ரசிகர்கள் விமர்சனம் எதிரொலி: ‘சீதக்காதி’ படத்தின் நீளம் குறைப்பு!

விஜய் சேதுபதி, அர்ச்சனா, மெளலி, இயக்குநர் மகேந்திரன், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர், கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சீதக்காதி’, கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 20ஆம் தேதி) திரைக்கு வந்தது. பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் 73 வயதான அய்யா ஆதிமூலம் என்ற மேடை நாடகக் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
“விஜய் சேதுபதி முதல் 40 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார். அதன்பிறகு சுமார் இரண்டேகால் மணி நேரம் அவர் வரவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது” என்று விஜய் சேதுபதி ரசிகர்களும், “வயோதிக நாடகக் கலைஞராக வரும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் போரடிக்கின்றன” என்று பொதுவான ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.
இதனால் படத்தின் நீளத்தை படக்குழு தற்போது குறைத்துள்ளது. 2 மணி நேரம் 53 நிமிடங்களாக இருந்த படத்தின் நேரம், 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்கள் ஓடும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.