சில நொடிகளில் – விமர்சனம்
நடிப்பு: ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த், புன்னகைப் பூ கீதா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: வினய் பரத்வாஜ்
ஒளிப்பதிவு: அபிமன்யு சதானந்தன்
படத்தொகுப்பு: ஷைஜல் பிவி
பாடலிசை: மசாலா காபி, பிஜோர்ன் சுர்ராவ், தர்ஷனா கேடி, ஸ்டாக்காடோ, ரோஹித் மாட்
பின்னணியிசை: ரோஹித் குல்கர்னி
தயாரிப்பு: புன்னகைப்பூ கீதா
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)
மண உறவை மீறிய கள்ள உறவும், அதனால் ஏற்படும் சிக்கல்களும் தான் கதைக்கரு. இக்கதைக்கருவை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஜானரில், அடுத்து என்ன நடக்கும் என நொடிக்கு நொடி எதிர்பார்க்கும் வண்ணம் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, ரசிப்புக்குரிய திரைப்படமாக ‘சில நொடிகளில்’ படத்தை படைத்தளித்திருக்கிறார், எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் வினய் பரத்வாஜ்.
லண்டனில் சொந்தமாக மருத்துவமனை வைத்திருக்கும் புகழ்பெற்ற அழகுக்கலை (பிளாஸ்டிக் சர்ஜரி) மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜ் வரதன் (ரிச்சர்ட் ரிஷி). இவருடைய மனைவி மேதா வரதன் (புன்னகைப் பூ கீதா). சமூக செயல்பாட்டாளரான இவர் எப்போதும் ஸ்பான்சர் பிடிப்பதிலேயே நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார். திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த வரதன் தம்பதிக்கு குழந்தை இல்லை.
செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கக் கூடியவரான ராஜ் வரதனுக்கும், வளர்ந்துவரும் மாடலிங் ஆர்ட்டிஸ்டான மாயா பிள்ளைக்கும் (யாஷிகா ஆனந்த்) இடையே ஓராண்டு காலமாக ரகசிய கள்ள உறவு இருந்து வருகிறது. ஒரு நாள், மனைவி மேதா இல்லாத நேரம் வீட்டுக்கு மாயா பிள்ளையை அழைத்து வருகிறார் ராஜ் வரதன். கள்ளக் காதலர்கள் இருவரும் போதையிலும், படுக்கையிலும் திளைக்கிறார்கள். மனைவி வீடு திரும்புவதாக போனில் தகவல் வந்ததும், ராஜ் வரதன் அவசர அவசரமாக கள்ளக்காதலியை வெளியே அனுப்ப முயலுகிறார். ஆனால், அளவுக்கதிமாக போதை மாத்திரை உட்கொண்டதால் கள்ளக்காதலி அங்கேயே மயங்கி விழுந்து இறந்துபோகிறார்.
அதிர்ச்சி அடையும் ராஜ் வரதன் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். மனைவி பார்த்துவிடக் கூடாது என்பதற்காக பெரிய மரப்பெட்டிக்குள் கள்ளக்காதலியின் சடலத்தை வைத்து மூடுகிறார். பின்னர் மனைவி கவனிக்காத நேரத்தில் அந்த மரப்பெட்டியை காரில் ஏற்றி கொண்டு போய், குழி தோண்டி புதைத்து விடுகிறார்.
தன் மனைவிக்கும், வெளியுலகத்துக்கும் தனது கள்ளக்காதலும், கள்ளக்காதலியின் மரணமும் தெரிந்துவிடாமல் சாமர்த்தியமாக மறைத்துவிட்ட போதிலும், ராஜ் வரதன் குற்ற உணர்விலும் அது தரும் மன இம்சையிலும் சிக்கித் தவிக்கிறார். “ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்ற மனைவியின் கேள்விக்கும் தெளிவான பதில் சொல்ல இயலாமல் தடுமாறுகிறார்.
