சிறுவன் சாமுவேல் – விமர்சனம்
நடிப்பு: அஜிதன் தவசிமுத்து, கே.ஜி.விஷ்ணு, எஸ்.செல்லப்பன், எஸ்.பி.அபர்ணா, எம்.ஏ.மெர்சின், ஜே.ஜெனிஷ் மற்றும் பலர்
இயக்கம்: சாது பெர்லிங்டன்
ஒளிப்பதிவு: வி.சிவானந்த் காந்தி
இசை: எஸ்.சாம் எட்வின் மனோகர் & ஜே.ஸ்டான்லி ஜான்
தயாரிப்பு: ‘கண்ட்ரிசைடு ஃபிலிம்ஸ்
பத்திரிகை தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ்
தமிழில், சிறுவர்களை முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட சிறுவர்களுக்கான திரைப்படங்கள் வருவது அரிதிலும் அரிது. அத்தகைய அரிதிலும் அரிதான நிகழ்வாக, வணிகமசாலா பூச்சு ஏதுமின்றி, சிறுவர்களுக்கான தரமான திரைப்படமாக வெளிவந்திருக்கிறது, சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வாரிக் குவித்திருக்கும் ‘சிறுவன் சாமுவேல்’ திரைப்படம்.
சிறுவர்கள் சாமுவேலும், ராஜேஷும் பள்ளியிலும், விளையாட்டிலும் நெருக்கமான தோழர்களாக இருக்கிறார்கள். தங்களையொத்த நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் கொண்ட இவர்களுக்கு, கிரிக்கெட் மட்டை (கிரிக்கெட் பேட்) வாங்க வசதியில்லாததால் தென்னை மட்டை, பழைய மரக்கட்டை போன்றவற்றில் மட்டை செய்து விளையாடி வருகிறார்கள்.
ஒரு பணக்கார சிறுவன் நிஜ கிரிக்கெட் மட்டை கொண்டுவர, அதைப் பார்க்கும் சிறுவன் சாமுவேல் தானும் எப்படியாவது ஒரு நல்ல கிரிக்கெட் மட்டை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், குடும்பச் சூழல் காரணமாக அவனது பெற்றோரால் அவனுக்கு கிரிக்கெட் மட்டை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் கிரிக்கெட் மட்டை மீது தீராத ஆசையை வளர்த்துக் கொள்கிறான் சாமுவேல்.
கிரிக்கெட் வீரர்களின் உருவம் பொறித்த அட்டைகளை நூற்றுக்கணக்கில் சேகரித்துக் கொடுத்தால் சச்சின் டெண்டுல்கர் கையெழுத்துப் போட்ட கிரிக்கெட் மட்டை கிடைக்கும் என்று சாமுவேல் பயணம் செய்யும் பள்ளி வேன் டிரைவர் சொல்ல, அதற்காக அந்த அட்டைகளைத் தேடிப் பிடித்து சேகரிக்க ஆரம்பிக்கிறான் சாமுவேல்.
இந்நிலையில் அந்தப் பணக்கார சிறுவனின் வீடியோ கேம் திருடு போய்விட, திருட்டுப்பழி ராஜேஷ் மீது விழுகிறது. அவனை அடித்து உதைக்கும் அவனது தந்தை, அவனைப் பள்ளியில் இருந்து நிறுத்தி தன்னுடன் கூலி வேலைக்கு அழைத்துச் சென்று விடுகிறார். ஒருமுறை திருட்டுப் பட்டம் கட்டப்பட்டதால் அப்பாவி ராஜேஷ் தொடர்ந்து திருடனாகவே பார்க்கப்படுகிறான்.
கிரிக்கெட் வீரர்களின் உருவம் பொறித்த அட்டைகளை வைத்து சாமுவேலால் கிரிக்கெட் மட்டை வாங்க முடிந்ததா? ராஜேஷ் மீதான திருட்டுப்பழி நீங்கியதா? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘சிறுவன் சாமுவேல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
சாமுவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் அஜிதன் தவசிமுத்து, தனது கண்களினாலேயே உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்துகிறார். நல்லது எது, கெட்டது எது என்று அறியாத வயதில், சிறுவர்களுக்கு வரும் அனைத்து ஆசைகளையும், அவற்றை அடைவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளையும் தனது நடிப்பு மூலம் பார்வையாளர்களுக்கு திறமையாகக் கடத்துகிறார் அஜிதன் தவசிமுத்து. பாராட்டுகள்.
சாமுவேலின் தோழன் ராஜேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.ஜி.விஷ்ணு, அப்பாவியான முகத்தாலும், வித்தியாசமான பார்வையாலும், பார்வயாளர்களின் இதயத்தில் இடம் பிடித்துவிடுகிறார்., எந்தவித பயமும் இன்றி அனைத்து விதமான உணர்வுகளையும் அசால்டாக வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.
படத்தில் நடித்திருக்கும் ஏனைய சிறுவர்கள், பெற்றோர்கள் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் – நடிகைகள், டியூசன் டீச்சராக நடித்திருக்கும் பெண் என அனைவரும் புதுமுகங்கள் மட்டும் இன்றி மண்ணின் மனிதர்களாகவே இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
நடிப்புக் கலைஞர்கள் எல்லோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் என்பதை விட கேமராவுக்கு முன்னால் தத்தமது கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வதே பொருத்தமான பாராட்டாக இருக்கும்.
முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான படமாகவும், அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் எதார்த்தமான படைப்பாகவும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சாது பெர்லிங்டன்.
சிறுவர்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக இருந்தாலும், கதைக்களம் மற்றும் நடிகர் – நடிகைகள் என அனைத்திலும் இயல்புத் தன்மை மாறாமல் திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர், நாகர்கோவில் வட்டார தமிழை மிக நேர்த்தியாக கையாண்டிருப்பது படத்தின் ஹைலைட்.
ஒளிப்பதிவாளர் வி.சிவானந்த் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை அதன் எளிமையும், அசல் தன்மையும் மாறாமல் காட்சிப்படுத்தியிருப்பது கண்களுக்கு விருந்து.
எஸ்.சாம் எட்வின் மனோகர் மற்றும் ஜே..ஸ்டாண்ட்லி ஜான் ஆகியோரது இசை கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்ப பயணித்திருக்கிறது.
இப்படி முழுக்க முழுக்க பல சிறப்புகளைக் கொண்ட இந்த தரமான படம் ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ளபோதிலும், இன்னும் பல விருதுகளை வெல்வதோடு, ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது உறுதி.
‘சிறுவன் சாமுவேல்’ – சிறுவர்கள் மட்டும் அல்ல, பெரியவர்களும், விமர்சகர்களும் கூட கொண்டாடக் கூடிய அருமையான படம்!