சீதாராம் யெச்சூரி மறைவு: தலைவர்கள் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று மறைந்தார். அவருடைய மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: 

”மாணவர் தலைவர், தேசிய தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என தனித்துவமான செல்வாக்குமிக்க பொறுப்புகளில் இருந்தவர் சீதாராம் யெச்சூரி. தனது உறுதியான சித்தாந்தங்களால் கட்சிக்கும் அப்பாற்பட்ட நண்பர்களை பெற்றிருந்தார்.

பிரதமர் மோடி: 

மிகவும் திறமையான நாடாளுமன்ற உறுப்பினராக முத்திரை பதித்தவர் சீதாராம் யெச்சூரி. இடதுசாரிகளில் முக்கிய தலைவராக விளங்கியவர்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: 

இந்தியாவின் சித்தாந்தங்களை பாதுகாப்பதில் அக்கறையுடன் செயல்பட்டார் யெச்சூரி. அவரது நீண்டகால நட்பை இழந்து தனிமரமாகி உள்ளேன்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்:

 இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையான சீதாராம் யெச்சூரியின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.இளம் வயதில் இருந்தே நீதிக்காக போராடிய பயமறியா தலைவரான அவர், மாணவர் தலைவராக இருந்தபோது, அவசர நிலைக்கு எதிராக அவர் நின்றார். தொழிலாளர் வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் அவரது முற்போக்கு சிந்தனைகள் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும். அவர் உடனான எனது நினைவுகளும், பேச்சுகளும் எப்போதும் போற்றுதலுக்குரியவை. இந்த துயரமான தருணத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூ.):

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெமாக்கரசியின் ஆசிரியராக செயலாற்றியுள்ளார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்துத்துவாவை எதிர்த்த போராட்டத்தில் கூடுதலான பங்களிப்பு செய்தவர். இந்து ராஷ்டிரம் என்பது என்ன?, மதவெறியும், மதச்சார்பின்மையும் ஆகிய புத்தகங்கள் முக்கியமான பங்களிப்புகளாகும். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர். மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார். ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய பங்களிப்பு செய்தவர்.

தனது பல்வேறு பங்களிப்புகள் மூலம் பலதுறையினரோடும் உறவுகளை வளர்த்துக் கொண்டவர். தமிழகத்தில் பிறந்தவர் என்பதோடு தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்துவதில் பல்வேறு தருணங்களில் உதவி செய்தவர். தமிழகத்தில் நடைபெற்ற பல தேர்தல் பிரச்சாரங்களிலும் கலந்து கொண்டு பங்காற்றியவர். கட்சியின் மாநில மாநாடுகள், பல்வேறு அரசியல் சிறப்பு மாநாடுகளில் பங்கு கொண்டு உரையாற்றியவர். தோழர் சீதாராம் யெச்சூரியின் இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும், மதச்சார்பற்ற இயக்கங்களுக்கும் மாபெரும் பேரிழப்பாகும். இந்தியா ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இந்த இழப்பு இந்தியாவின் ஜனநாயக பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துக்கு பேரிழப்பாகும்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக):

மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி மறைவு நாட்டுக்கும், தொழிலாளர் வர்க்கத்துக்கும் பேரிழப்பாகும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.):

2005-ம் ஆண்டில் மேற்கு வங்க சட்டப் பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக பணியாற்றியவர். இவரது மாநிலங்களவை உரை நவ தாராளமயக் கொள்கைகளின் சீரழிவையும், வகுப்புவாத சக்திகளால் ஏற்பட்டுள்ள பேராபத்து நிகழ்வுகளையும் நாட்டின் கவனத்துக்கு எடுத்துக் கூறியவர். தோழர்களுடனும், நண்பர்களுடனும் நெருங்கி பழகும் பண்பு கொண்டவர். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோவிட் 19 நோய்த்தொற்றில் மகனை பறி கொடுத்தவர்.

சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் இடதுசாரி சக்திகளும், கம்யூனிஸ்ட்களும் கடுமையான சவால்களையும் எதிர் கொண்டிருக்கும் நிகழ்காலத்தில், ஆழ்ந்த மார்க்சிய அறிவும், தத்துவத் தெளிவும், முனைப்பான செயலாற்றலும் ஒருசேரப் பெற்றுள்ள தோழர் சீதாராம் யெச்சூரியின் இழப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் அல்லாது, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். மாணவப் பருவத்தில் தொடங்கி, இறுதி மூச்சுவரை இடைவிடாது பணியாற்றிய தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

வைகோ (மதிமுக):

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, மிசா கொடுமைகள் அரங்கேற்றம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்து மாணவர் சக்தியைத் திரட்டிப் போராடினார். அதன் காரணமாக கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் சிறப்புடன் பணியாற்றியவர். இவரது அறிவார்ந்த ஆங்கிலக் கட்டுரைகளும், நூல்களும், தீக்கதிர் ஏட்டில் வெளிவரும், பொதுச்செயலாளர் மேசையிலிருந்து என்ற பகுதியில் வெளிவரும் கருத்துக்களும் இவரின் எழுத்தாற்றலுக்குச் சான்றாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் போராளித் தலைவராக பணியாற்றிய இவரின் மறைவு இடதுசாரிகளுக்கும், முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும் பேரிழப்பாகும்.

திருமாவளவன் (விசிக):

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாசிச தாக்குதலை எதிர்த்தவர்கள் எல்லாம் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நேரத்திலும் அச்சமின்றி மோடி அரசின் அடக்கு முறையைத் துணிச்சலாக எதிர்த்துப் பேசியவர். இண்டியா கூட்டணி உருவாகப் பாடுபட்டவர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சியில் ஒருங்கிணைத்த ‘வெல்லும் சனநாயகம் மாநாட்டில்’ பங்கேற்று இறுதிவரை இருந்து உரை நிகழ்த்தினார். அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களைப் பார்த்து மிகுந்த உத்வேகம் கொண்டார். லட்சக் கணக்கான இளைஞர்களை வகுப்புவாத அரசியலை எதிர்த்து இப்படித் திரட்டுவது மிகப் பெரிய சாதனை என எங்களைப் பாராட்டினார் . விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரு இடதுசாரிக் கட்சிதான். நாம் இணைந்து செயல்படுவோம் என்று எங்களை ஊக்கப்படுத்தினார்.

.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக):

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கட்சியை மிகச் சிறப்பாக நிர்வகித்தவர். அவரது மறைவு இந்திய அரசியலுக்கு மிகப் பெரிய இழப்பாகும்.

விஜய் (மிழக வெற்றிக் கழகம்):

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

# # #

மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் யெச்சூரியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக் காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர். வீர வணக்கம்செலுத்திய பிறகு யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.