அமரன் – விமர்சனம்

நடிப்பு: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, கீதா கைலாசம், சுகன்யா சங்கர், நவ்யா சுஜ்ஜி, ஷியாமபிரசாத், ஷியாமமோகன், பால் டி.பேபி, ராகுல் போஸ், அபினவ் ராஜ், ஜான் கைப்பள்ளில், புவன் அரோரா, லல்லு, ஸ்ரீகுமார், உமைர் இபின் லத்தீஃப், அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ வெங்கடேஷ், ரோஹன் சூர்யா கனுமா ரெட்டி, ஷைருஷ் ஜூட்ஷி, ரோஹ்மான் ஷால், விகாஸ் பங்கர் மற்றும்பலர்

இயக்கம்: ராஜ்குமார் பெரியசாமி

ஒளிப்பதிவு: சிஎச்.சாய்

படத்தொகுப்பு: ஆர்.கலைவாணன்

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் & சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இண்டியா

வெளியீடு: ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

பத்திரிகை தொடர்பு: டைமண்ட் பாபு & சதீஷ்குமார்

‘அமரன்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘IMMORTAL’ என்றும், தமிழில் ‘அழிவில்லாதவன்’, ‘என்றென்றும் வாழ்பவன்’ என்றும் பொருள். இறந்தும் இறவாப் புகழடைந்த மாமனிதர்களைக் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துவர்.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி, தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியன் மாவட்டத்தில், இந்திய ராணுவத்தின் 44-வது ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவுக்கும் காஷ்மீர் தீவிரவாதக் குழு ஒன்றுக்கும் இடையே நடந்த பயங்கரச் சண்டையில், குண்டடிபட்ட சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற இளைஞர், தன் உயிர் பிரிவதையும் பொருட்படுத்தாமல் அந்த தீவிரவாதக் குழுவை வெற்றிகரமாக முற்றிலுமாக அழித்துவிட்டு வீரமரணம் அடைந்தார். இறந்தும் இறவாப் புகழடைந்த அவருடைய உணர்ச்சிகரமான வாழ்க்கைக் கதையைச் சொல்லும் திரைப்படத்துக்கு ‘அமரன்’ என பெயர் சூட்டியிருப்பது பொருத்தமான ஒன்று.

மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களையும், ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் இணைந்து எழுதிய ’இண்டியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்: ட்ரு ஸ்டோரிஸ் ஆஃப் மாடர்ன் மிலிட்டரி ஹீரோஸ்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் அடிப்படையாகக் கொண்டு, சுவாரஸ்யத்துக்காக மிகையற்ற கற்பனைச் சம்பவங்கள் சிலவற்றை புனைந்து இணைத்து, இந்த ’அமரன்’ திரைப்படத்தை உருவாக்குகிறார்கள் என்ற தகவலும், அதனைத் தொடர்ந்து இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார், மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி பரபரப்பைப் பற்ற வைத்தன. அடுத்தடுத்து வெளியான இதன் பிரமாதமான டீஸர், சிங்கிள்ஸ், டிரைலர் ஆகியவையும், படக்குழுவினர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பறந்து பறந்து மேற்கொண்ட புரொமோஷன் பணிகளும் சேர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை திரைத்துறையினர், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எகிறச் செய்தன. இம்மாபெரும் எதிர்பார்ப்பை, தீபாவளியை முன்னிட்டு உலகளவில் சுமார் 900 திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘அமரன்’ பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

…யுத்தக்களத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனை கௌரவிக்க இந்திய அரசு அவருக்கு உயரிய அசோக சக்ரா விருது அறிவித்திருக்கிறது. அவ்விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் (சாய் பல்லவி) பார்வையிலும், மனக்குரலிலும் கதை விரிய ஆரம்பிக்கிறது…

சென்னையை அடுத்த தாம்பரத்தில் வசித்து வருபவர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வரதராஜன். இவரது மனைவி கீதா வரதராஜன் (கீதா கைலாசம்). இவர்களுக்கு நித்யா (சுகன்யா சங்கர்), ஸ்வேதா (நவ்யா சுஜ்ஜி) என்ற இரண்டு மகள்களும், முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) என்ற மகனும் இருக்கிறார்கள். ராணுவ வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பை சிறுவயதில் பார்த்தது முதல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கனவை வளர்த்தபடியே முகுந்த் வழக்கமான படிப்பைத் தொடர்ந்து வருகிறார். ஆனால் மகன் ராணுவத்தில் சேருவதில் அவருடைய அம்மா கீதா வரதராஜனுக்கு விருப்பம் இல்லை.

