“மோடியின் பாதி மூளை நன்றாக வேலை செய்கிறது!” – பத்திரிகையாளர் சேகர் குப்தா

சாதாரண மனிதனின் மூளை இரு பகுதிகளாகப் பிரிந்து வேலை செய்கிறது; ஒவ்வொன்றும் வெவ்வேறு தொகுப்பு வேலைகளைச் செய்கிறது.

அந்த மனித மூளையை ஆட்சியில் இருக்கும் தலைவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதையே அரசியல், ஆட்சி நிர்வாகம் என்று இரண்டு பிரிவாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒரு பகுதி திட்டமிடுகிறது, அதற்கான வழியைத் தேர்வு செய்கிறது, பதவியைப் பிடிக்கப் பேசுகிறது. இரண்டாவது பகுதி – அதைச் செயல்படுத்துகிறது.

பிரதமர் நரேந்திர மோடியிடம் இது எப்படி வேலை செய்கிறது?

இதுவரை இருந்திராத கொள்கை முடிவான இத்துணிகரத்தை, அது ‘துல்லியமான தாக்குதல்’ என்றாலும், ‘முடிவைப் பற்றிக் கவலைப்படாத செயல்’ என்றாலும், ‘புழக்கத்திலிருந்து பணத்தைச் செல்லாததாக்கியது’ என்றாலும், ‘வெறும் ரூபாய் நோட்டுகள் மாற்றம்’ என்றாலும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.

கடந்த சில பத்தாண்டுகளில் நமக்கு வாய்த்த, அரசியல் சிந்தனை அதிகம் மிக்க தலைவர் அவர். மக்களுடைய நாடித் துடிப்பைக் கணிக்கும் ‘ஏழாவது அறிவு’ அவருக்கு இருக்கிறது. 2002-ல் தொடங்கி 2014-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்தது வரை அவருடைய படிப்படியான வளர்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுவரை அவர் வெற்றி கண்டே வருகிறார்.

அவருடைய அரசியல் செயல் திட்டம் வெளிப்படையானது. “நாட்டில் கறுப்புப் பணம் அதிகமாகிவிட்டது என்று கருதுகிறீர்களா? வரியை ஏய்த்தோ, லஞ்சமாக வாங்கிக் குவித்தோ, பொருளாதார ரீதியாகவோ, வேறு விதத்திலோ கறுப்பு பெருகுகிறதா, இல்லையா?” இதற்கு “ஆம்” என்பதுதான் விடையாக இருக்க முடியும்.

இனி அடுத்த கேள்விகள்:

“இப்படியிருந்தால் இந்தியா முன்னேற முடியுமா? இந்தப் பணத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியாமல் வல்லரசாக முடியுமா?” இதற்கு பதில் “முடியாது”.

வரி ஏய்ப்புக்கு உதவும் நாடுகளிலிருந்தும், சுவிஸ் வங்கியிலிருந்தும், தானாக முன்வந்து தெரிவிக்கும் திட்டம் மூலமும் இந்தப் பணத்தை மீட்க நாங்கள் முயற்சிகள் செய்தோமா, இல்லையா?” மோடியின் ஆதரவாளர்கள் “ஆமாம்” என்றும், எதிர்ப்பாளர்கள் “இல்லை” என்றும் – பெரும்பாலானவர்கள் “எதையும் கூற முடியாமலும்” பதில்கள் முடியும்.

“இவை எதுவுமே பலனளிக்காதபோது, அணுகுண்டு போட்டதைப் போன்ற சேதத்தை ஏற்படுத்தினாலும், ‘500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று அறிவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழிகள் இருந்தனவா? இதற்காகத்தானே என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்? செயல்படாத இன்னொரு மன்மோகன் சிங்காக இருப்பதற்கா?” என்று கேட்கக் கூடும்.

இந்த வாதத்தில்தான் அவர் வெற்றி பெறுகிறார். அதிலும், கையில் பணம் இல்லாமலும், மாற்ற முடியாமலும் அல்லல் படுகிற கடைக்கோடி மனிதன் அவரை ஆதரிப்பதுதான் குறிப்பிடத்தக்கது…

‘சக் தே’ திரைப்படத்தில் ஹாக்கி பயிற்றுநர் ஷா ரூக் கான், தனக்கு 70 நிமிஷங்களைக் கொடுக்குமாறு கேட்கிறார். ஹாக்கி பயிற்றுநரைப்போல மிகக் குறைந்த அவகாசத்தை அரசியல்வாதி கேட்பாரா? அதனால்தான் 50 நாட்களை கேட்கிறார். 50 நாட்களுக்குப் பிறகு, இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் மறந்து போய்விடும்.

எதற்கும் மூன்று உதாரணங்களைக் காட்டுவது பத்திரிகையாளர்களின் மரபு. நான் காட்டுவதில் ஒன்று பழையது, 2 புதியன.

