‘சொல்வதெல்லாம் உண்மை’யால் ஒருவர் தற்கொலை: லட்சுமி ராமகிருஷ்ணன் கைதாகிறார்?

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் நடத்தும் சர்ச்சைக்குரிய ‘சொல்லுவதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதால் லாரி உரிமையாளர் ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுப்பாளராக இருந்து நடத்தும் ‘சொல்லுவதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சி  தினமும் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில்,  குடும்பப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரை எதிரெதிரே  உட்கார வைத்து லட்சுமி ராமகிருஷ்ணன் கட்டைப்பஞ்சாயத்து செய்வார்.

“குடும்பப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அமலா பால், பிரியதர்ஷன் போன்ற பெரும்புள்ளிகளை அழைத்து இவர்கள் பஞ்சாயத்து பண்ணுவதில்லை. விவரம் தெரியாத அப்பாவி ஏழைகளை ஏமாற்றி அழைத்து வந்து, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்டு, பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்குள் அடி-தடி சண்டையை மூட்டி பரபரப்பு ஏற்படுத்தி, தங்களது நிகழ்ச்சியை பிரபலப்படுத்தி, விளம்பர வருவாயை பெருக்கி, கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்” என்ற புகார் ஜீ தமிழ் தொலைக்காட்சி மீதும், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீதும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீதும் ஏற்கெனவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் (வயது 60) என்ற லாரி உரிமையாளர்,  இந்நிகழ்ச்சிக்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு, பங்கேற்க வைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

0a1m

இது குறித்து நாகப்பன் குடும்பத்தினர் கூறுகையில், “நாகப்பன் இரண்டு லாரிகள் சொந்தமாக  இயக்கிவந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை இழந்த தனது மைத்துனியுடன்  வாழ்ந்துவந்தார்.

இந்நிலையில்  சொத்து பிரச்சனை காரணமாக அவரது மைத்துனி ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நாடியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட நாகப்பனிடம், ‘நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம்’ என்று பொய் வாக்குறுதி கொடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்திருக்கிறார்கள்.

ஆனால் நிகழ்ச்சியில், தந்தை நிலையில் இருக்கும் நாகப்பன் தனது மகள்களிடம் தவறாக நடக்க முயன்றார் என்று குற்றம் சாட்டியதோடு, அதை உலகறிய  ஒளிபரப்பியதால் மனமுடைந்த நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார்” என்றார்கள்.

நாகப்பனின் மகள் ஆதி, மகன் மணிகண்டன் ஆகியோர் கூறுகையில், “எங்கள் தந்தை தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் லட்சுமி ராமகிருஷ்ணனும், ‘சொல்லுவதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும்தான். நிகழ்ச்சி தொகுப்பாளரே நீதிபதி போல் தீர்ப்பு கூறியதால் மனமுடைந்து எங்கள் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.  எங்கள் தந்தையை கொன்றது லட்சுமி ராமகிருஷ்ணன் தான்” என்று கதறினார்கள்.

“குடும்ப பிரச்சனை இருப்பவர்கள் அதற்கு தீர்வு காண நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். மாறாக, அவர்களுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்வது குற்றம்” எனறு சட்டம் இருக்கும் நிலையில், அந்த சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.