சிங்கப்பூர் சலூன் – விமர்சனம்

நடிப்பு: ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், லால், மீனாட்சி சௌத்ரி, கிஷன் தாஸ்,  தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர்,  ஒய்.ஜி.மகேந்திரன், சின்னி ஜெயந்த் மற்றும் பலர்

இயக்கம்: கோகுல்

ஒளிப்பதிவு: எம்.சுகுமார்

படத்தொகுப்பு: செல்வா ஆர்.கே

பாடலிசை: விவேக்-மெர்வின்

பின்னணி இசை: ஜாவேத் ரியாஸ்

தயாரிப்பு: ’வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ டாக்டர் ஐசரி கே.கணேஷ்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

சகல மதத்தினரும் வேறுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக வாழும் ஒரு கிராமத்தில் பிறந்தவர் நாயகன் கதிரவன் (ஆர்ஜே பாலாஜி). அவரது வீட்டுக்கு அருகிலிருக்கும் சலூனில் சாச்சா என்பவர் (லால்) முடி திருத்தும் அழகை, திறமையைப் பார்த்து, அக்கலை மீது சிறுவயதிலேயே ஈர்ப்புக் கொள்கிறார். எதிர்காலத்தில் மிகப் பெரிய சிகை அலங்கார நிபுணராக விளங்க வேண்டும் என்ற இலட்சியத்தை மனதில் வளர்த்துக் கொள்கிறார்.

கதிரவனின் குடும்பத்தாரோ, “முடி வெட்டுவது ஒரு குறிப்பிட்ட குலத்துக்கு உரிய குலத்தொழில். அது நம் குடும்பத்துக்கு ஒத்து வராது” என்று தடை போடுகிறார்கள். அதனாலெல்லாம் தன் இலட்சியத்தை மாற்றிக்கொள்ளாத கதிரவன், பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். அங்கே அவருக்கு காதல் துளிர்க்கிறது. ஆனால் அவருக்கு இருக்கும் இலட்சியம் காரணமாக அந்த காதல் பிரேக்-அப் ஆகிவிடுகிறது.

இத்தனைக்குப் பிறகும், `முடி திருத்துவது வெறும் தொழில் அல்ல; அது ஒரு கலை’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையும், தீரா காதலும் கொண்ட கதிரவன், தனது லட்சியத்துக்கு எதிராக முட்டுக்கட்டையாக வரும் தடைகளைத் தகர்த்து தவிடுபொடியாக்கி, எப்படி வெற்றி வாகை சூடி, நினைத்ததைச் சாதிக்கிறார்? என்பது ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1d

நாயகன் கதிரவனாக ஆர்ஜே பாலாஜி நடித்திருக்கிறார். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களின் மனங்களை வென்றுவிடுவதில்  வல்லவர் என்பதை ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நிரூபித்தவர், இந்த படத்திலும் அந்த பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளார். கதிரவன் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நாயகனின் கஞ்சத்தனம் மிகுந்த மாமனாராக – நாயகியின் அப்பாவாக – வரும் சத்யராஜ், படத்தின் இரண்டாவது நாயகன் என்று சொல்லுளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது. முதல் பாதி முழுக்க அவர் செய்யும் நகைச்சுவை அலப்பறைகளுக்கு திரையரங்கம் அதிர்கிறது. அதிலும் இடைவெளிக்கு முந்தைய பத்து நிமிடங்கள் அவர் அடிக்கும் லூட்டி செம!

நாயகியாக வரும் மீனாக்ஷி சௌத்ரி, குறை சொல்ல முடியாத அளவுக்கு அளவாக நடித்திருக்கிறார். நாயகனின் பால்ய நண்பன் பஷீராக வரும்

கிஷன் தாஸ், கிராமத்தில் சலூன் கடை வைத்திருக்கும் சாச்சாவாக வரும் லால், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், மற்றும் ஜான் விஜய், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

சிறப்புத் தோற்றத்தில் வரும் அரவிந்த்சாமி, ஜீவா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் கோகுல், இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை எந்த இயக்குநரும் தொடாத சிகை அலங்கார கலையை மையக்கருவாக வைத்து, ’சிறுவயது கனவை நனவாக்கத் துடிக்கும் கிராமத்து இளைஞன்’ என்ற நாயகனை உருவாக்கி, ஆங்காங்கே காமெடியையும், சென்டிமெண்டையும் சரிவிகித அளவில்  சேர்த்து, சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, போரடிக்காமல் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். அதே நேரத்தில் தான் சொல்ல நினைத்த முற்போக்கான சமூகக் கருத்தை மிக எளிமையாகவும், வலிமையாகவும் அவர் ரசிகர்களுக்கு கடத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும், விவேக் – மெர்வினின் பாடலிசையும், ஜாவேத் ரியாஸின் பின்னணி இசையும், செல்வா ஆர்.கே. படத்தொகுப்பும், ஜெயச்சந்திரனின் கலை இயக்கமும் இயக்குநர் கோகுலுக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘சிங்கப்பூர் சலூன்’ – சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நல்ல படம். குடியரசு தின விடுமுறை நாட்களில் பார்த்து ரசிங்க…!