சாகுந்தலம் – விமர்சனம்
நடிப்பு: சமந்தா, தேவ் மோகன், சச்சின் கெடேகர், அதிதி பாலன், மோகன்பாபு, மதுபாலா, கவுதமி, பிரகாஷ்ராஜ், அல்லு அர்ஹா மற்றும் பலர்
இயக்கம்: குணசேகர்
ஒளிப்பதிவு: ஜோசப் வி.சேகர்
இசை: மணிசர்மா
தயாரிப்பு: நீலிமா குணா
பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அகமது
இந்திய துணைக்கண்டத்துக்கு ‘பரதக்கண்டம்’ என்றொரு பெயரும் உண்டு. பழங்காலத்தில் ஆரிய இனத்தைச் சேர்ந்த புரு வம்சத்தின் ‘பரதன்’ என்ற மன்னன் ஆண்ட நிலப்பகுதி என்பதால், இப்பகுதி ‘பரதக்கண்டம்’ என்று குறிப்பிடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த பரதன் யார் என்றால் துஷ்யந்தன் – சகுந்தலை தம்பதியரின் மகன் என்கின்றன புராணங்கள். மிகப் பிரசித்தி பெற்ற இந்த துஷ்யந்தன் – சகுந்தலை காதல்கதை பற்றிய புராண படமாக வந்துள்ளது ’சாகுந்தலம்’ திரைப்படம். இது தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் ‘டப்’ செய்யப்பட்டிருக்கிறது.
விஸ்வாமித்திர முனிவருக்கும், அவரது தவத்தைக் கலைத்து அவரை மோகத்துக்குள் வீழ்த்திய மேனகைக்கும் பிறந்த சகுந்தலை (சமந்தா), அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் கன்வ மகரிஷியின் (சச்சின் கெடேகர்) ஆசிரமத்தில் அவரது வளர்ப்புமகளாக வளர்கிறார். ஒருநாள் வேட்டையாட காட்டுக்குள் செல்லும் மன்ன்ன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) விலங்குகளைத் துரத்திக்கொண்டே கன்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வந்துவிடுகிறார்.
அங்கு அழகிய இளம்பெண்ணான சகுந்தலையை பார்க்கும் துஷ்யந்தன், அவர் மீது காதல் வயப்படுகிறார். சகுந்தலைக்கும் துஷ்யந்தன் மீது காதல் வருகிறது. இருவரும் தங்களுக்குள் ரகசியமாக ’கந்தர்வ திருமணம்’ செய்துகொண்டு, தம்பதியராகி, உடலுறவில் ஈடுபட்டு மகிழ்கிறார்கள். பின்னர் துஷ்யந்தன், ”அரண்மனைக்குச் செல்கிறேன்; விரைவில் திரும்பி வந்து உன்னையும் அழைத்து செல்கிறேன்” என்று சகுந்தலையிடம் உறுதியளித்துவிட்டு கிளம்பிப் போகிறார். ஆனால் திரும்பி வரவேயில்லை.
கர்ப்பம் தரித்த சகுந்தலை, துஷ்யந்தனைத் தேடி அரண்மனைக்கு செல்கிறார். அங்கு சகுந்தலையை, ”நீ யார் என்றே எனக்கு தெரியாது” என்று கூறி துஷ்யந்தன் அவமானப்படுத்துகிறார். சகுந்தலையை துஷ்யந்தன் தெரியாது என்று கூறுவதன் காரணம் என்ன? இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா? என்பது ‘சாகுந்தலம்’ படத்தின் மீதிக்கதை.
சகுந்தலையாக வரும் சமந்தா கச்சையும், மெல்லிடையுமாக படம் முழுவதும் பரவசப்படுத்துகிறார். துஷ்யந்தனைப் பார்த்ததும் நாணத்தோடு மரத்தின் பின்னால் மறைவது இலக்கிய ரசம். நெருக்கமான காட்சியில் தாராளம் காட்டி உள்ளார். காதலன் பிரிவில் கலங்குவது, அரசவையில் தன்னை கைவிடும் துஷ்யந்தனை உக்கிரமாக பார்ப்பது என்று நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்.
துஷ்யந்தனாக தேவ் மோகன் நெடிய உயரம், விரிந்த தோள்கள், தீர்க்கமான கண்கள் என்று அரசகுல லட்சணத்துடன் வருகிறார். யானையுடன் சண்டையிடும்போதும், அரசவை காட்சியிலும் கம்பீரம்.
கன்வ மகரிஷியாக வரும் சச்சின் கெடேகர் நடிப்பில் அழுத்தம். சகுந்தலையின் தோழியாக வரும் அதிதி பாலன் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறார். துர்வாச முனிவராக வரும் மோகன்பாபு சில காட்சிகளே வந்தாலும் நிறைவு. மேனகையாக வரும் மதுபாலா தன் பிள்ளைக்காக கலங்கி நடனம் ஆடும் இடத்தில் மனதில் இடம் பிடிக்கிறார். படகோட்டியாக வரும் பிரகாஷ்ராஜூக்கு ஒரு பாடலில் மட்டும் நடிக்க வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
பிரபல தெலுங்குப்பட இயக்குனரான குணசேகர் பிரமாண்ட செட் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மீது அதிக நாட்டம் கொண்டவர். அவரது முந்தைய படங்களான ’ருத்ரமாதேவி’, ’வருடு’, ’மிருகராஜு’ ஆகிய படங்கள் இதற்கு சாட்சி. எனவே, இந்த புராண படத்தை அந்தக்காலத்து அரங்கு அமைப்புகள், யுத்தம், உடைகள், அரண்மனை, காடு மலைகள் என்று பிரமாண்டமாக படமாக்கி உள்ளார் இயக்குனர். ஆனால். திரைக்கதையை இன்னும் உணர்வுப்பூர்வமாகவும், நாடகத்தனம் இல்லாமலும் உருவாக்கி இருக்கலாம். அதுபோல், கிராபிக்ஸில் வரையப்பட்ட மிருகங்களும், பறவைகளும் இயற்கைக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமாக, உண்மை போல் காட்டியிருக்கலாம்.
மணிசர்மா வித்தியாசமான இசைக்கருவிகள் மூலம் பழங்காலத்திற்கு அழைத்துச் செல்கிறார். ”மல்லிகா..மல்லிகா…” பாடல் மனதில் நிற்கிறது.
ஜோசப் வி. சேகர் ஒளிப்பதிவு வியப்பை தருகிறது.
‘சாகுந்தலம்’ – கவிச்சக்கரவர்த்தி காளிதாசனையே கவர்ந்த காதல்கதை; உங்களையும் நிச்சயம் கவரும்!