எப்படி இருக்கிறது சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்பட டிரெய்லர்?
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக்க் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி இப்படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
‘அமரன்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.
மறைந்த மேஜர் முகுந்தின் உண்மையான வீடியோ காட்சியிலிருந்து டிரெய்லர் தொடங்குகிறது. “கடலுக்கும், ஆகாசத்துக்கும் உள்ள தூரம் எனக்கும் அவனுக்கும்” என சாய் பல்லவியின் பிரிவின் வார்த்தைகள் கவனிக்க வைக்கின்றன.
சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது குழந்தை பிறப்பது, அவர் ராணுவத்தில் சேருவது, அவரின் உடல்வாகு, மெனக்கெடல் என பலவும் டிரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி, குண்டுவெடிப்பு, தீவிரவாதிகளின் முழக்கம் என மறுபக்க காட்சிகளுடன் விறுவிறுப்பாக நகர்கிறது டிரெய்லர்.
ஓரிடத்தில் இந்திய ராணுவத்தினர் ‘பஜ்ரங் பலிக்கே ஜெய’ என முழக்கமிடுகின்றனர். இதற்கான நோக்கம் புரியவில்லை.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கும் எனத் தெரிகிறது. காதல், பிரிவு, வலி, ராணுவம், சண்டை, மரணம், குண்டு வெடிப்பு என மொத்த டிரெய்லரும் சிவகார்த்திகேயனை மையப்படுத்தியிருக்கிறது.
இறுதியில் “இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்” என சிவகார்த்திகேயன் சொல்வதுடன் ட்ரெய்லர் முடிகிறது.