“மூவரை விடுவித்த ஆளுநர் எழுவரை விடுவிக்க மறுப்பது ஏன்?”: சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 28 ஆண்டுகளாக சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கிற பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் நளினி ஆகியோரை விடுதலை செய்வது குறித்த விவகாரத்தில் தலையிட மத்திய அரசுக்கு எவ்வித அதிகாரமுமில்லை எனத் தெரிய வந்திருப்பதன் மூலம் மத்திய பாஜக அரசு பெரும் நீதித்துறை மோசடியும், முறைகேடும் செய்துகொண்டிருந்தது அம்பலமாகியிருக்கிறது.
பேரறிவாளன் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுள்ள விவரங்களின்படி, மாநில அரசின் தண்டனைக் கைதிகளின் விடுதலை தொடர்பான அதிகாரத்தில் தலையிட மத்திய அரசுக்கு எவ்வித சட்டவிதிகளும் துணை நிற்கவில்லை என மத்திய தகவல் ஆணையம் 14-08-18 அன்று தெரிவித்திருக்கிறது.
எழுவரையும் விடுவிப்பதில் எவ்விதச் சட்டச்சிக்கலும் இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகியிருப்பதால் சட்டவிதிகளைக் காரணங்காட்டிப் பொய்யுரைத்து எழுவரின் விடுதலையைக் கிடப்பில் போடும் செயல்கள் தேவையற்றது என்பது தெளிவாகியிருக்கிறது.
எழுவரின் விடுதலையைக் குடியரசுத் தலைவர் நிராகரித்ததாக வெளியான செய்தி குறித்து பேரறிவாளன் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டறிந்தபோது, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமலேயே அவரது பெயரில் உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்ட முறைகேடு கண்டறியப்பட்டது என்பதன் மூலம் மத்திய ஆளும் பாஜக அரசின் எதேச்சதிகாரத் திமிரையும், மாநில அரசுக்கெதிரான அத்துமீறலையும் அறிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு, எழுவரும் விடுவிக்கப்படக் கூடாது என்கிற உள்நோக்கத்தோடு மத்திய அரசு தொடர்ந்து அரசியல் செய்து, அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு நீதித்துறை முன்பே மோசடி செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த செப்டம்பர் 6 அன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, மாநில அரசின் அரசியல் சாசன உறுப்பு 161 ஆவது பிரிவின்படி எழுவரின் விடுதலைக்குத் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏறக்குறைய 75 நாட்களுக்கு மேலாகிறது.
இதுகுறித்த ஒப்புதலை வழங்க எவ்விதக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்கிற ஒற்றை அம்சத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, எழுவரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க மறுத்து வருவது அப்பட்டமான அதிகார அத்துமீறல்.
தமிழக மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற ஓர் அமைச்சரவையின் மூலம் எடுக்கப்பட்ட ஒரு முடிவை, நியமனப் பதவியின் மூலம் அமரவைக்கப்பட்ட ஆளுநர் புறந்தள்ளுகிறார் என்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். இதற்கெதிராக மனித உரிமை ஆர்வலர்களும், ஜனநாயகப் பேராற்றல்களும், முற்போக்குச் சக்திகளும் ஒருமித்துக் குரலெழுப்ப வேண்டியது தற்காலத்தின் பெருந்தேவையாகும்.
தருமபுரி வழக்கின் மூவரை 13 ஆண்டுகளில் விடுதலை செய்ய ஆவன செய்த தமிழக ஆளுநர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக 28 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிற, விடுதலைக்குரிய அத்தனைத் தகுதிகளையும் கொண்ட ஏழு தமிழர்களை விடுவிக்க ஏன் மறுக்கிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
தருமபுரி வழக்கும் எழுவர் வழக்கும் இந்தியத் தண்டனைச் சட்டம் 302-ன்படி தண்டிக்கப்பட்டவை என்பதால், இவ்விரண்டும் 161-வது சட்டப்பிரிவின்படி ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். இத்தோடு, எழுவரின் விடுதலையை ஆளுநரே பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழிகாட்டுதலையும் செய்திருக்கிறது.
இதன் மூலம் இவ்விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தலையீட்டைச் செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை என்பது மிகத் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே, தமிழக ஆளுநர் இனியும் மத்திய அரசின் நீதித்துறை மோசடிக்குத் துணைபோகாமல் உடனடியாக எழுவரையும் விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும். தருமபுரி வழக்கிலுள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய எடுத்த சிரத்தையினை இவ்வழக்கிலும் மேற்கொண்டு தமிழக ஆளுநருக்கு அழுத்தங்களைக் கொடுத்து எழுவரின் விடுதலையைத் தமிழக அரசு சாத்தியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.