தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற சீமான் கைது!
மதுரை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயன்றதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரை போலீசார் இன்று கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. இந்நிலையில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மதுரை வந்த சீமான் மற்றும் அவரது கட்சியினர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பாலமேடு செல்ல முயன்றபோது, பூதக்குடி அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். இதனால், அக்கட்சியினர் குமாரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்படுகையில் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜல்லிக்கட்டு போட்டி குறித்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தனியார் அமைப்பு மனுவின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆண்மை நீக்கம் செய்யப்படாத காளைகளே ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த காளைகள் மூலம், நாட்டு மாடுகளை உற்பத்தி செய்ய முடியும். எனவே நாட்டு மாடு இனத்தை ஒழிப்பதற்காகவே, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.