சிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம்
நாயகன் விஷ்ணு விஷால் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். சிபாரிசின் பேரில் அவருக்கு கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். பயந்தாங்கொள்ளியாக இருக்கும் அவர் எந்த வழக்கையும் பார்க்காமல், சின்னச் சின்ன எடுபிடி வேலைகளை மட்டும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.
இதற்கிடையே, நாயகன் விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான நாயகி ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் ரெஜினாவின் அப்பாவான மாரிமுத்து, விஷ்ணு விஷாலின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.
மறுபக்கம், சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவி, தன்னை என்கவுண்ட்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகிறார். எந்த வம்புதும்புவுக்கும் போகாத விஷ்ணு, விஷால் சாய் ரவி பெரிய தாதா என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார்.
இதையடுத்து சாய் ரவியின் ஆட்கள் சிறையை உடைத்து அவரை வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணு விஷாலை கொல்லாமல், இந்த ஊரைவிட்டு போக மாட்டேன் என்று சாய் ரவி சபதம் செய்கிறார்.. சாய் ரவியிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்களை போட்டுக்கொண்டுத் திரிகிறார் விஷ்ணு விஷால்.
இறுதியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு விஷால் எப்படி தப்பித்தார்? ரெஜினாவை கரம் பிடித்தாரா? என்பது நகைச்சுவையான மீதிக்கதை.
நாயகன் விஷ்ணு விஷால் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். தாதா சாய் ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன.
நாயகி ரெஜினா அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். சாய் ரவி வில்லனாக இருந்தாலும், தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளுக்கு இடம் கொடுத்து காமெடிக்கு துணை நிற்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு.
கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார். டோனியாக வரும் யோகி பாபுவும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க பல இடங்கள் சிரிக்கும்படியாக இருக்கிறது.
இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம் பெறுகின்றன.
லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.
`சிலுக்குவார்பட்டி சிங்கம்’ – சிரிக்க வைக்கும் சிங்கம்!