இந்த கட்டத்தில் ராஜ் வரதனை சந்திக்கும் ஓர் இளம்பெண், ”நான் ரேவதி பிள்ளை. பத்திரிகை நிருபர். மாயா பிள்ளையின் உறவினர்” என்று தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். “நீங்களும் மாயா பிள்ளையும் கள்ளக்காதலர்கள் என்பதும், மாயா பிள்ளை இப்போது உயிருடன் இல்லை என்பதும் எனக்குத் தெரியும்” என்று சொல்லி திடுக்கிட வைக்கிறார். இந்த விவகாரம் உங்கள் மனைவிக்குத் தெரியக் கூடாது என்றால்…” என பிளாக்மெயில் செய்யும் தொனியில் மிரட்டி ஒரு பெரிய தொகை கேட்கிறார்.
பெண் பத்திரிகை நிருபருக்கு இந்த விவகாரம் எப்படி தெரிய வந்தது? ராஜ் வரதன் அடுத்து என்ன செய்தார்? அவரது மனைவிக்கு இந்த பிரச்சனை தெரிய வந்ததா, இல்லையா? இந்த பிரச்சனையிலிருந்து ராஜ் வரதன் மீண்டாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு பல திடுக்கிடும் திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘சில நொடிகளில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
டாக்டர் ராஜ் வரதன் என்ற நாயக கதாபாத்திரத்தில் வரும் ரிச்சர்ட் ரிஷி, அந்த கதாபாத்திரத்துக்குள் தன்னை கனகச்சிதமாகப் பொருத்திக் கொண்டு, அக்கதாபாத்திரத்துக்குத் தேவையான இயல்பான நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார். அவரது கெட்-அப், குறிப்பாக சிகையலங்காரம், புது ரிச்சர்ட் ரிஷியை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
வளர்ந்துவரும் மாடலிங் ஆர்ட்டிஸ்ட் மாயா பிள்ளையாக யாஷிகா ஆனந்த் கொஞ்ச நேரமே வந்தாலும், போதையில் தான் கிறங்குவதோடு, பார்வையாளர்களையும் காமக்களியாட்ட கவர்ச்சியால் கிறங்கடிக்கிறார்.
நாயகனின் மனைவி மேதா வரதனாக வரும் புன்னகைப் பூ கீதா, தனது கதாபாத்திரத்துக்கு இயன்ற வரை நியாயம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லாத துணை பாத்திரம் போல் வந்தாலும், படத்தின் இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் கதையையே தலைகீழாக மாற்றுபவராக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
நாயகனை பிளாக்மெயில் செய்து பணம் கேட்டு மிரட்டும் ரேவதி பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் வரும் பெண், அழுத்தமான பார்வையாலும், சூது ததும்பும் முகபாவனையாலும் மிரட்டியிருக்கிறார்.
அபிமன்யு சதானந்தனின் ஒளிப்பதிவு குளுமையான காட்சி விருந்து. கதையின் தேவையை மீறாமல், லண்டன் அருகில் உள்ள செம்ஸ்ஃபோர்டு (Chelmsford) நகரத்தின் அழகை அள்ளிக்கொண்டு வந்திருப்பதோடு, அங்கேயே நாமும் வசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஷைஜல் பிவியின் படத்தொகுப்பு படுஷார்ப். திரைக்கதையின் வேகமும், விறுவிறுப்பும் குறையாமல் பார்த்துக் கொண்டதோடு, மொத்தப் படத்தையும் 94 நிமிடங்களுக்குள் சுருக்கியது அருமையிலும் அருமை.
மசாலா காபி, பிஜோர்ன் சுர்ராவ், தர்ஷனா கேடி, ஸ்டாக்காடோ, ரோஹித் மாட் ஆகியோர் இணைந்து மயக்கும் பாடலிசை விருந்து படைத்திருக்கிறார்கள். குறிப்பாக, மகாகவி பாரதியின் ‘ஆசை முகம் மறந்து போச்சே’ பாடலின் இசை அப்படியே சொக்க வைக்கிறது.
கதைக்கும், காட்சிகளுக்கும் வலு சேர்க்கும் விதமாய் பின்னணியிசை அமைத்திருக்கிறார் பாலிவுட் இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி.
‘சில நொடிகளில்’ – கண்டு களிக்கலாம்!