“மோடி பஜனை பாடுங்கோ! தேசபக்தியை காட்டுங்கோ!”

இந்தியாவின் பிரதமர் மோடியை குறை சொல்லலாமோ? தப்பு… மகா தப்பு. அவர் சாதாரண ஆள் இல்லை. ரொம்ப நுட்பமானவர். அவரை பாராட்ட எவ்வளவோ இருக்கு.

தெரியலைன்னா… படியுங்கோ!

1] ஒவ்வொருத்தர் கஷ்டமா பார்த்து சரிசெய்துகொண்டே வருகிறார். முதலில் அதானிக்கு ஆறாயிரம் கோடி கொடுத்தார்; அப்புறம் அம்பானிக்கு கொடுத்தார். மேலே இருக்குற நூறு பேரை முதலில் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடணும்னு இராப்பகலா திட்டம் போட்டு செயல்படுறார். இந்த “துல்லிய அக்கறை”யைப் புரியாமல் பேசலாமோ?

2] விவசாயி தற்கொலை, ஏடிஎம்மில் சாவு என தினசரி செய்தி வாசிப்போரே! இன்னும் எவ்வளவு பேர் சாகாமலிருக்கிறார்கள் என்கிற உண்மையை ஏன் பேசுவதில்லை? செத்தவர்களை நேரடியா மோடி சொர்க்கத்துக்கு அனுப்பி புண்ணியம் செய்திருக்கிறார் என்கிற நன்றிகூட இல்லாமல் கொடும்பாவி எரிப்பதா? மோடியின் “துல்லிய புண்ணிய திட்டம்” இது என்பதை உணர்வீராக! [இதில் நம் பன்னீரும் சசியும் கூட்டணி என்பது உபதகவல்]

3] எல்லோரும் படிச்சு உத்தியோகம் பார்க்க ஆசைப்பட்டால் யார் பீ அள்ளுவா? யார் மூட்டை தூக்குவா? யார் கஷ்டப்படுவா? நாடு நல்லா இருக்கணும்னா அவா அவா அவா அவா கடமையை சரியா செய்யணும்னு வெறுமே சொல்லாமல், கல்வியிலேயே மாற்றுகிறார் பாருங்க… அங்கதான் மோடி சாட்சாத் கிருஷ்ண பகவானா, “சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்”… “ நாலு வர்ணத்தையும் நானே படைத்தேன்” என்கிறார். குழந்தைத் தொழிலாளி முறையை நியாயப்படுத்தி சட்டம் போடுறார். அவரின் “துல்லிய பொறுப்புணர்ச்சி”யை குறை சொல்லலாமோ!

இப்படி நிறைய சாதனை இருக்கு! மோடி பஜனை பாடுங்கோ! தேசபக்தியை காட்டுங்கோ!

(Shared from SORNAKUMAR R)