ஷூட் த குருவி – விமர்சனம்
நடிப்பு: அர்ஜை, சிவ ஷா ரா, ஆஷிக் ஹுசைன், ராஜ்குமார் ஜி, சுரேஷ் சக்கரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் மற்றும் பலர்
இயக்கம்: மதிவாணன்
ஒளிப்பதிவு: பிரண்டன் சுஷாந்த்
படத்தொகுப்பு: கமலக்கண்ணன்
இசை: மூன்ராக்ஸ்
தயாரிப்பு: ராசா ஸ்டூடியோ & ஷார்ட்ஃபிலிக்ஸ் – கேஜே. ரமேஷ் & சஞ்சீவி குமார்
ஓடிடி: ஷார்ட்ஃபிலிக்ஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேசன்ஸ்)
மிகவும் சுவாரஸ்யமான, வித்தியாசமான ஒரு கேங்ஸ்டர் கதை, ‘ஷூட் த குருவி’ என்ற தலைப்பில், 65 நிமிடம் 32 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய சிறிய திரைப்படமாக ஷார்ட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில், அதாவது 2032ஆம் ஆண்டு துவங்குவதாக இக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது.
கேங்ஸ்டர்களைப் பற்றிய உண்மைத் தகவல்களைத் திரட்டி, ஆராய்ந்து நூல் எழுதுபவர் பேராசிரியர் மித்ரன் (ராஜ்குமார்.ஜி). அவரை ஒரு ஆராய்ச்சி மாணவனும், ஒரு ஆராய்ச்சி மாணவியும் சந்தித்து, 2020ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குருவி ராஜன் என்ற கேங்ஸ்டர் பற்றிய விவரங்களைக் கேட்கிறார்கள்…
சிறுவயதிலேயே தனது அசாத்திய திறமையால் ஒரு கேங்ஸ்டருக்கு அடியாள் ஆகி, பின் வளர்ந்து வலிமை பெற்று அந்த கேங்ஸ்டரையே தீர்த்துக் கட்டிவிட்டு தனிப்பெரும் கேங்ஸ்டராகத் திகழ்கிறான் குருவி ராஜன் (அர்ஜை). காவல் துறைக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் அவன் பெயரைக் கேட்டாலே ஊர் குலை நடுங்குகிறது.
இன்னொரு இடத்தில், தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதபோதிலும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் புகைத்துத் தள்ளிய புகையை சுவாசித்ததால் உடல்நலம் கெட்டு இறக்கும் தறுவாயில் இருப்பவன் ஷெரிப் (ஆஷிக் ஹுசைன்). அவன் உயிர் பிழைத்திருக்க வேண்டுமானால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். அதற்கு 5 லட்சம் ரூபாய் வேண்டும். ஃபிரீலேன்ஸ் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேலை செய்யும் அவன் அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவான். விரக்தியில் படுக்கையில் கிடக்கிறான்.
ஷெரிப்பின் கனவில் தோன்றும் ஒரு துறவி (சுரேஷ் சக்கரவர்த்தி), “நீ சாகப்போவது உறுதியாகிவிட்டது. ஏன் சும்மா சாகிறாய். நீ ஆசைப்படும் 5 விஷயங்களை டார்கெட்டாக ஃபிக்ஸ் பண்ணி, அவற்றை செய்து முடித்துவிட்டு செத்துப்போ” என்று கூறி மறைகிறார்.
அதன்படி ஷெரிப், 5 டார்கெட்டுகளை ஃபிக்ஸ் பண்ணி, அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வரும்போது, எதிர்பாராத விதமாக குருவி ராஜனை, அவன் பெரிய கேங்ஸ்டர் என்று தெரியாமலேயே அடித்துவிடுகிறான்.
அடி வாங்கிய குருவி ராஜன் என்ன செய்தான்? தான் அடித்தது மிகப் பெரிய கேங்ஸ்டரை என தெரிந்தபின் ஷெரிப் என்ன செய்தான்? குருவி ராஜனின் வாழ்க்கைக் கதையைக் கூறிவந்த பேராசிரியர் ருத்ரன், அதை எத்தகைய திருப்பத்துடன் முடித்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ஷூட் த குருவி’ படத்தின் மீதிக்கதை.
கேங்ஸ்டர் குருவி ராஜன் என்ற கதாபாத்திரத்தில் வரும் அர்ஜை, எதிர்மறை நாயகனாக மிரட்டியிருக்கிறார். அவரது நடை, உடை, சிகரெட் பிடிக்கும் ஸ்டைல், அழுத்தமான பார்வை போன்ற அனைத்து அம்சங்கள் மூலமாக தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
மரணத்தின் விளிம்பில் இருக்கும் இளைஞன் ஷெரிப் கதாபாத்திரத்தில் வரும் ஆஷிக் ஹுசைன் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ’முன்னாள் காதலி’ பற்றிய டார்கெட்டை அவர் விவரிக்கும் விதம் நகைச்சுவையின் உச்சம்.
ஷெரிப்புக்கு அடைக்கலம் கொடுக்கும் கோவிந்த் கதாபாத்திரத்தில் வரும் ஷாரா, தனது வழக்கமான பாணியில் வசனம் பேசி சிரிக்க வைக்கிறார். தானொரு ‘சீசன் வியாபாரி’ என்பதை அவர் விவரித்துச் சொல்வதைக் கேட்டு யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது. நகைச்சுவையில் மட்டுமின்றி செண்டிமெண்ட் காட்சிகளிலும் மனிதர் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக, யாராவது ஒருவரை அம்மா என அழைக்க மாட்டோமா என அவர் ஏங்குவது, ஷெரிப்பை தனது சகோதரனாக ஏற்றுக்கொள்வது ஆகிய இடங்களில் அவரது நடிப்பு அபாரம்.
பேராசிரியர் ருத்ரனாக வரும் ராஜ்குமார்.ஜி, துறவியாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி, ஷெரிப்பின் முன்னாள் காதலியின் இன்னாள் கணவனாக வரும் மணி வைத்தி, குருவி ராஜனின் குழுவைச் சேர்ந்த சூர்யாவாக வரும் சாய் பிரசன்னா, ரவியாக வரும் ஜிப்ஸி நவீன் உள்ளிட்டோர் தத்தமது பாத்திரத்துக்குத் தேவையான அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பிளாக் காமெடி ஜானரிலான மிக எளிமையான கேங்ஸ்டர் கதைக்கு வலிமையான திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் மதிவாணன். நகைச்சுவை இழையோடும் கதைக்குத் தேவையான திருப்பங்களை ஆங்காங்கே புகுத்தி, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, தரமான மேக்கிங் மூலம் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர். பாராட்டுகள்.
ஒளிப்பதிவாளர் பிரண்டன் சுஷாந்த், ஒரு அறைக்குள் வைத்தே படத்தின் பெரும்பகுதியை சிரத்தையுடன் சிறப்பாக படமாக்கியுள்ளார். மூன்ராக்ஸின் பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. படத்தொகுப்பாளர் கமலக்கண்ணன் தனது ஷார்ப் கட்டிங் மூலம் படத்துக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார்.
‘ஷூட் த குருவி’ – துப்பாக்கி வெடியுடன் கூடிய நகைச்சுவை சரவெடி! நிச்சயம் கண்டு களிக்கலாம்!!