சைரன் – விமர்சனம்

நடிப்பு: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, அழகம் பெருமாள், அஜய், துளசி, சாந்தினி தமிழரசன், யுவினா, அருவி மதன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: அந்தோணி பாக்யராஜ்

ஒளிப்பதிவு: செல்வகுமார்

படத்தொகுப்பு: ரூபன்

பாடலிசை:  ஜீ.வி.பிரகாஷ்குமார்

பின்னணி இசை: சாம் சிஎஸ்

தயாரிப்பு: ’ஹோம் மூவி மேக்கர்ஸ்’ சுஜாதா விஜய்குமார்

தமிழ்நாடு வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

வாகன நெரிசல் மிகுந்த சாலையில், ஏதோ ஒரு சிந்தனையுடன், டூவீலரில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் முதுகுக்குப் பின்னால் திடீரென சைரன் ஒலித்தால் என்ன செய்வீர்கள்? திடுக்கிடுவீர்கள். பதட்டமடைவீர்கள். பழைய சிந்தனையை மூட்டை கட்டி வைத்துவிட்டு, சைரன் ஒலிக்கும் வாகனத்தைத் திரும்பிப் பார்ப்பீர்கள். அது உயிருக்குப் போராடும் நோயாளியை ஏற்றிக்கொண்டு விரையும் ஆம்புலன்ஸாக இருக்கலாம். அல்லது தலை போகும் அவசரத்தில் காக்கிச் சட்டைகளைச் சுமந்துகொண்டு பறக்கும் போலீஸ் வாகனமாக இருக்கலாம். இவை இரண்டில் எதுவாக இருந்தாலும், அந்த சைரன் ஒலி உங்களை கடந்து செல்லும் வரை உங்கள் மனதில் அதிர்ச்சியும், பதட்டமும் குறையவே குறையாது.

அப்படித் தான் ‘சைரன்’ திரைப்படமும். சைரன் பொருத்திய ஆம்புலன்ஸை ஓட்டிய டிரைவர் ஒருவருக்கும், சைரன் பொருத்திய வாகனத்தில் பயணிக்கும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் இடையே நடக்கும் பரபரப்பான ஆடு-புலி ஆட்டத்தை மையமாகக் கொண்டு, கிரைம் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம், சைரன் ஒலி போல, பார்வையாளர்களை காட்சிக்குக் காட்சி பதட்டத்துடன், நகம் கடித்தபடி, சீட் நுனியில் உட்கார வைத்து விடுவதால் இப்படத்துக்கு ’சைரன்’ என்று பொருத்தமாகவே பெயர் வைத்திருக்கிறார்கள்.

காஞ்சி நகரத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

உயிர் காக்க அவசர உதவிக்கு அழைக்கப்படும் ஆம்புலன்ஸின் டிரைவராக பணியாற்றியவர் நாயகன் திலகவர்மன் (ஜெயம் ரவி). அவர் கைக்குழந்தைக்குத் தாயாக இருந்த  தன் காதல் மனைவி ஜென்னியை (அனுபமா பரமேஸ்வரன்) கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 14 ஆண்டுகளுக்குப்பின் – சிவகாஞ்சியில் உள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 9 மணிக்கு கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் – இரண்டு வார பரோலில் (விடுப்பில்) வெளியே வருகிறார். இந்த பரோல் காலத்தில் அவரை எந்நேரமும் உடனிருந்து கண்காணிக்கும் நிழல் காவலராக – Shadow Police ஆக – வேளாங்கண்ணி (யோகி பாபு) நியமிக்கப்படுகிறார்.