1969-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை இரண்டாகப் பிளந்த இந்திரா காந்தி, வங்கிகளை தேசியமயமாக்கினார். மன்னர் மானியங்களை ஒழித்தார். ‘வறுமையே வெளியேறு’ என்ற கோஷத்தை முழங்கினார். வறுமை ஒழிந்ததோ இல்லையோ, முன்னாள் மகாராஜாக்கள் மானியம் இல்லாமல் திண்டாடுகிறார்கள் என்ற மகிழ்ச்சியே ஏழைகளுக்குப் பெரிய சாதனையாகத் தோன்றியது.

எல்லா எதிர்க்கட்சிகளும் அவருக்கு எதிராகத் திரண்டன. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ஆசிரியரான பிராங்க் மோரேஸ் “கட்டுக்கதையும் உண்மையும்” என்ற தலைப்பில் தினமும் அவரை கேள்வி கேட்டு கட்டுரை எழுதினார். “இந்திரா காந்தி ‘வறுமையே வெளியேறு’ என்கிறார், மாற்றுக் கட்சிக்காரர்கள் ‘இந்திராவே வெளியேறு’ என்கின்றனர்” என்று இந்திராவின் ஆதரவாளர்கள் சுவரொட்டி ஒட்டினார்கள்.

இறுதியில் இந்திரா காந்திதான் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். இப்போது நீங்கள் முடிவு செய்யுங்கள், எது வெற்றிக்கான வழி?

வறுமையை ஒழிக்க இந்திராவிடம் அப்போது கொள்கையோ திட்டமோ ஏன், சிந்தனையோ கூட இல்லை. மக்களை நம்ப வைக்கும் உறுதிமொழி கிடைத்தது. அதைவிட கவர்ச்சிகரமான, பெரிதான சிந்தனையோ, கோஷமோ எதிர்க்கட்சிகளிடம் இல்லை.

அடுத்த 2 உதாரணங்கள் பிரிட்டனில் நடந்த ‘பிரெக்ஸிட்’ வாக்கெடுப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் (பிரெக்ஸிட்) என்று பிரச்சாரம் செய்த நைஜல் ஃபாரேஜ் முதல் போரிஸ் ஜான்சன் வரை அனைவருக்கும் தெரியும், பிரிட்டனை மீட்டு அதை மாபெரும் நாடாக்குவது என்பது இந்த ஜென்மத்தில் முடியாது என்று. “எத்தனை நாட்களில், எப்படி பிரிட்டனை வளப்படுத்துவீர்கள்?” என்று யாரும் கேட்கப் போவதில்லை என்று அவர்களுக்குத் தெரியும்.

மோடி எப்போதுமே உடனடியாக கவனிக்க வேண்டிய ஒரு பிரச்சினையை முன் நிறுத்தி போரிட்டு வென்றுவிடுகிறார். இப்போது கறுப்புப் பணத்துக்கு எதிராகப் போரிடுகிறார்.

“இதனால் சிரமம் ஏற்படும் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று மோடி கேட்டார். ஏழைகள் ‘சரி’ என்று கூறிவிட்டார்கள்.

இதற்கிடையே, கறுப்புப் பண முதலைகள் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது என்று சிந்தித்து, மோடியைப் பாராட்டும் ஏழைகளைக் கொண்டே அதைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்!

எனவே நாம் தெரிந்துகொள்ளலாம், மோடியின் அரசியல் (பாதி) மூளை நன்றாக வேலை செய்கிறது என்று.

எல்லைக்கு அப்பாலிருக்கும் எதிரியைத் துல்லியமாகத் திடீரென தாக்கிவிட்டு பகிரங்கமாக அறிவித்தார்கள். விளைவுகள் தெரியாததைப்போல கறுப்புப் பணத்துக்கு எதிராக, உயர் முக மதிப்பு நோட்டுகளும் செல்லாது என்று ஒரே இரவில் அறிவிக்கப்பட்டுவிட்டது.

நீங்கள் அரசின் ஆதரவாளராக இருந்தால், “பந்தைப் பார்த்ததும் அதைப் பாய்ந்து சென்று அடிக்கும் வீரேந்திர சேவாக்கைப் போல அரசு இருக்கிறது” என்று பாராட்டலாம்;

“இல்லையென்றால், நகர்ப்புறங்களில் உண்மையைப் போலவே கற்பனைக் கதைகளை நம்பவைக்கும் முயற்சியாக இருக்கிறது இது” என்று சலித்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும், வயிற்றை (பெல்ட்டால்) இறுகக் கட்டிக்கொண்டு தயாராக இருங்கள்.

– சேகர் குப்தா

தமிழில் சுருக்கமாக: ஜூரி

(இக்கட்டுரை tamil.thehindu.com-ல் எதற்கும் தயாராக இருங்கள் என்ற தலைப்பில் வெளியானது)