செயல் – விமர்சனம்

விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அப்புலு, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ‘செயல்’. அடாவடித்தனமான் ஒரு ரவுடியை காமெடி பீஸாக்கி நம்மை சிரிக்க வைத்த ‘ஜிகர்தண்டா’ வெற்றிப் படத்தின் பாணியில், மிகவும் ரசிக்கத்தக்க படமாக வந்திருக்கிறது ‘செயல்’.

வடசென்னையில் மிகப் பெரிய ரவுடியாக இருக்கிறார் சமக் சந்திரா. முழு மார்க்கெட்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவர், தனது அடியாட்கள் சகிதம் அத்தனை பேரையும் மிரட்டி செமத்தையாக மாமூல் வசூலித்து குவிக்கிறார்.

அப்ப்குதியில் வசிக்கும் இளைஞரான ராஜன் தேஜேஸ்வர், தன் அம்மா சொன்ன பொருட்களை வாங்குவதற்காக தற்செயலாக மார்க்கெட்டுக்கு வருகிறார். அப்போது அவருக்கும் ரவுடி சதக் சந்திராவுக்கும் இடையே உரசல் ஏற்பட, ஆவேசம் கொள்ளும் ராஜன் தேஜஸ்வர் ரவுடி சதக் சந்திராவை அடித்து துவம்சம் செய்கிறார்.

இதனால் ட்ரெண்ட் அடியோடு மாறுகிறது. சதக் சந்திராவின் அடியாட்களிடம் வழக்கமாக பவ்யமாக மாமூல் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது துணிச்சலாய் நெஞ்சை நிமிர்த்துகிறார்கள். “ஒரு சின்னப் பையனிடம் அடி வாங்குனவன் தானே உங்க அண்ணன்” என்று எள்ளி நகையாடி, மாமூல் கொடுக்க மறுக்கிறார்கள்.

இந்த அவமானத்தை எப்படி துடைப்பது என தெரியாமல் டென்ஷனாகும் சதக் சந்திரா, தனக்கு குருவாக இருக்கும் பெரிய தாதாவைச் சந்தித்து ஆலோசனை கேட்கிறார். “எந்த பையன் உன்னை அடிச்சானோ அந்தப் பையனை அதே மார்க்கெட்டுக்கு, அதே இடத்துக்கு வரவச்சு, எல்லோரும் பார்க்க அடிச்சு துவை. அப்ப தான் போன உன் மரியாதை திரும்பக் கிடைக்கும்” என்று அறிவுரை கூறுகிறார் பெரிய தாதா.

அதை ஏற்றுக்கொள்ளும் சதக் சந்திரா, ராஜன் தேஜஸ்வரை போனில் தொடர்பு கொண்டு, “தம்பி, மார்க்கெட்டுக்கு வா. நான் உன்னை அடிக்கணும்” என்கிறார். “அப்படியா அண்ணே, நான் கொஞ்சம் வேலையா இருக்கேன். அடுத்த வாரம் வர்றேன் அண்ணே” என்கிறார் ராஜன் தேஜஸ்வர். இப்படி சதக் சந்திரா கெஞ்சி மன்றாடி அழைப்பதும், ராஜன் தேஜஸ்வர் சூழ்நிலை காரணமாக அந்த அழைப்பை ஏற்க இயலாமல் போக்கு காட்டுவதுமாய் ப்டம் படுசுவாரஸ்யமாய் நகருகிறது.

இறுதியில் ராஜன் தேஜஸ்வர் மார்க்கெட்டுக்கு வந்தாரா? இருவரும் மோதினார்களா? வெற்றி யாருக்கு? என்பது மீதிக்கதை.

s11

நாயகன் ராஜன் தேஜஸ்வர் துறுதுறுவென்று இருக்கிறார். அதிரடி ஆக்ஷனில் தூள் பரத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், காமெடியிலும் கலக்கியிருக்கிறார். கொஞசம் சிரத்தையுடன் நடனப் பயிற்சி எடுத்துக்கொண்டால், தமிழ்த் திரையுலகில் வெற்றி நாயகனாக ஒரு ரவுண்டு நிச்சயம் வரலாம்.

மார்க்கெட் ரவுடியாக வரும் சதக் சந்திராவின் பாத்திரப் படைப்பும், நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றன. சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பது இவருக்கு கைவந்த கலையாக இருக்கிறது. கீப் இட் அப்!

ராஜன் தேஜஸ்வரின் ஜோடியாக வரும் நாயகி தாருஷி கண்ணுக்கு குளிர்ச்சியாய், சிரித்த முகமாய் அழகாய் இருக்கிறார். குறைவான காட்சிகளே வந்தாலும் தன் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.

ராமதாஸ் காமெடி சிரிக்க வைக்கிறது. ராஜன் தேஜஸ்வரின் துணிச்சலான அம்மாவாக வரும் ரோணுகாவும் தன் பங்குக்கு காமெடி பண்ணி சிரிக்க வைத்திருக்கிறார். ரவுடி சதக் சந்திராவின் மனைவியாக வரும் வினோதினி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாராட்டப்பட வேண்டியவர் இயக்குனர் ரவி அப்புலு தான். விறுவிறுப்பான காமெடி படமாக இதைக் கொடுப்பதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். இடையில், சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளையும் நாசூக்காக ஆங்காங்கே நுழைத்திருக்கிறார்.

சித்தார்த் விபினின் இசை, வி.இளையராஜாவின் ஒளிப்பதிவு, கன்ல் கண்ணனின் ஸ்டண்ட் அமைப்பு ஆகியவை படத்துக்கு பலம்.

‘செயல்’ – நம்பிப்போய் பார்த்து, ரசித்து மகிழலாம்!