“சசிகலா விரைவில் முதல்வர் பதவி ஏற்பார்”: அமைச்சர் தகவல்!

ஆளும் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள வி.கே. சசிகலா விரைவில் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் புத்தாண்டை முன்னிட்டு, அமைச்சர்கள் பி.தங்கமணி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”வி.கே.சசிகலா அதிமுகவின் புதிய தலைமை அல்ல. தொண்டர்கள் ஏற்கெனவே அறிந்த தலைமை தான். அவர் பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்டதற்காக அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சசிகலா திறம்பட பணியாற்றுவார். அவரது தலைமையின் கீழ் அதிமுக மேலும் சிறப்பான வளர்ச்சியடையும். அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் சசிகலா பாதுகாப்பாக இருப்பார்.

சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் கட்சியை நடத்திச் செல்வோம் என்ற உறுதிமொழியை அவர் எடுத்துள்ளார். அவருக்கு உண்மை தொண்டர்கள் துணையாக இருப்பார்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போல், தற்போது பொதுச் செயலாளராகியுள்ள சசிகலா, விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதை ஏற்று விரைவில் முதல்வராக அவர் மக்கள் பணியாற்றுவார்” என்றார்.