முகுந்த் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் படிக்கும்போது, தனது ஜுனியர் மாணவியான இந்து ரெபேக்கா வர்கீஸை (சாய் பல்லவி) சந்திக்கிறார். புதுவையில் நடக்கும் ‘ரேம்ப் வாக்’ போட்டி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கும் இந்து ரெபேக்கா வர்கீஸுக்கு முகுந்த் பயிற்சி கொடுக்கிறார்.

இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மலையாளி. அங்கு அவரது அப்பா ஜார்ஜ் வர்கீஸ் (ஷியாமபிரசாத்) மருத்துவராகப் பணியாற்றுகிறார். தன் மகளை ’பட்டாளத்தான்’ எவனுக்கும் கல்யாணம் செய்து கொடுப்பதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் அவர். இந்துவுக்கு தீபு (ஷியாமமோகன்), ஆண்ட்ரூஸ் (பால் டி.பேபி) என்ற இரண்டு சகோதரர்களும் உண்டு.

இந்துவுக்கும், முகுந்துக்கும் இடையே கல்லூரி வளாகத்துக்குள் ஏற்பட்ட பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து காதலாகி, முகுந்தின் வீட்டுக்கு இந்து சகஜமாக வந்துபோகும் அளவுக்கு நெருக்கமாகிறது. இவர்களது காதலை ஆரம்பத்தில் ஏற்க மறுத்த முகுந்தின் அம்மா கீதா வரதராஜன், “இவ கிறிஸ்டியன்; போதாததுக்கு மலையாளி வேற! இவ வேணாம்” என்று முகுந்திடமும், “உன்கிட்ட அவன் சொல்லாத ரகசியத்தை உனக்கு சொல்றேன். அவன் மிலிட்டரியிலே சேரப் போறானாம். அது குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வருமா? அதனால, அவன் உனக்கு வேணாம்” என்று இந்துவிடமும் சொல்லி இருபுறமும் கட்டையைப் போட முயற்சித்து, முடியாமல் போகவே, அதன்பின் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார். அதுபோல் பிடிவாதமாக இருந்த இந்துவின் அப்பாவிடம் முகுந்த் உருக்கமாகவும் உறுதியாகவும் பேசி அவரது சம்மதத்தையும் பெற்றுவிட, இரு வீட்டார் நல்லாசிகளுடன் காதலர்கள் கரம் பற்றி, ’அர்ஷியா முகுந்த்’ என்ற பெண் குழந்தைக்குப் பெற்றோரும் ஆகிறார்கள்.

