செம – விமர்சனம்
‘பேய்ப்படம்’, ‘அடல்ட் காமெடிப்படம்’ போன்ற மலிவான ஜானர்களைப் புறந்தள்ளிவிட்டு, ‘குடும்பப் பின்னணியில் ஒரு காதல் படம்’ என்று சொல்லத் தக்க படமாக வெளிவந்திருக்கிறது ‘செம’.
நாயகன் ஜி.வி.பிரகாஷூக்கு அடுத்த 3 மாதங்களுக்குள் திருமணம் நடக்க வேண்டும்; தவறினால், 6 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் நடக்கும் என்று எச்சரிக்கிறது ஜோதிடம். இதனால் பதறிப்போகும் ஜி.வி.பிரகாஷின் அம்மா சுஜாதா, மகனுக்கு பெண் பார்க்கும் படலத்தில் இறங்குகிறார். அவர் பார்க்கும் பெண்கள் எல்லாம் ஜி.வி.பிரகாஷை நிராகரிக்க, பதற்றம் அதிகரிக்கிறது.
பின்னர் மன்சூர் அலிகான் – கோவை சரளா தம்பதியரின் மகளான நாயகி அர்த்தனா பினு மணப்பெண்ணாக அமைகிறார். அழகிய தேவதையே தனக்கு மனைவியாகக் கிடைத்துவிட்டதாக பூரித்து கொண்டாடுகிறார் ஜி.வி.பிரகாஷ்.
இத்திருமண ஏற்பாட்டை உறுதி செய்துகொள்வதற்கான ‘பூ வைக்கும் நிகழ்ச்சி’க்கு ஜி.வி.பிரகாஷூம், அவரது அம்மாவும் தங்கள் சொந்த பந்தங்களுடன் தடபுடலாக கிளம்பிப் போகிறார்கள். இவர்கள் போய் சேருவதற்குள், அர்த்தனா பினுவுக்கு வேறொரு வசதியான மாப்பிள்ளை அமையக் கூடிய வாய்ப்பு ஏற்பட, “இந்த திருமணம் வேண்டாம். நீங்கள் வர வேண்டாம்” என்று தகவல் கொடுக்கிறார் அர்த்தனா பினுவின் அப்பா மன்சூர் அலிகான்.
இதனால் அவமானத்தில் மனமுடைந்து போகும் ஜி.வி.பிரகாஷின் அம்மா சுஜாதா, தற்கொலை செய்துகொள்வதற்காக கிணற்றில் விழுகிறார்.
சுஜாதா காப்பாற்றப்பட்டாரா? மன்சூர் அலிகான் மனம் மாறினாரா? ஜி.வி.பிரகாஷ் – அர்த்தனா பினு திருமணம் நடந்ததா? என்பது மீதிக்கதை.
காய்கறி, மீன், கருவாடு என கிடைத்ததை எல்லாம் விற்று சம்பாதிக்கும் பொறுப்புள்ள இளைஞன் கதாபாத்திரத்தில் வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அம்மாவிடம் பாசத்தைப் பொழிவது, தனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணிடம் காதலில் உருகுவது என இயல்பாக நடிக்க முயன்றிருக்கிறார். எனினும், நடிப்பில் அவர் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொள்வது அவருக்கு நல்லது.
‘சமுத்திரம்’ படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் வருவாரே காவேரி… அவரது முகச்சாயலில் இருக்கிறார் அர்த்தனா பினு. தந்தைக்கும் காதலனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் நண்பனாக வரும் யோகி பாபு தன் வழக்கமான ஸ்டைலில் ஆங்காங்கே காமெடி வசனத்தைக் கொளுத்திப்போட்டு சிரிக்க வைக்கிறார். மன்சூர் அலிகான், கோவை சரளா, சுஜாதா உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து குறைவில்லாமல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
குடும்பப் பாங்கான காதல் கதையாக கொடுக்க வேண்டும் என்ற தெளிவுடன், ஆபாசக் காட்சிகளோ, ஆபாச வசனங்களோ இல்லாமல், ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படம் கொடுத்ததற்காக அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த் பாராட்டுக்குரியவர். ‘தூறல் நின்னு போச்சு’, ‘திண்டுக்கல் சாரதி’ உள்ளிட்ட சில பழைய படங்களின் காட்சிகளை திரைக்கதை நகர்வு நினைவூட்டினாலும், இப்படத்தை ரசிப்பதற்கு அது இடையூறாக இல்லை என்பது ஆறுதலான விஷ்யம்.
பாண்டிராஜ் எழுதியிருக்கும் வசனம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இல்லை. விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் பாடலிசை, பின்னணி இசை ஓ.கே. ரகம்.
‘செம’ – குடும்பத்தினருக்கான செம படம்!