‘செஞ்சிட்டாளே என் காதல’: பெண்களை அவதூறு செய்யும் படமா?

அறிமுக இயக்குனர் எழில் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் ‘செஞ்சுட்டாளே என் காதல’. இவர் 50க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்திருப்பதோடு, சில திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருப்பவர்.

கதாநாயகியாக விஜய் டிவி ‘ஆஃபிஸ்’ சீரியலில் நடித்த மதுமிளாவும், அவரது அம்மாவாக ‘மெட்ராஸ்’, ‘கத்தி’ படங்களில் நடித்த ரமாவும், அப்பாவாக ‘மெட்ராஸ்’, ‘மாரி’, ‘கபாலி’ படங்களில் நடித்த மைம் கோபியும் நடிக்கிறார்கள்.

கதாநாயகனின் அப்பாவாக அஜய் ரத்னம் நடிக்கிறார். ‘நாடோடிகள்’ அபிநயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கயல் வின்சென்ட், அர்ஜுனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

மணீஷ் மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, ராஜ் பரத் இசையமைக்க, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்ய, ஹரி தினேஷ் சண்டை பயிற்சியை கவனிக்க, பாலசுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்து முடிந்துள்ளது.

படம் பற்றி இதன் இயக்குனரும் நாயகனுமான எழில் கூறுகையில், “படத்தின் தலைப்பு சற்று வித்தியாசமாக இருந்தாலும், இது பெண்களை அவதூறு செய்கிற கதை அல்ல. காதல் தோல்வியடைந்த கதாநாயகன் தன் வாழ்வில் சந்திக்கிற பிரச்சனைகளும், இறுதியில் அவனுக்கு கிடைக்கின்ற தீர்வும், சமீபகாலங்களில் காதல் மலினப்பட்டு வருகிறதா என்ற கேள்விக்கான விடையும் தான் இப்படத்தின் கதைக்கரு. காதல் குறித்த மற்ற தமிழ் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டது. ஆண் – பெண் இருபாலருக்கும் இயல்பாக கருத்துச் சொல்லும் விதத்தில் இந்த ‘செஞ்சிட்டாளே என் காதல’ இருக்கும்” என்றார்.