14 ஆண்டுகளுக்குப் பின் தன் வீட்டுக்கு வரும் திலகவர்மன், படுத்த படுக்கையாக இருக்கும் அப்பாவைப் பார்த்து மனம் விம்முகிறார். கண் கலங்கும் அம்மா (துளசி), தங்கை (சாந்தினி தமிழரசன்) உள்ளிட்ட சொந்த பந்தங்களைப் பார்த்து உருகுகிறார். கைக்குழந்தையாக விட்டுச்சென்ற தன் மகளை ஏக்கத்துடன் கண்களால் தேடுகிறார். காணவில்லை. தன் அம்மாவைக் கொன்ற அப்பா மீது கடுங்கோபமும், வெறுப்பும் கொண்டிருக்கும் அவரது 14 வயது மகள் மலர் (யுவினா), அவர் முகத்தைப் பார்க்கவே பிடிக்காமல், தன் அத்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இதனிடையே, சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக இருக்கும் நந்தினி (கீர்த்தி சுரேஷ்) தடாலடி பேர்வழி. இவரது போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த ‘லாக்கப் சாவு’க்கு இவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு, சஸ்பெண்டு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, இப்போது தான் மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார். இவரது உயரதிகாரியான டி.எஸ்.பி. நாகலிங்கம் (சமுத்திரக்கனி), இதைச் சொல்லிச் சொல்லி இவரை மட்டம் தட்டிக்கொண்டே இருக்கிறார். அவர் மீது கோபப்பட முடியாத நந்தினி, தினமும் கையெழுத்துப் போட வரும் திலகவர்மன் மீது கோபத்தைக் காட்டுகிறார்.

இந்நிலையில், ஒரு அரசியல் கட்சியின் தலைவரான மாணிக்கம் (அழகம் பெருமாள்), துணைத் தலைவரான அன்பழகன் (அஜய்), திலகவர்மனின் மகள் மலரை ஈவ் டீசிங் செய்த இளைஞன் விக்கி ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள்.

இக்கொலைகளைச் செய்தது திலகவர்மன் தான் என இன்ஸ்பெக்டர் நந்தினி (கீர்த்தி சுரேஷ்) உறுதியாக நம்புகிறார். ஆனால், நான் செய்யவே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சாதிக்கிறார் திலகவர்மன். அதை பொருட்படுத்தாத இன்ஸ்பெக்டர் நந்தினி, திலகவர்மனை கைது செய்து, நீதிபதியின் வீட்டுக்குக் கொண்டுபோய், நீதிபதி முன் நிறுத்துகிறார். ஆனால், இந்த கொலைகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தக்க ஆதாரங்களை சமர்ப்பித்து வாதாடும் திலகவர்மனை நீதிபதி விடுவித்து அனுப்பி விடுகிறார்.

எனில், உண்மையில் நடந்தது என்ன? கொலையாளி யார்? எதற்காக இக்கொலைகள் செய்யப்பட்டன? எப்படி செய்யப்பட்டன? இவற்றை இன்ஸ்பெக்டர் நந்தினி கண்டுபிடித்தாரா? இவற்றில் திலகவர்மனின் பங்கு தான் என்ன? அவரை வெறுத்த அவரது மகள் மனம் மாறி அப்பாவை ஏற்றுக்கொண்டாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது ‘சைரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1c

கதையின் நாயகன் திலகவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். கொஞ்சம் நரைத்த தாடி, மீசை, தலைமுடியுடன், இதுவரை எந்தப் படத்திலும் தோன்றாத நடுத்தர வயது கெட்டப்பில் வித்தியாசமாகத் தோன்றி வியக்க வைத்திருக்கிறார். அதிகம் பேசாமலும், அப்படி பேச நேர்ந்தால் மெதுவாக சன்னமான குரலில் பேசியும் அந்த கதாபாத்திரத்துக்கு நுட்பமாக உயிர் கொடுத்திருக்கிறார். இந்த குரலும், அந்த கெட்டப்பும் படத்துக்கு ஒருவித புதுத் தன்மையைக் கொடுத்து, பார்வையாளர்களிடம் ஆர்வத்தைத் தூண்டி விடுகிறது. நடுத்தர வயதுக்காரருக்கு உரிய உடல்மொழியையும், முக பாவனைகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தி, மிரட்டலாக நடித்து, அக்கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். குறிப்பாக, மகள் தன்னை உதாசீனம் செய்வது தெரிந்து வேதனைப்படுவது, மகளுக்குத் தெரியாமல் அவரை பாசத்துடன் பார்த்து மகிழ்வது போன்ற காட்சிகளில் உருக்கமாக நடித்து நம்மை கண் கலங்க வைக்கிறார்.  இதற்கு முற்றிலும் மாறாக, ஃபிளாஷ்பேக்கில், இளமையான தோற்றத்தில் வந்து, ஆம்புலன்ஸ் டிரைவராக சமூக சேவை செய்வது, காதல் வயப்படுவது, காதலியை மனைவியாய் கரம் பிடிப்பது, எதிரிகளை பந்தாடுவது என துடிப்பும் துள்ளலுமாய் நடித்து, வேறொரு கோணத்தில் அசத்தியிருக்கிறார். எதிர்காலத்தில், ஜெயம் ரவி திரும்பிப் பார்த்து மனநிறைவு கொள்ளும் படங்களில் ஒன்றாக ‘சைரன்’ நிச்சயம் இருக்கும் என்று உறுதியாக கூறலாம்.

கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினியாக வரும் கீர்த்தி சுரேஷ், தனது மென்மையான நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ விஜயசாந்தி போல கடுஞ்சொல் பேசி கம்பீரமாக நடிக்க முயன்று, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். நாயகனை சட்டையைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார். டி.எஸ்.பி மற்றும் நீதிபதியின் கிண்டல்களுக்கு ஆளாகி அவமானப்படும் காட்சிகளில் நம் அனுதாபத்தைப் பெறுகிறார்.

வாய் பேச இயலாத – காது கேளாத மாற்றுத் திறனாளி நர்ஸாக, நாயகனின் காதல் மனைவியாக ஜென்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும், நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சாதிவெறி பிடித்த டி.எஸ்.பி நாகலிங்கம் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் இவரா? என ஆரம்பத்தில் ஒரு நெருடல் இருந்தாலும், நேரம் ஆக ஆக நெருடல் மறைந்து எதிர்மறை கதாபாத்திரத்தில் அவரை ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம்.

பரோலில் வெளியே வந்த நாயகனின் ’நிழல் காவலர்’ வேளாங்கண்ணி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நாயகனுடன் சேர்ந்தே வருகிறார். சீரியஸாக செல்லும் படத்தினூடே நம்மை சிரிக்க வைத்து, இறுக்கத்தைத் தளர்த்தும் அரும் பணியை செவ்வனே செய்திருக்கிறார். அவரை இன்னும் கூட அதிகமாக பயன்படுத்தியிருக்கலாம்.

நாயகனின் டீன் ஏஜ் மகள் மலராக வரும் யுவினா, எதிர்பார்த்ததை விட சிறப்பாகவும் இயல்பாகவும் நடித்து, படத்தின் எமோஷனல் பக்கத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளார். பாராட்டுகள். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

நாயகனின் அம்மாவாக வரும் துளசி, தங்கையாக வரும் சாந்தினி தமிழரசன், அரசியல் கட்சித் தலைவர் மாணிக்கமாக வரும் அழகம் பெருமாள், துணைத் தலைவர் அன்பழகனாக வரும் அஜய், சப்-இன்ஸ்பெக்டராக வரும் அருவி மதன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் கிரைம் திரில்லர் ஜானரில் எழுதி இயக்கியிருக்கிறார். பழி வாங்கும் கதை தான் என்றாலும், கதாபாத்திரங்களை வித்தியாசமாக வடிவமைத்து, காட்சிகளில் புதுமையைப் புகுத்தி, அப்பா – மகள் பாசம், சிரிக்க வைக்கும் அளவான நகைச்சுவை ஆகியவற்றை சேர்த்து நேர்த்தியாக திரைக்கதை அமைத்து, ”நானே எமனைத் துரத்துறேன்; நீங்க ஏன் என்னைத் துரத்துறீங்க?”, “ஒரு நல்லவனை நல்லவனா நடிக்க வச்சிட்டீங்களே”, “சாதி இல்லனு சொல்றவன் என்ன சாதின்னு தேடாதீங்க” என்பன போன்ற கூர்மையான வசனங்கள் தீட்டி, அடுத்து என்ன நடக்கும் என பதட்டத்துடன் எதிர்பார்க்கும் வகையில் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக சமூகநீதியை உயர்த்திப் பிடிப்பது, மாற்றுத் திறனாளிகள் பக்கம் நின்று அவர்களை மேன்மைப்படுத்துவது, தரங்கெட்ட அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கயவாளித்தனத்தை தோலுரித்துக் காட்டுவது என கருத்தியல் ரீதியிலும் தரமான படைப்பாக இதை இயக்குநர் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ்குமாரின் பாடலிசை, சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை, ரூபனின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘சைரன்’ – குடும்ப செண்டிமெண்ட் கலந்த கிரைம் திரில்லர்! குடும்பத்திலுள்ள அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்! குடும்பத்தோடு பார்த்து மகிழுங்கள்!