சீதா ராமம் – விமர்சனம்

நடிப்பு: துல்கர் சல்மா, மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், சுமந்த் மற்றும் பலர்

இயக்கம்: ஹனு ராகவபுடி

தயாரிப்பு: ’ஸ்வப்னா சினிமா’ சார்பில் அஸ்வினி தத்

வெளியீடு: வைஜெயந்தி மூவிஸ்

இசை: விஷால் சந்திரசேகர்

ஒளிப்பதிவு: பி எஸ் வினோத் & ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

மக்கள் தொடர்பு: யுவராஜ்

விஜய் சேதுபதி – திரிஷா நடித்த ‘96’ படத்துக்குப் பிறகு நம் இதயத்தை வருடி, பிசைந்து, என்னென்னவோ செய்யும் அற்புதமான காதல் காவியமாக திரையில் மலர்ந்திருக்கிறது ‘சீதா ராமம்’. படம் பார்த்து முடித்தவுடன், ’அடடா… இப்படியொரு அருமையான படம் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன’ என்று உடலும் உள்ளமும் சிலிர்க்க யோசிக்க வைப்பதே இப்படத்தின் மகத்தான வெற்றி.

0a1b

1985-ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் அஃப்ரினுக்கு (ராஷ்மிகா மந்தனா) அவரது தாத்தா –  பாகிஸ்தான் ராணுவத்தில் அதிகாரியாக இருந்த – தாரிக் ( சச்சின் கடேகர்) ஒரு முக்கியமான வேலை கொடுத்துவிட்டு இறந்துபோகிறார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ராம் என்பவர் (துல்கர் சல்மான்) ஹைதராபாத்தில் இருக்கும் சீதா மகாலட்சுமி என்பவருக்கு (மிருணாள் தாக்கூர்) எழுதிய கடிதத்தை, நேரில் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என்பது தான் அந்த வேலை. அந்த வேலையை அஃப்ரின் செய்து முடிக்காவிட்டால் தாத்தா தாரிக்கின் சொத்து பேத்தி அஃப்ரினுக்கு கிடைக்காது.

இதனால் அஃப்ரின் வேண்டா வெறுப்பாக சீதா மகாலட்சுமியைத் தேடி ஹைதராபாத் வருகிறார். குறிப்பிட்ட முகவரியில் சீதா மகாலட்சுமி என்ற பெயரில் யாரும் எப்போதும் இருந்ததில்லை என்பது தெரிய வருகிறது. சீதா மகாலட்சுமியை கண்டுபிடிக்க, முதலில் ராமை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அஃப்ரின், ராம் பற்றி தெரிந்த நபர்களைச் சந்தித்து தகவல் சேகரிக்கிறாள். அவர்கள் சொல்லும் ராம் – சீதா மகாலட்சுமி கதை 1964ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி நகருகிறது.

1964ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் காஷ்மீரில் நடக்க இருந்த மதக்கலவரத்தை, இந்திய ராணுவ வீரரான ராமும், அவரது குழுவினரும், புத்திசாலித்தனமாக தடுத்து நிறுத்துகிறார்கள். அதனால், இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் அவர்களை வானொலியில் பேட்டி எடுக்கிறார்கள். அப்போது அவர்கள் வானொலி மூலம் தங்களது குடும்பத்தாரிடம் பேச வாய்ப்பு தரப்படுகிறது. ஆனால் ராம், தனக்கு குடும்பம் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை; தான் ஒரு அனாதை என்று சொல்லுகிறார். இதை வானொலியில் கேட்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள், “உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்; நீங்கள் அனாதை இல்லை” என்று ராமுக்கு கடிதம் எழுதிக் குவிக்கிறார்கள்.

இக்கடிதங்களில், அனுப்புனர் முகவரி இல்லாமல், ”உங்கள் மனைவி சீதா மகாலட்சுமி” என்று குறிப்பிட்டு ஒரு கடிதம் இருக்கிறது. “என்னுடைய மனைவியா?’ என்று அதிர்ச்சியும், வியப்பும் கொள்ளும் ராம், அக்கடிதத்தைப் படிக்கிறார். அதில் உள்ள கவித்துவமான காதல் வரிகளில் மனம் பறி கொடுக்கிறார். ‘என்னை கல்யாணம் செய்துகொள்ளாமலேயே கணவனாக்கிக் கொண்ட அந்த சீதா மகாலட்சுமி யார்?’ என்று விடுமுறை எடுத்துக்கொண்டு தேடிக் கிளம்புகிறார் ராம்.

0a1cசீதா மகாலட்சுமியை ராம் எங்கே, எப்படி சந்தித்தார்? உண்மையில் சீதா மகாலட்சுமி யார்? அவருக்கும் ராமுக்கும் காதல் மலர்ந்ததா? ராம் எழுதிய கடிதத்தை இப்போது அஃப்ரின் சீதாலட்சுமியிடம் கொடுத்தாரா? அதில் என்ன எழுதப்பட்டிருந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு, உள்ளத்தை உருக்கும் காதல் கவிதையாய் சுவாரஸ்யமாய் விடையளிக்கிறது படத்தின் மீதிக்கதை.

இந்தியா – பாகிஸ்தான் – காஷ்மீர் பின்னணியில் ஒரு மலரினும் மெல்லிய இனிமையான காதல் கதையாக மலர்ந்திருக்கிறது இப்படம். போர்க்கள காட்சிகளில் கூட வன்முறையும் ரத்த சகதியும் இல்லாத காதல் காவியம். ராணுவப் பின்னணியில் நகரும் திரைக்கதையில் காதல், ஒரு நதியாக பிரவாகமெடுத்து ஓடுகிறது.

மெல்லிய நீரோடைபோல திரைக்கதை அழகிய காட்சிகளுடன் தழுவி தழுவிச் செல்கிறது. சிக்கலான புள்ளிகள் கொண்ட ஒரு கோலத்தை அழகாக போட்டிருக்கிறார்கள்.

ராமாக வரும் துல்கரும், சீதா மகாலெட்சுமியாக வரும் மிருணாள் தாக்கூரும் நிஜக் காதலர்களாகவே திரையில் வாழ்ந்திருக்கிறார்கள்.  இருவரும் காதலை, பிரிவை, துயரை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகளில் இளமையின் பூங்காற்று வீசுகிறது. படம் முடிந்த பிறகும் இருவரும் நம் இமைகளுக்குள் நின்று காதல் சடுகுடு ஆடுவது வியப்பான உண்மை

ஒளிப்பதிவு, லோகேஷன், காட்சிகளின் பழமைக்கேற்ற நிறம், காஸ்ட்யூம், கார்கள், ரயில்கள் என கதை நிகழும் சாலையில் நாமும் ஒரு கதாபாத்திரமாக நடப்பதுபோல இருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பாடல்கள் அருமை; பின்னணி இசை, கதையோடு கைபிடித்து இழுத்துச் செல்கிறது. மதன் கார்க்கியின் வசனம், படத்துக்கு பலம். வசனங்களில், காதல் கடிதங்களில் மதன் கார்க்கி எழுத்தில் காதல் ததும்பும் கவித்துவம். இயக்குநர் ஹனு ராகவுபுடியின் ரசனைக்கும், படைப்பாற்றலுக்கும் விருதுகள் காத்திருக்கின்றன.

’சீதா ராமம்’ – அபூர்வமாய் திரைக்கு வரும் அமரகாவியம்! மிஸ் பண்ணிடாதீங்க!!