நீட் தேர்வை ரத்து செய்ய கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியது
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கியது. சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தமது கையெழுத்தையும் பதிவு செய்தார்.
இதேபோல், தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள்,எம்எல்ஏக்கள், அணிகளின் மாநிலநிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு திமுக மாவட்டத்துக்கும் ஒரு சிறப்பு பேச்சாளர் பங்கேற்று, மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வு குறித்தும், அதன் பின்னால் உள்ள அரசியல் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதன்படி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. டிஜிட்டலாக பெறப்படும் கையெழுத்துகள் சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞர் அணியின் மாநாட்டில் முதல்வரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பின்னர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறும்போது, “50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் என்று இலக்கு வைத்துள்ளோம். கையெழுத்துப் பெறும்போது எதற்காக இந்தக் கையெழுத்தைப் பெறுகிறோம் என்பதை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக முடிக்க ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.