சிவனும் பெண்ணியமும்

நேற்று ஜக்கியின் சிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசுகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு சிவனின் ‘அர்த்தநாரீஸ்வரர்’ கான்செப்ட்தான் இன்றைய பாலின சமத்துவத்தின் அடிப்படை என்று சொல்லி இருக்கிறார்.

ஆண் பாதி, பெண் பாதி எனும் சிந்தனாவாதம் பண்டைய சமூகங்கள் பலவற்றில் இருக்கின்றன. ஆதி கடவுள் இரண்டாகப் பிரிந்தார். ஒன்று ஆண். இன்னொன்று பெண். அவர்கள் இருவரும் கூடிக் கலவி குழந்தைகள் தோன்றின என்று உபநிடதங்கள் கூறுகின்றன. இதே போன்ற சிந்தனாவாதம் பண்டைய கிரேக்க சமூகத்திலும் ஏறக்குறைய இதே கால கட்டத்தில் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. கிரேக்க மரபில் ஹெர்மஃப்ரோடிடஸ் (Hermaphroditus), அனடோலிய மரபில் அக்டிஸ்டிஸ் என்றெல்லாம் பல்வேறு ஆண் பாதி, பெண் பாதி தத்துவவாதங்கள் இருக்கின்றன. இதெல்லாம் பண்டைய இந்தோ-ஐரோப்பிய மதங்களின் ஆதார சிந்தனைகளில் ஒன்றுதான். வேதிய மதமும் இந்தோ ஐரோப்பிய மரபுகளில் ஒன்று என்பதால் அந்த சித்தாந்தங்கள் இதிலும் காணப்படுவதில் வியப்பில்லை.

ஆனால் இந்த சித்தாந்தங்கள் சமத்துவத்தை குறிக்க பயன்பட்டதே இல்லை. பிரபஞ்ச உருவாக்கத்தை விளக்கப் பயன்பட்டன, அவ்வளவுதான். கடவுள் மனிதனை உருவாக்கினார் எனில் மனிதர்களில் எப்படி இரண்டு பாலினம் இருக்க முடியும் எனும் கேள்விக்கு அவர்கள் எளிய விடை ஒன்றை கண்டுபிடித்தனர். சிம்பிள் – மனிதனை பாதியாக பிரித்து ஆண், பெண்ணாக பாதி பாதியாக உருவாக்கினார்! முடிந்தது கதை. இதையே வேறு ஒரு சமூகம் வேறு மாதிரி யோசித்து, கடவுள் தனது பிம்பத்தை ஒட்டி ஆதாமை உருவாக்கினார், அவனது விலா எலும்பில் இருந்து ஏவாளை உருவாக்கினார் என்று எழுதியது. போலவே இன்னொரு சமூகம் யோசித்து இந்த ஆதாம் கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணி களிமண்ணில் இருந்து ஆதாம் வந்தான் என்று மாற்றியது.

இதெல்லாம் பண்டைய பழங்குடிகள் தங்களின் எளிய அறிவுக்கு எட்டிய அளவில் யோசித்து வைத்த உருவாக்கக் கதைகள், அவ்வளவுதான். அவற்றை ரசிக்கலாம். அழகிய இலக்கியங்களாக கொண்டாடலாம்.

அதைத் தாண்டி அதற்கு நவீன பூச்சு கொடுக்க முயற்சிப்பதெல்லாம் ஓவர். பெண் தெய்வ வழிபாட்டு மரபுகள், ஆண்-பாதி பெண்-பாதி உருவகங்கள் போன்றவை பெண் விடுதலைக்கான ஆதாரங்கள் அல்ல. பெண் சமத்துவம் குறித்து எந்தப் பண்டைய சமூகமும், மதமும் யோசித்ததில்லை. பெண்களை மட்டம் தட்டி, கேவலப்படுத்தி, இழிவுபடுத்தி எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான பக்கங்களை பண்டைய இந்தியப் புனித நூல்களில் இருந்து எடுத்துக்காட்ட முடியும். சதி, மழலை மணம், கைம்பெண் கொடுமை போல டஜன் கணக்கான சித்ரவதைகளை சுட்டிக் காட்ட முடியும். சமத்துவ சிந்தனையுடன் பெண்கள் அணுகப்பட்ட வரலாறு இந்தியாவுக்குக் கிடையாது. சொல்லப் போனால் 18ம் நூற்றாண்டு வரை இந்திய சமூகங்களில் பெண்கள் நடத்தப்பட்டது போல அவலமாக உலகில் வேறெந்த சமூகங்களிலும் அவர்கள் நடத்தப்படவில்லை எனலாம்.

பெண்ணியம், ஆண்-பெண் சமத்துவம் குறித்த கருத்தியல்கள் அனைத்துமே நவீன சிந்தனாவாதங்களின் உருவாக்கங்கள். 19ம் நூற்றாண்டில் உருப்பெற்று தொடர் விவாதங்கள், போராட்டங்கள், கொஞ்சம் கொஞ்சமாக பெற்ற உரிமைகள் என்று வளர்ந்த ஒரு இயக்கம். இன்று வரை கூட ஒப்பீட்டளவில் இங்கே பெரிய முன்னேற்றங்கள் வந்து விட்டதாக சொல்லி விட முடியாது. இன்றும் பெண் சமத்துவம் பேசுபவர்களை அதீத எளக்காரத்துடன் பார்ப்பதுதான் இந்தியாவின் கலாச்சாரம்.

சும்மா ஏதோ ஆண் பெண் இணைந்த சிலை இருக்கிறது என்பதற்காக அதை பெண்ணியத்துடன் தொடர்பு படுத்தி பெருமையாக பேசுவதெல்லாம் போங்காட்டம். ரிக் வேதத்தில் ரிலேட்டிவிட்டி தியரி இருக்கிறது என்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

-ஸ்ரீதர் சுப்ரமணியம்