இதனிடையே, இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்போடு, அதற்கான முன்தயாரிப்பில் முழுமூச்சோடு ஈடுபடும் முகுந்த், அம்முயற்சியில் வெற்றி பெற்று முதலில் லெப்டினன்ட்டாக ராணுவப் பணியில் சேருகிறார். அதன்பின் கேப்டனாக பதவி உயர்வு பெறுகிறார். அதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் தீவிவாதத்தை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவின் மேஜராக பொறுப்பேற்கிறார். அப்பிரிவில் உயரதிகாரியாக இருக்கும் கர்னல் அமித்சிங் தபாஸ் (ராகுல் போஸ்), அவருடைய சவாலான ராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதக் கிளர்ச்சிக்கும், கொடூர தாக்குதல்களுக்கும் காரணமாக இருக்கும் முக்கிய தீவிரவாதத் தலைவரான அல்தாஃப் பாபாவை (ஷைருஷ் ஜூட்ஷி) முகுந்த் தீர்த்துக்கட்டுகிறார். அல்தாஃப் பாபா வகித்த பொறுப்புக்கு அடுத்து வரும் அவரது தம்பி ஆசிஃப் வானி (ரோஹ்மான் ஷால்), ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இந்திய ராணுவத்தினரை ஒட்டுமொத்தமாய் வீழ்த்த சதித்திட்டம் தீட்டுகிறார். இவரது திட்டம் வெற்றி பெற்றதா? மேஜர் முகுந்த் வரதராஜன் வீரமரணம் அடைந்தது எப்படி? அதனால் அவரது மனைவி, குழந்தை நிலை என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு நெஞ்சம் கனக்க அழுத்தமாகவும், எமோஷனலாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது ‘அமரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதை நாயகன் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். வழக்கமாக கேலி – கிண்டல் செய்து ஆங்காங்கே காமெடி பண்ணும் நாயகனாக வரும் சிவகார்த்திகேயன், இதில் முற்றிலும் வேறு முகம், வேறு உடல் மொழியோடு சேட்டை மற்றும் துடுக்குத்தனம் இல்லாத புதிய சிவகார்த்திகேயனாக,  மிகப் பொருத்தமாக இராணுவ மேஜர் பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். உடல் எடையைக் கூட்டி கடுமையான உழைப்பைத் தந்திருக்கிறார். அவருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு புதிய பாய்ச்சல் என்று சொல்லலாம். இதற்கு முன்பும் அவர் சில சீரியஸ் கதாபாத்திரங்களை பரிசோதனை முயற்சியாக செய்திருந்தாலும், இதில் அவரின் நடிப்பில் வெளிப்படும் முதிர்ச்சி குறிப்பிடத்தக்கது. உடல் ரீதியாகவும் நடிப்பிலும் அவர் காட்டியிருக்கும் புதிய பரிணாமம் வியப்பைத் தருகிறது. வாழ்த்துகள் சிவா..!

நாயகனை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த நாயகி கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு. முகுந்தின் மனைவி ’இந்து ரெபேக்கா வர்கீஸ்’ என்றால் இனி சாய் பல்லவியின் முகம்தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வெகு சிறப்பான நடிப்பு. மனுஷி உலுக்கி எடுத்துவிட்டார். காதல், பாசம், உறுதி, உருக்கம், சோகம் எல்லாம் பொத்தானை அழுத்தியது போல மாறி மாறி முகத்தில் ஏந்தி கலக்கியிருக்கிறார். அவர் தன் காதலைத் தெரிவிக்கும் காட்சி, ஒருபுறம் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு நடந்துகொண்டிருக்க, மறுபுறம் அந்த சத்தத்தைக் கேட்டபடி அவர் கதறும் காட்சி, கணவன் இறந்த செய்தி அறிந்ததும் அடக்கி, விம்மி, அடக்கி அழும் காட்சி…என்று பல காட்சிகளிலும் மயிர்க்கூச்செறிய வைத்துவிட்டார். கடைசி காட்சிகளில் அவரைப் பார்த்து கண் கலங்காதவர்கள் மனிதப்பிறவிகளே அல்ல! இந்தப் படத்தில் அச்சு அசலான இந்து ரெபேக்கா வர்கீஸாக வாழ்ந்து காட்டியதற்காக சாய் பல்லவிக்கு உலகம் முழுவதும் நிறைய விருதுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. வாங்கிக் குவியுங்கள் சாய் பல்லவி…!

