விமர்சனம்: ‘சவரக்கத்தி’ – அபத்தக்கத்தி!
“முடிதிருத்துனர் ஒருவருக்கும், ஒரு தாதாவுக்கும் இடையிலான மோதல்” என்பது தான் கரண் நடித்த ‘கொக்கி’ திரைப்படத்தின் ஸ்டோரி லைன். அதுதான் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் ஸ்டோரி லைனும்கூட.
ஒரு பகல் பொழுதில், காலை சுமார் 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலான 10 மணி நேரத்தில் நடக்கும் கதை ‘சவரக்கத்தி’.
சென்னையில் ஒரு சலூன் கடை. அதில் முடி திருத்துனர் பிச்சை (இயக்குனர் ராம்). அவரது மனைவி சுபத்ரா (பூர்ணா). இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகனும் மகளும் இருக்க, சுபத்ரா இப்போது நிறைமாத கர்ப்பிணி. சுபத்ராவுக்கு ஒரு தம்பி. இடுப்புக்குக் கீழே உறுப்புகள் செயல்படாமல் சூம்பிப்போய் இருக்கும் அவருக்கும், பெரிய அரசியல்வாதி ஒருவரின் மகளுக்கும் காதல். இந்த காதலுக்கு அரசியல்வாதி தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவே, காதலர்கள் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்வதற்காக ரிஜிஸ்திரார் அலுவலகத்துக்கு வந்து காத்திருக்கிறார்கள். இத்திருமணத்தில் பங்கேற்பதற்காக பிச்சை தனது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் மனைவி, மகன், மகள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு நால்வராக கிளம்பிப் போகிறார்.
சிறையில் இருந்து பரோலில் வந்திருக்கும் பெரிய தாதா மங்கா (மிஷ்கின்). பரோல் முடிந்து இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் சிறை செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் அவர், தனது அடியாட்கள் ஐந்தாறு பேருடன் நாலு சக்கர மோட்டார் வாகனம் ஒன்றில் ஜாலியாக நகர்வலம் புறப்பட்டுச் செல்கிறார்.
வழியில் ஒரு சிக்னலில் தாதா மங்காவின் வாகனம் திடீரென பிரேக் போட்ட காரணத்தால், பின்னால் வந்த முடி திருத்துனர் பிச்சை, தன் வாகனத்துடன் கீழே விழுகிறார். இதனால் ஆத்திரப்படும் பிச்சை, மங்காவையும் அவரது அடியாட்களையும் கன்னாபின்னா என்று திட்டுவதோடு, மங்காவை அடிக்க கையையும் ஓங்குகிறார். அப்போது மங்காவின் வாகனத்தை இன்னொரு வாகனம் இடிக்க, இதில் மங்காவுக்கு அடிபட்டு வாயில் ரத்தம் வருகிறது. பிச்சை தாக்கியதால் தான் ரத்தம் வருகிறது என தவறாக நினைக்கும் மங்கா, மாலை 6 மணிக்கு மீண்டும் சிறை செல்வதற்குமுன் பிச்சையை படுகொலை செய்ய வேண்டும் என்று வெறிகொண்டு, கத்தி சகிதம் தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் இதை தெரிந்துகொள்ளும் பிச்சை, மங்காவிடம் சிக்காமல் எங்கெங்கோ தப்பி ஓடுகிறார்.
பிச்சையை மங்கா கொன்றாரா? காதலர்களின் திருமணம் நடந்ததா? அரசியல்வாதி குடும்பம் என்ன செய்தது? நாயகி சுபத்ராவின் நிறைமாத கர்ப்பிணிக் கோலம் படத்தின் இறுதியில் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்துகிறது? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லுகிறது மீதிக்கதை.
