‘ஆகம்’ இயக்குனர் பார்வைக்கு: இந்தியா வல்லரசாக மேலும் சில ஆலோசனைகள்!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/03/0a1r-1.jpg)
இந்திய தேசிய ஆதிக்கவாதிகளும், பார்ப்பன மதவெறியர்களும் இந்தியாவை உலக வல்லரசாக ஆக்க வேண்டும் என்ற பயங்கர திகில் கனவுடன் ராப்பகலாக அரும்பாடுபட்டு வருகிறார்கள். தங்கள் கனவை நனவாக்குவதற்காக இந்த ஆதிக்க சக்திகள் இந்தியாவை கொண்டுபோய் உலக வல்லரசுகளுக்கு அடகு வைத்திருக்கிறார்கள். “தாராளமாய் வந்து கொள்ளையடிச்சிட்டுப் போ. நாங்க எதுவும் கேக்க மாட்டோம்” என்று அன்னிய மூலதனத்துக்கு இந்திய இயற்கை மற்றும் மனித வளங்களைத் திறந்து விட்டிருக்கிறார்கள். அம்பானி, அதானி வகையறாக்களை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். ஏழை, எளியவர்களை எலும்புகள் நொறுங்க ஏறி மிதித்திருக்கிறார்கள். இதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு ‘தேச விரோதிகள்’ என பட்டமளித்து கௌரவிக்கிறார்கள். கோடி கோடியாய் ஊழல் பணம் சுருட்டுகிறார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளை அன்னிய வங்கிகளில் போட்டு பதுக்கி வைக்கிறார்கள். இந்து அல்லாதாரை கொன்று குவிக்கிறார்கள். அவர்களது வழிபாட்டுத் தலங்களை தகர்க்கிறார்கள். கேடுகெட்ட சாதிய முறையை கடக்க முயன்றால் ஆணவக்கொலைகள் செய்கிறார்கள். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக குப்பைத் தொட்டியில் கிடக்கும் ஆணுறைகளை தினம் தினம் எண்ணிப் பார்க்கிறார்கள். இந்தியாவை வல்லரசாக ஆக்குவதற்கு இவை போதாதென்று, இப்போது இதையே கருவாக வைத்து ரசிகர்களை சாகடிக்கிற திரைப்படங்களும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி எடுக்கப்பட்ட ஒரு படம் தான் ‘ஆகம்’.
இந்தியாவை வல்லரசாக்க ‘ஆகம்’ இயக்குனருக்கு மேலும் சில ஆலோசனைகள் வழங்குவது நல்லது என்று நினைத்தோம். அதற்காக கே.எஸ்.சுரேஷ்குமாரின் பதிவை அந்த இயக்குனரின் பார்வைக்கு சம்ர்ப்பிக்கிறோம்…
# # #
இந்தியா வல்லரசாக மேலும் சில ஆலோசனைகள் வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.
முகேஷ் அம்பானி, ஆர்சிலர் மிட்டல், அசிம் ப்ரேம்ஜி, குமார் பிர்லா, சுனில் மிட்டல் போன்ற ஒரு வேளை பாதாம் கீருக்கே கஷ்டப்படும் நலிந்த தொழிலதிபர்கள் பேரில் ஒரு பொது சேமிப்புக்கணக்கு உருவாக்க வேண்டும். அதில் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு அருகில் சம்பாதிக்கும் இந்திய செல்வந்தர்கள் அனைவரும் மாதம் மாதம் ஆயிரமோ, இரண்டாயிரமோ, அவரவர் வசதிக்குத் தகுந்து அந்த வங்கிக்கணக்கில் வரவு வைத்து, அந்த நலிந்த தொழிலதிபர்களை மீட்டெடுக்க உதவ வேண்டும்.
அன்றாட கூலிவேலை செய்து ஐநூறு, ஆயிரம் சம்பாதித்து தன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியிருக்கும் கோடீஸ்வரர்கள், தங்கள் செல்வமகள் திருமணத்திற்கு நகை வாங்கும்போது, அப்படியே பாரத மாதாவுக்கும் நாலு சவரன் சேர்த்து வாங்கவேண்டும்.
குடிசைகளில் வசித்தாலும் ஒரு வேளை உணவுக்குக்கூட கஷ்டப்படாமல் எப்படியாவது கூழோ, கஞ்சியோ குடிக்கும் பெருமக்கள், தமது தட்டிலிருந்து கைப்பிடி கஞ்சியை சேர்த்துவைத்து அன்னாரது அமைச்சரைவயில் நமக்காக தொண்டாற்றும் அமைச்சர்களுக்குக் கொடுத்து அவர்களின் பட்டினி போக்கவேண்டும்.
ஒரு செண்ட்டோ, அரை செண்ட்டோ சென்னைக்கு மிக அருகிலோ, வாரணாசிக்கு மிக அருகிலோ இடம் வாங்கிப்போட்டு சொந்த வீடு கனவில் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு தனித்தீவில் நூறு ஏக்கரோ, இருநூறு ஏக்கரோ வாங்கிப்போட தங்களால் இயன்ற அளவு உதவ வேண்டும். ஏனெனில், இங்கிருந்து கடன் பெற்று திரும்ப கட்டமுடியாமல் கால் வயிற்று பீருக்கே கஷ்டப்படும் தொழிலதிபர்கள் அந்த தீவுகளுக்குச் சென்று தங்கி மன நிம்மதி அடைய வேண்டாமா?
நீங்கள் நாத்திகவாதியாக இருந்தாலும் சரி, சத்குரு, பாபா ராம் தேவ் நடத்தும் பள்ளிகள் மற்றும் ஆஸ்ரமங்களுக்கு உங்களால் இயன்ற அளவு கார், பஸ் போன்ற பொருளாகவோ, பணமாகவோ கொடுத்து உதவலாம்.
தங்கள் இருசக்கர வாகனத்தில் எரிபொருள் நிரப்பும் பெருமான்களே, பெட்ரோலியப் பொருட்களுக்கு அரசு மானியம் தருகிறதோ, இல்லையோ, நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கால் லிட்டரை அரசுக்கே மானியமாக தரலாம்.
அப்புறம் பண்டிகை, தீபாவளிக்கு புத்தாடை எடுக்கும்போது, ஷெர்வானி ஒன்றும் எடுத்து, அதை பாராளுமன்றத்தில் (எந்த நாட்டு பாராளுமன்றம் எனக் கேட்கக் கூடாது) உரையாற்றும் நமது பிரதமருக்கு அனுப்ப மறக்காதீர்கள்.
இதையெல்லாம் செய்துமுடித்து ஒருகட்டத்தில் எதுவுமே செய்ய முடியாது போகும் நிலை வரும்போது, ஒன்று செத்துப்போய்விடுங்கள்; அல்லது நாட்டைவிட்டே ஓடிவிடுங்கள்.
பாரத் மாதாகி ஜே!
– கே.எஸ்.சுரேஷ்குமார்