முகுந்தின் அம்மா கீதா வரதராஜனாக வரும் கீதா கைலாசம், முகுந்தின் சகோதரி நித்யாவாக வரும் சுகன்யா சங்கர், மற்றொரு சகோதரி ஸ்வேதாவாக வரும் நவ்யா சுஜ்ஜி, முகுந்தின் காதல் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸின் அப்பா ஜார்ஜ் வர்கீஸாக வரும் ஷியாமபிரசாத், இந்துவின் சகோதரர் தீபுவாக வரும் ஷியாமமோகன், மற்றொரு சகோதரர் ஆண்ட்ரூஸாக வரும் பால் டி.பேபி, கர்னல் அமித்சிங் தபாஸாக வரும் ராகுல் போஸ், மேஜர் ஸ்ரீநாத்தாக வரும் அபினவ் ராஜ், மேஜர் மிதுன் மோகனாக வரும் ஜான் கைப்பள்ளில், சிப்பாய் விக்ரம் சிங்காக வரும் புவன் அரோரா, சிப்பாய் ரவி சங்கராக வரும் லல்லு, சிப்பாய் மைக்கேலாக வரும் ஸ்ரீகுமார், சிப்பாய் வஹீத் அகமதுவாக வரும் உமைர் இபின் லத்தீஃப், சிப்பாய் ராஜேஷ் சுக்லாவாக வரும் அஜே நாக ராமன், சிப்பாய் சைபுதீனாக வரும் மீர் சல்மான், சிப்பாய் வெங்கண்ணாவாக வரும் கௌரவ வெங்கடேஷ், சிப்பாய் நரசிம்மராவாக வரும் ரோஹன் சூர்யா கனுமா ரெட்டி, சிப்பாய் ஜோதி சர்மாவாக வரும் விகாஸ் பங்கர், தீவிரவாத தலைவர் அல்தாஃப் பாபாவாக வரும் ஷைருஷ் ஜூட்ஷி, அவருடைய தம்பி ஆரிஃப் வானியாக வரும் ரோஹ்மான் ஷால் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து, அதற்குத் தேவையான நடிப்பைக் குறைவின்றி கொடுத்திருக்கிறார்கள்.

ராணுவப் பின்னணியில், சிலிர்க்க வைக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை சேர்க்கும் படங்கள் பல மொழிகளிலும் வந்திருந்தாலும், ’அமரன்’ லேட்டஸ்ட்டாக அந்த சிறப்பு வரிசையில் சேர்கிறது.

உண்மையான நாயகனான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுடன் சுவாரஸ்யத்திற்காக சில கற்பனைக் காட்சிகள் சேர்த்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

காஷ்மீர் அரசியல் பற்றி அலசி ஆராயும் படம் இதுவல்ல.  ஒரு ராணுவ வீரரின் கடமைகள், செயல்கள், போராட்டங்கள், கண்முன்னே சந்திக்கும் நண்பர்களின் இழப்புகள், குடும்பத்தினரின் உணர்வுகள், காதல், பிரிவு, குழந்தை மீதான பாசம் – இவற்றைப் பற்றியெல்லாம் யதார்த்தம் மீறாமல் சொல்லும் படம். என்றாலும், ”காஷ்மீர் பிரச்சினை எப்பத் தான் தீரும்?” என்று கேள்வி கேட்கப்படும்போது, நாயகன் வீராவேசமாக தொண்டை நரம்பு துடிக்க பக்கம் பக்கமாக பாகிஸ்தானுக்கு சவால் விட்டுப் பேசாமல், யதார்த்தமாக, ”பேச வேண்டியவங்க பேசினாத் தீரும்; நாம பேசி என்ன ஆகப் போகுது?” என்று கையறுநிலையில் சொல்வது அருமையிலும் அருமை.

இந்த முத்திரைப் படத்தை அழகாய், அற்புதமாய், உணர்வுப்பூர்வமாய் செதுக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமர் பெரியசாமிக்கு நமது பாராட்டுகள்…!

படத்தின் இன்னொரு நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார். பாடல்கள், பின்னணி இசை என எல்லா பக்கமும் புகுந்து விளையாடியுள்ளார். சிஎச்.சாய் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் ரம்மியமாகவும், ஆக்‌ஷன் காட்சிகளில் தீவிரத்தையும் உணர்த்துகிறது. கலைவாணனின் படத்தொகுப்பு சிறப்பு.

கடைசி பதினைந்து நிமிடங்கள் தொண்டை அடைக்க, கண் கலங்கப் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்கள், படம் முடிந்ததும் மொத்தமாய் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு இதைவிட வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை…!

இதுவரை நீங்கள் ’அமரன்’ பார்க்கவில்லையா? அவசியம் குடும்பத்துடன் உடனே சென்று பார்த்து ரசியுங்கள்…!