மூத்த நடிகர் சரத்பாபு மரணம்: ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.

நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஐதராபாத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த சரத்பாபுவின் உடல்நிலை இன்று மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்தார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களும், ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.

சரத்பாபு திரைப் பயணம்: 1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் சரத்பாபு. ‘பட்டினப்பிரவேசம்’ படம் மூலமாக தமிழில் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர், பின்னாட்களில் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். 1979-ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே தனி அடையாளத்தை பெற்றுதந்தது. தவிர, ‘சரபஞ்சரம்’, ‘தன்யா’ உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ‘வசந்த முல்லை’ படத்தில் சரத்பாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 1980-ம் ஆண்டு பி.லெனின் இயக்கத்தில் உருவான ‘நதியை தேடி வந்த கடல்’ படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவுடன் இணைந்து சரத்பாபு நடித்திருந்தார். இந்தப் படம் ஜெயலலிதா நடித்த கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.