“தனுஷ் எவ்வளவு உயரத்துக்கு போனால் எனக்கென்ன?”: சிம்பு காட்டம்!
இப்போதெல்லாம் நடிகர் சிம்புவின் இருப்பை, அவரது நடிப்பில் வெளியாகும் படங்களை வைத்து அறிய முடிவதில்லை. அவரது படங்களின் வேலைகள் இழுத்துக்கோ… பறிச்சுக்கோ… என கிடப்பதால், அவரின் சர்ச்சைக்குரிய பாடல்கள், பேட்டிகள், கருத்துகள் போன்றவற்றின் மூலமாகவே அவரது இருப்பை தெரிந்துகொள்ள முடிகிறது.
பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் சிம்பு. அதில், “ரஜினி, கமல் போல உங்களுக்கும் தனுஷுக்கும் தான் போட்டியாக இருக்கும். ஆனால், தனுஷின் வளர்ச்சி இப்போது எங்கேயோ போய்விட்டதே?” என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சிம்பு, “முன்பு கமல் சாரின் படங்களில் ரஜினி சார் ஓரமாக நின்று நடித்திருப்பார். ‘இப்படி ஆகிடிச்சே’ என்று ரஜினி சார் அன்று நினைத்திருந்தால், ‘கபாலி’ படத்தின் விளம்பரம் விமானத்தில் வரும் அளவுக்கு இன்று வளர்ந்திருக்க முடியுமா? பெரிய ஆள், சின்ன ஆள் என்பது மேட்டர் இல்லை. எப்படி இருந்தாலும், அவர்கள் ‘ரஜினி, கமல்’ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் மேட்டர்!
“மேலும், தனுஷ் எவ்வளவு பெரிய உயரத்துக்குப் போகிறார் என்பது எனக்கு தேவையே இல்லை. அவர் எவ்வளவு உயரத்துக்குப் போனால் எனக்கென்ன? நான் என் வேலையை சரியாக செய்கிறேனா என்பதுதான் எனக்கு முக்கியம். அதற்கு மட்டும்தான் நான் ஆசைப்படுகிறேன். அவர் என்னைவிட பெரிய ஆளானால், நல்ல விஷயம்தானே. அவரும் தமிழ் சினிமாவில் உள்ள ஒரு கதாநாயகன். அவர் நன்றாக வளர்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்றார் சிம்பு.
“தமிழ் சினிமாவின் தவறான சித்தரிப்புகளால் அசம்பாவித சம்பவங்கள் நிறைய நடப்பதாக குரல்கள் ஒலிக்கிறதே?” என கேட்கப்பட்டதற்கு, “கொலை நடப்பதை பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதால்தான் மேலும் மேலும் கொலை நடக்கிறது’ என்று கூறி, 10 ஆயிரம் பொதுமக்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமா? இந்த மாதிரிதான் சினிமா மீதான குற்றச்சாட்டும். சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அதில் நல்லதும் சொல்வோம், கெட்டதும் சொல்வோம். எல்லாவற்றிலுமே நல்லதும், கெட்டதும் கலந்துதான் இருக்கும். நாம் சரியானதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறை சொல்லவேண்டும் என்றால் எதில் வேண்டுமானாலும் சொல்லலாம்” என்று சிம்பு பதிலளித்துள்ளார்.