தங்க நகைகளுக்கு இன்று முதல் 6 இலக்க ஹால்மார்க் எண் கட்டாயம்: பிஐஎஸ் அறிவிப்பு
தங்க நகைகளுக்கு 6 இலக்க எண் கொண்ட ஹால்மார்க் எண் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய தர நிர்ணயக் கழக (பிஐஎஸ்) அதிகாரிகள் கூறியதாவது:
தங்கத்துக்கு கடந்த 2000-ம் ஆண்டிலும், வெள்ளிக்கு 2005-ம் ஆண்டிலும் ஹால்மார்க் முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி (இன்று) முதல் ஹால்மார்க் தனித்துவ குறியீடு எண் (HUID – Hallmark Unique Identification number) பெற்ற நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையமான பிஐஎஸ் அறிவித்துள்ளது.
பிஐஎஸ் அங்கீகாரம் பெற்ற மையங்களில் ஒவ்வொரு நகைகளுக்கும் நகைக் கடை உரிமையாளர்கள் ஹால்மார்க் முத்திரையைப் பதிக்க வேண்டும்.
அந்த அடிப்படையில், தற்போது இந்தியாவில் 288 மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 13,341 கடைகளில் ஹால்மார்க் நடைமுறைக்கு வருகிறது.
இதில் 2 கிராமுக்கு குறைவான எடை கொண்ட நகைகளுக்கு, இந்த நடைமுறை கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கும் குறைவாக விற்பனை செய்யும் கடைகளுக்கும் இது கட்டாயம் இல்லை என இந்திய தர நிர்ணய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், இதை நடைமுறைப்படுத்தாமல் விதிமீறலில் ஈடுபடும் நகைக் கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் அல்லது நகையின் விலையில் 5 மடங்கு அபராதம் அல்லது கடையின் உரிமையாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ஹால்மார்க் தனித்துவ குறியீடு எண் பெறும் நடைமுறையின் மூலம் நகையின் தரம், விற்பனை தொடர்பான விவரங்களை நுகர்வோர் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக ஒவ்வொரு நகைக் கடைக்கும் ஓர் எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், BISCARE APP-ல் 6 இலக்க எண்ணைப் பதிவிட்டு நகையின் தரத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.