இயக்குனர் ராம், பூர்ணா, இயக்குனர் மிஷ்கின் போன்ற முக்கிய நடிகர்கள் மட்டுமல்ல, தாதாவின் அடியாட்கள், ‘இங்கிலீஷ் பைத்தியம்’ போன்ற சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் வந்தவன், போனவன் எல்லாம்கூட படுபயங்கரமாக ஓவர் ஆக்டிங் செய்து பார்வையாளர்களை சாகடித்திருக்கிறார்கள். வாந்தி வராதவன் வாய்க்குள் விரலைவிட்டு வாந்தி எடுக்க வைப்பதைப் போல, சிரிப்பு மூட்டாத காட்சிகளில்கூட காட்டுக் கத்தாக கத்தி, மடீர் மடீர் என காட்டுமிராண்டித்தனமாக அடித்து, நடிப்பு என்ற பெயரில் சகலவிதமான பைத்தியக்காரத் தனங்களையும் செய்து, சிரிக்க வைக்க முயன்று, எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் மிஷ்கின். யதார்த்தத்துக்கும், நடைமுறைக்கும் கொஞ்சம்கூட பொருந்தாத வகையில் கதாபாத்திரங்களை படைத்திருக்கிறார். சலூன் கடைகளில், கத்தியில் பிளேடு சொருகி சவரம் செய்யும் இந்தக் காலத்தில், அப்பா பயன்படுத்திய கத்தி என்ற செண்டிமெண்டில், தோல் வாரில் கூர் தீட்டப்படும் பழங்கால சவரக்கத்தியை பயன்படுத்துகிறாராம் நாயகன். அவருக்கு செண்டிமெண்ட் இருக்கலாம். ஆனால், முகத்தை நீட்டுகிறவனுக்கு தோல் வியாதி மற்றும் அலர்ஜி பற்றிய அச்சம் இருக்குமே! எவன் வருவான் அந்த சலூன் கடைக்கு?
இன்னும் சில மணி நேரத்தில் குழந்தை பெற்றுவிடும் நிலையில் இருக்கும் நிறைமாத கர்ப்பிணியான நாயகி, பி.டி.உஷா ரேஞ்சுக்கு ஓடுவதாகவும், ஆளுயர சுவரேறி குதிப்பதாகவும் ரொம்ப கொடுமையாக காட்டியிருக்கிறார்கள். நல்லவேளை… அந்த பெண்ணை ரோப் கட்டி பறக்கிற மாதிரியெல்லாம் காட்டவில்லை. தப்பித்தோம்!
திருமணம் நடந்ததற்கான சான்றிதழ் இல்லாததால், “வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. அவரிடம் ஒரு கையெழுத்து மட்டும் வாங்கி வா. போதும்” என்கிறாராம் பதிவு அலுவலர். அரசு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமூக செயல்பாட்டாளர் அல்லது மக்கள் பிரதிநிதி தனது லெட்டர் பேடில் முறையாக சான்றிதழ் கொடுத்தாலன்றி, திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்ற சின்ன விஷயம்கூட கதாசிரியர் மிஷ்கினுக்கு தெரியவில்லை என்பது வேதனை.
இதையெல்லாம்விட பெரிய கொடுமை, பரோலில் வெளியே வந்திருக்கும் மிஷ்கின், தன் எதிரிகளையெல்லாம் ஒரு குடோனுக்கு வரிசையாக வரவழைத்து, அடியாட்களைக் கொண்டு அடித்து துவைக்கிறாராம். தன் அடியாட்களுடன் முதலில் ஜாலியாகவும், பிறகு முடி திருத்துனரை கொலை செய்வதற்காக வெறியுடனும் சென்னை நகரம் முழுக்க தன் இஷ்டம் போல் சுற்றுகிறாராம். பரோல் விதிமுறை மற்றும் நடைமுறை பற்றி கொஞ்சமாவது தெரிந்த எந்த கதாசிரியனும் இத்தனை அபத்தமாக யோசிக்க மாட்டான். ஒரு கைதி பரோல் கேட்கிறான் என்றால், எதற்காக அவன் வெளியே செல்ல நினைக்கிறான் என்பதற்கு சரியான காரணம் சொல்ல வேண்டும். பரோல் கிடைத்தால், அவன் எந்த காரியத்துக்காக ப்ரோலில் வந்திருக்கிறானோ அந்த காரியத்தை மட்டுமே செய்ய அவனுக்கு அனுமதி உண்டு. அவன் சிறையிலிருந்து வந்தது முதல் மீண்டும் சிறைக்கு திரும்பும் வரை காவலுக்கு போலீசார் உடன் இருப்பார்கள். வரம்பு மீறி கைதி செயல்படவோ, நடமாடவோ முடியாது. இதெல்லாம் தெரியாமல், பரோலில் வருவதை ஏதோ ஜாமீனில் வெளியே வருவதைப்போல நினைத்துக்கொண்டு, அந்த அறியாமை மீது மொத்த கதையையும் கட்டியிருக்கும் அபத்தத்தை என்ன சொல்வது?
‘சவரக்கத்தி’ – அபத்தக்கத்தி!