“அகண்ட பாரதம்’ கொள்கையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் பங்கு அளப்பரியது:” சங்கர் மகாதேவன் புகழாரம்!

’அகண்ட பாரதம்’ கொள்கையை பாதுகாப்பதிலும், நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அளப்பரியது என்று பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் புகழ்ந்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருடாந்திர விஜயதசமி கொண்டாட்ட நிகழ்வு, மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று (அக்டோபர் 24ஆம் தேதி) நடைபெற்றது. இதில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சங்கர் மகாதேவன், “ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நான் தலை வணங்குகிறேன். நமது அகண்ட பாரதக் கொள்கையை பாதுகாப்பதிலும், நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அளப்பரியது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்த பிறகு, பலரும் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். அது எனது இதயத்தை தொட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்திப்பது ஒரு நிறைவான அனுபவம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என்னுடைய அதிர்ஷ்டம்” என தெரிவித்தார்.

பின்னர் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவாரின் நினைவிடத்தை பார்வையிட்ட சங்கர் மகாதேவன், “இன்று நான் பாரதீய குடிமகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். மக்கள் அனைவரும் தங்கள் துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.