கியுள்ளேன் என்ற சிறு மிடுக்கை கூட இன்னும் காட்டாமல் இருப்பது ஆச்சர்யமாக இல்லை, எனக்கு பெரும் அசவுகர்யமாக உள்ளது. தன் நிலை உயர்ந்துள்ளதை திமிராகக் காட்டத் தேவையில்லை. உடல் மொழியிலாவது காட்டியே தீர வேண்டும். காலாகாலமாக கூனிக்குறுகி வாழ்ந்த ஒரு கூட்டத்தில் இருந்து வந்த திறமையான ஒருவன், தன் நடத்தையிலும் பேச்சிலும் இதைச் செய்தால் தான் தனக்கு பின்னால் வரும் சக கூட்டத்தினர் திறமையை வெளிப்படுத்தினாலும், அதனுடன் மதிப்போடு வளர்ந்து உயர வழிகாட்டலாக அமையும்.
2.சினிமா மற்ற துறைகளைப் போல ஒரு வியாபாரமே. என்ன ஒரு சிறு வித்தியாசம் என்றால், இங்கு மக்களுக்கு நன்கு பரிச்சயமான பிரபலங்களுடன் தினசரி அலுவல்கள் நடக்கிறது. அவ்வளவுதான். இதில் தன் சமூக பின்புலத்தை மறைக்கவோ மறுக்கவோ வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அதையே எல்லா படைப்புகளிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அனுதினமும் வெளிக்காட்ட வேண்டிய அவசியமுமில்லை. அந்த பழக்கம் பிற்காலத்தில் ஒரு தரப்பு படைப்புகளையே இயக்க வல்லவன் என்ற முத்திரையை குத்திவிடுவதற்கு காரணமாகவும் அமையக்கூடும். சமரசம் செய்யச் சொல்லவில்லை, சமயோசிதமாக இருப்பது நல்லது என நினைக்கிறேன்.
பா.ரஞ்சித்தின் சமூக அக்கறை பாராட்டத்தக்கது. அதை வெளிப்படையாக பலரைப்போல சினிமா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு முழுமனதுடன் என்றும் ஆதரிக்க வேண்டிய கடமை இங்கு பலருக்கும் உள்ளது, என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். காரணம், அந்த பெரும் கூட்டத்திலிருந்து பல காலத்துக்கு பின் தலையெடுத்து பவனி வரும் அளவுக்கு திரைத்துறையில் வளர்ந்துள்ளது இன்றைய அளவில் பா.ரஞ்சித் மட்டுமே.3
3.நட்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சினிமா போன்றதொரு வியாபாரத்தில் யாரை எதற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது படம்-கதை-திரைக்கதையை பொறுத்ததே. நட்புக்காக செய்யப்படும் கதாபாத்திர சேர்ப்புகள் இடைச்செருகல்களாக அடையாளப்பட்டுவிடக் கூடாது. இதை நான் விமர்சனமாக எடுத்துரைக்கவில்லை. என் பார்வையில் ‘கபாலி’ படத்தின் கதாபாத்திரங்கள் பேசியவற்றை பெரும் வளர்ந்த நடிகர்கள் பேசியிருந்தால், அதன் தாக்கம் பன்மடங்காக பிரதிபலித்திருக்கும். இந்த விஷயத்தில் கவனமாக இருத்தல் நன்மை.
4.Attitude. சினிமா போன்ற வெகுஜன ஊடகத்தில் வியாபிக்க முக்கியமான தேவை இந்த attitude. இந்தியாவின் சினிமா சரித்திரத்தில் எத்தனை கோடி முதலீட்டையும் தாங்கி ஓடும் தோல்வியடையாத பந்தயக்குதிரையை இயக்கியவன் என்ற attitudeஐ பா.ரஞ்சித் சிறிதேனும் வெளிக்காட்ட ஆரம்பிக்க வேண்டும். ஒரு இயக்குனர் எதைச் செய்யச் சொன்னாலும் செய்வேன் என்று குறுக்கிடாமல், பிரதிநிதியை வைத்து கருத்தையும், வசனத்தையும், கதையையும் தன் வசதிக்கு திருத்தாத ரஜினியை வைத்து அழகான முதிர்ந்த வயது காதலையும், அப்பா-அம்மா-மகள் சென்ட்டிமென்டையும் தரத் தெரிந்த பா.ரஞ்சித்துக்கு ஏன் சில விஷயங்களை ஆணித்தரமாக சொல்ல தயக்கம் தெரிகிறது என்று ‘கபாலி’ படத்தை பார்த்த போது நினைக்கத் தோன்றியது. சிந்தனையில் முளைத்ததை திரையில் காண்பிக்க இயலாததற்கு இந்த attitude சரியான அளவில் இல்லாமை தான் காரணம் என்பது என் அனுமானம். உண்மை காரணங்கள் வேறாக இருக்கலாம்.
