நயன்தாரா – வெங்கடேஷ் மோதலா?: ‘செல்வி’ படக்குழு விளக்கம்!

தமிழில் ‘செல்வி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘பாபு பங்காராம்’ என்ற பெயரிலும் உருவாகிவரும் இருமொழி படத்தில் கதாநாயகனாக வெங்கடேஷூம், கதாநாயகியாக நயன்தாராவும் நடித்துள்ளனர்.

“பாபு பங்காராம்’ / ‘செல்வி’ படத்தில் நயன்தாரா, வெங்கடேஷ் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்படாமல் பாக்கி உள்ளது. இந்த பாடல் காட்சியில் நடிக்கும்படி நயன்தாராவை அழைத்தனர். ஆனால் ஏற்கனவே அளித்த கால்ஷீட்டுகளை படக்குழுவினர் விரயம் செய்து விட்டதாக கூறி அதில் நடிக்க மறுத்து விட்டார். நயன்தாராவின் பிடிவாதம் காரணமாக, வேறு வழியின்றி பாடல் காட்சியை படமாக்காமலேயே படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

”இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ளுமாறு நயன்தாராவை அழைத்தனர். ஆனால் அந்த விழாவிலும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டார். நயன்தாராவின் நடவடிக்கைகள் வெங்கடேசுக்கும் படக்குழுவினருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது தெலுங்கு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெலுங்கு படவுலகில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னை ஏவிஎம் ஸ்டூடியோ ஏ.சி. திரையரங்கில் நடைபெற்றது. இப்படத்துக்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டார்கள்.

0a3w

“செல்வி’ படம் தொடர்பாக நயன்தாராவுக்கும், வெங்கடேஷூக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு படவுலகில் கிசுகிசுக்கப்படுகிறதே?” என்று இச்சந்திப்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ‘செல்வி’ படக்குழுவினர், “அது வெறும் கிசுகிசு தான். அதில் உண்மை இல்லை. படம் சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக நடந்து முடிந்துவிட்டன. படம் தெலுங்கிலும், தமிழிலும் ஒரே நாளில், ஆகஸ்டு 12ஆம் தேதி திரைக்கு வருகிறது” என்று தெரிவித்தார்கள்.

‘செல்வி’ படக்குழுவினர் மேலும் கூறுகையில், “இதில் கதாநாயகன் வெங்கடேஷ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகி நயன்தாரா. இவர்களுடன் ஜெயபிரகாஷ், சம்பத், சௌகார் ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

“வெங்கடேஷ் – நயன்தாரா ஜோடி ஏற்கனவே  ‘லஷ்மி’ என்ற படத்தில் நடித்து, அந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது ஆக்ஷன், காமெடி, பேமிலி கதையாக ‘செல்வி’ உருவாகி உள்ளது.

“சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க,  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே ‘செல்வந்தன்’, ‘பிரபாஸ் பாகுபலி’, ‘இது தாண்டா போலீஸ்’, ‘மகதீரா’, ‘புருஸ்லீ’, ‘எவண்டா’ உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது” என்றார்கள்.

ஒளிப்பதிவு   –  ரிச்சர்ட் பிரசாத்

இசை   –  ஜிப்ரான்

எடிட்டிங்   –  திரிநாத்

பாடல்கள்   –  கருணாநிதி, கல்யாண்ஜி, அருண்பாரதி, மீனாட்சிசுந்தரம், மோகன் எஸ்பிஐ

இயக்கம் –  மாருதி

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி