மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இயற்கை எய்தினார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி நேற்று பிற்பகல் 3.05 மணிக்கு காலமானார்.
சீதாராம் யெச்சூரி கடந்த 1952 ஆகஸ்ட் 12-ம் தேதி அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் (தற்போது சென்னை) பிறந்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) மாணவராக இருந்து, இந்திய மாணவர் கூட்டமைப்பில் (எஸ்எஃப்ஐ) உறுப்பினராக சேர்ந்தார். 1984-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். 1992-ல்அக்கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான பொலிட்பீரோவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
2005 முதல் 2017 வரை 12 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றியவர். 2015-ல் நடந்த கட்சியின் 21-வது மாநாட்டில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இண்டியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தார். பொருளாதார நிபுணர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் யெச்சூரி.
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.