மதுரை மாநகரை தெறிக்க விட்ட ‘சீமராஜா’ இசைத்திருவிழா

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் ‘சீமராஜா இசைத்திருவிழா’ என்ற பெயரில் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

விழா நடந்த இடம் வண்ண விளக்குகளால் மின்னியது. பெரிய அளவில் நட்சத்திரங்கள் கூடிய ஒரு விண்மீனைப் போலவே ஒரு நாள் முழுக்க மதுரை இருந்தது. நாட்டுப்புற நடனங்கள் மற்றும் பழமையான கிராமிய நாட்டுப்புற கலைகள் பார்வையாளர்களை வரவேற்றன, அந்த பகுதியே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.

இப்படத்தின் இயக்குனர் பொன்ராம் கூறுகையில், “இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், பாடலாசிரியர் யுகபாரதி, ஹீரோ சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து வேலை செய்வதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. சூரி எங்கள் குழுவின் ஒரு அங்கம். சமந்தா எங்கள் கெமிஸ்ட்ரியை பார்த்து பொறாமைப்படுவதாக ஜாலியாக சொல்வார்.

சமந்தா ஒரு முழுமையான தொழில்முறை நடிகை. அவர் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு சிலம்பம் கலை தேவை என்று தெரிந்தவுடன், மிகவும் அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்று, மிக நேர்த்தியாக நடித்துக் கொடுத்தார்.

இந்த படத்தில் மூத்த நடிகர்கள் நெப்போலியன் சார், லால் சார், சிம்ரன் மேடம் ஆகியோர் மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் எப்போதும் எனக்கு சிறந்ததையே கொடுப்பார் என நம்புபவன் நான். சீமராஜா நிச்சயம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும். சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து நான் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தான் அவரை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.

இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பே மதுரையில் தான் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா. இந்த படத்தை உருவாக்குவதில் 24AM STUDIOS குழுவின் கடின உழைப்புடன், ஆர் டி ராஜாவின் முயற்சிகளும், தமிழ் சினிமா வர்த்தகத்தில் ராஜாவை சிறந்தவராக ஆக்கியிருக்கிறது” என்றார்.