ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தொலைக்காட்சி நடிகர் போட்டி

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான காலம் முடிவடையவுள்ளதையொட்டி நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், 144 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. காங்கிரஸ் வெளியிட்ட மத்திய பிரதேச வேட்பாளர் பட்டியலில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை எதிர்த்து புத்னி தொகுதியில் தொலைக்காட்சி நடிகர் விக்ரம் மஸ்டல் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. ஆனந்த் சாகரின் 2008 ஆம் ஆண்டைய தொலைக்காட்சித் தொடரான ’ராமாயணம்’ தொடரில் அனுமான் வேடத்தில் நடித்ததற்காக மஸ்டல் மிகவும் பிரபலமானவர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரான கமல்நாத் அவரது கோட்டையாக கருதப்படும் சிந்த்வாராவிலிருந்து போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல்வர் திக்விஜயசிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங்கின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் ரகோகர் தொகுதியில் இருந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் பாஜக 136 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.