சிவப்பு – விமர்சனம்
கொலையாளியாக நீதிமன்றத்தில் நின்றிருக்கும் ராஜ்கிரண், கேமராவை நேரடியாகப் பார்த்து, “நம்மள நம்பி வந்தவங்களுக்கு (ஈழத்தமிழர்களுக்கு) ஒண்ணு உதவி செய்யணும். இல்லேனா, கைவிட்ரணும். அவங்கள வச்சு அரசியல் பண்ணக் கூடாது. அது ரொம்ப கேவலம்” என்று சிலரை செருப்பால் அடிக்கிற மாதிரி சொல்லி முடிக்க, படம் முடிவடைகிறது. ‘சிவப்பு’ திரைப்படம் அழுத்தம் திருத்தமாய் சொல்ல வந்த கருத்து இதுதான்.
கல்யாண பட்டுப்புடவை வாங்குவதற்காக நாயகன் துணிக்கடைக்கு வருகிறான். அவனுக்கு சிவப்பு நிற பட்டுப்புடவை பிடித்திருக்கிறது. உடனே நாயகிக்கு போன் பண்ணி, “சிவப்பு கலர் புடவை நல்லாருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு. வாங்கட்டுமா?” என்று கேட்கிறான். “ஐயோ, சிவப்பு கலரா?” என்று அலறும் நாயகி, “எனக்கு சிவப்பு கலர் வேணாம். நான் எங்க அப்பாவை கடைசியா பாத்தது சிவப்பு கலரா தான். என் உறவுக்காரர்கள் அத்தனை பேரையும் நான் கடைசியா பாத்தது சிவப்பு கலரா தான். எனக்கு சிவப்பு வேணாம்” என்றவாறு கண் கலங்கி விம்முகிறாள். பாவம்… அவள் ஈழத்தமிழ் பெண். அவளைப் பொறுத்தவரை சிவப்பு என்பது நிறமல்ல; அது ஈழத்தமிழினத்தின் ரத்தம். அதே பொருளில்தான் இப்படத்துக்கு ‘சிவப்பு’ என பொருத்தமாக பெயரிட்டிருக்கிறார்கள்.
சிங்கள இனவெறி அரசுக்கும், அதன் காட்டுமிராண்டி ராணுவத்துக்கும் பயந்து, உயிரை கையில் பிடித்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த ஈழத்தமிழ் அகதிகள், இங்கும் சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருவதை கதைக்கருவாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் (செல்வா). இவர் கட்டிடம் கட்டும் (பில்டிங் கன்ஸ்ட்ரக்சன்) தொழிலும் செய்துவருகிறார். இவரது கட்டிடம் கட்டும் தொழிலை பொறுப்பாக கவனித்து வருபவர் கோனார் (ராஜ்கிரண்). இவரது முழு பொறுப்பின்கீழ் உயர்தோங்கிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
ஒருநாள். கட்டுமான பொருட்களை ஏற்றிவரும் லாரிக்குள், ஆண்களும் பெண்களுமாக 80 பேர் அச்சத்துடன் பதுங்கி இருப்பதை கண்டுபிடிக்கிறார் கோனார். துயரம் தோய்ந்த முகங்களுடன் வாடி வதங்கி காட்சியளிக்கும் அவர்கள் யார் என்று விசாரிக்கையில், அவர்கள் ஈழத்தில் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து உயிர் பிழைப்பதற்காக தமிழ்நாட்டுக்கு தஞ்சம் வந்த அகதிகள்; இங்காவது நிம்மதியாக இருக்கலாம் என்று பார்த்தால் இங்கும் முகாமுக்குள் அடைத்து வைத்து, வறுத்தெடுக்கும் கொடுமைகள்; எனவே ஆஸ்திரேலியாவுக்கு போய்விடுவோம் என்று முகாமைவிட்டு தப்பித்து ஓடிவந்தவர்கள். ஆனால் திட்டமிட்டபடி அவர்கள் ஆஸ்திரேலியா செல்ல முடியாத சூழல்; தமிழ்நாட்டு போலீஸ் தங்களை வலைவீசி தேடிக்கொண்டிருப்பதால், எங்கே போவது, என்ன செய்வது தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் என்ற விவரம் தெரிய வருகிறது.