“என் பாட்டனும் முப்பாட்டனும் கூனிக்குறுகியிருந்தான். என் திறமையை நானே தாழ்த்தி கட்டுப்படுத்தி, நானும் அவர்களைப்போல இருக்க வேண்டிய அவசியமில்லை” என்பதை பட்டவர்தனமாக காண்பிக்க உதவுவதே இந்த attitude. எதிர்காலத்தில் இன்னும் பல முன்னணி நடிகர்களை இயக்கக்கூடும். அவர்கள், எனக்கு இப்படி இன்ட்ரோ சீன் தான் வேண்டும், இப்படித்தான் பாட்டும் சண்டைக்காட்சியும் வேண்டும் என நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்பந்திக்கக் கூடும். அப்போது கைகொடுக்கும் இந்த attitude. இன்று வரையில் வெளிக்காட்டாத சிறு மிடுக்கை இனியாவது வெளிக்காட்ட வேண்டும் என்பது அத்தியாவசியமாகக் கூடும்.
இவை ஒருவருக்கு, ஒரு துறையினருக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் பல துறையினருக்கும் பொருந்தும் விஷயங்கள் என நினைக்கிறேன்.
எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும் போது என் நினைவுக்கு வருவது, எம்மான் இசைஞானி இளையராஜா தான். மேலே கூறிய எல்லாவற்றையும் பா.ரஞ்சித் போன்ற ஒரு கலைஞனுக்கு கற்றுக் கொடுக்க தேர்ந்த துரோணர், இசைஞானியே!
40+ வருட இசைஞானியின் சரித்திரத்தை புரட்டினால் போதும். பா.ரஞ்சித் போன்றவர்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தர திரைத்துறையில் அந்த ஒரு பல்கலைக்கழகமே போதுமானதாகும் என நினைக்கிறேன்.
நாளைக்காக, அம்பேத்கர்.
ஆனால் இன்றைக்காக, இப்போதைக்காக, இசைஞானி இளையராஜா!
“போற்றிப் பாடடி பொண்ணே” என்றாலும்,
“அந்த வானத்தைப்போல மனம் படைத்த” என்றாலும்,
“எஜமான் காலடி மண்ணெடுத்து” என்றாலும்,
“மரிமரி நின்னே”, “மஹாகணபதிம்” என்றாலும்,
ஊரின் எக்குலம் பெருமைகொள்ளும் பாடலானாலும், அது இசைஞானி திரைக்காக மீட்டியளித்தது தான்!
அப்படி மறையாப் புகழுடன் எதிர்காலத்தில் வளர்ந்து வியாபித்திருக்க மனமார வாழ்த்துகிறேன்.
இன்னமும் தெளிவா, நேரடியா சொல்லனும்னா, “விட்றாத ரஞ்சித்து… விட்றாத!”
பிகு: இதை எப்போதும் எழுதியிருக்கலாம். ‘கபாலி’ வெளியாகும் முன்னரேகூட எழுதியிருக்கலாம். இப்போது எழுதுவது பொறுத்தமான சமயம் என நினைத்ததால் எழுதியுள்ளேன். ஒருவனின் ஆதங்கத்தை, ஆதிக்கத்தால் எதிர்ப்பது. சரியான அணுகுமுறையாகாது. இங்கு ஒருவனின் சமூகப்பின்புலத்தை வைத்து மட்டுமே விமர்சிப்பதைப் போல் கீழ்த்தரமான செயல் எதுவும் இருக்க முடியாது. நாம் மேற்கத்தியர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்களில், இதுவும் ஒன்று. இனியாவது ஒருவனின் படைப்பை அவன் பின்புலத்தை வைத்து ஏளனம் பேசுவதை நிறுத்தினால் மிக நல்லது.
-கார்த்திக் ரங்கராஜன்