அவர்கள் நிலை கண்டு மனமிரங்கும் கோனார், அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முனவருகிறார். “இது பாராளுமன்ற எலக்சன் டைம். கெடுபிடி அதிகமா இருக்கும். எலக்சன் முடிஞ்ச பிறகு உங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப நானே ஏற்பாடு செய்றேன். அதுவரைக்கும் கட்டிட வேலைகள் நடக்கும் இந்த இடத்தில் தங்கி இருங்க. அதுக்குள்ள நாலு காசு சேத்துக்கணும் நினைச்சா நீங்களும் இங்கே கட்டிட வேலை பார்க்கலாம். உங்க இஷ்டம்” என்கிறார். இதை ஏற்றுக்கொள்ளும் ஈழத்தமிழ் அகதிகள் கட்டிடத் தொழிலாளிகள் ஆகிறார்கள்.
இதற்கிடையில், கோனாரின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமான பாண்டியன் (நவீன் சந்திரா) என்ற கட்டிடத் தொழிலாளிக்கும், பார்வதி (ரூபா மஞ்சரி) என்ற தமிழீழப் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. இவர்களது காதலை தெரிந்துகொள்ளும் என்ஜினீயர், இதை பயன்படுத்தி, பாண்டியனுக்கு ஆசை வார்த்தை காட்டி, போலி சிமிண்டை கட்டிட வேலைக்கு பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்ய முயல்வதோடு, பெண்பித்தனான அவன் பார்வதியிடமும் வாலாட்ட எத்தனிக்கிறான். இதில் ஏற்பட்ட அடிதடியில் பாண்டியனிடம் தோற்றுப்போகும் என்ஜினீயர், ஈழத்தமிழ் அகதிகள் இங்கே இருக்கிறார்கள் என்று அதிகாரிகளுக்கு போட்டுக்கொடுத்து விடுகிறான்.
போலீஸ் வந்து அகதிகள் 80 பேரையும் கைது செய்து, காவலில் அடைத்து வைக்கிறது. அங்கு வரும் பாண்டியன், தன் காதலி பார்வதியை அழைத்துக்கொண்டு தப்பிச் செல்கிறான். இவர்களை போலீஸ் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வருகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன். தானே திருமணம் செய்து வைப்பதாகவும் வாக்குறுதி அளிக்கிறார். அதை நம்பி அவருடன் போகிறது காதல் ஜோடி. இவர்களது நம்பிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் காப்பாற்றினாரா? நம்பிக்கை துரோகம் செய்தாரா? என்பது மீதிக்கதை.
ஈழத்தமிழ் அகதிகளை மையமாக வைத்து இதற்கு முன்பு வந்த பல படங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது; போலித்தனம் இல்லாதது; மெய்யாகவே தமிழினத்தின் மேல் அக்கறை கொண்டது.
ராஜ்கிரண், நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி, செல்வா உல்ளிட்ட அத்தனை நடிப்புக் கலைஞர்களும் மிகுந்த பொறுப்புணர்வுடன் அந்தந்த கதாபாத்திரமாக வாழ்ந்து நம் இதயத்தில் இடம் பிடிக்கிறார்கள். இயக்குனர் சத்யதேவ், ஒளிப்பதிவாளர் மது அம்பாட், இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் உள்ளிட்ட அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு தவம் போல் இதில் உழைத்திருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவேந்தலாக இப்படம் உருவாக காரணமான அனைவருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
‘சிவப்பு’க்கு கொடுப்போம் சிவப்பு கம்பள வரவேற்பு!