“கமல்ஹாசன் கனவு பலிக்காது”: சசிகலா அணி பதிலடி!

நடிகர் கமல்ஹாசன் நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் நடத்த 4 ஆண்டுகள் வரை காத்திருக்காமல் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு இன்று பதிலளித்த சசிகலா அணியின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், ”ஜனநாயகம் என்பது என்ன? 5 ஆண்டு காலம் ஆட்சி செய்ய மக்கள் அனுமதி அளித்துள்ளனர் என்று தான் அர்த்தம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மக்களுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம். 122 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆட்சி 5 ஆண்டு காலம் இருக்கும். ஏழை, எளிய மக்களின் இயக்கம் இது. கமல்ஹாசன் ஒரு நடிகர். அவர் கற்பனையிலும், கனவிலும் வாழ்பவர். அவரது கனவு பலிக்காது” என்றார்.
ஜெயலலிதா சமாதியில் நேற்று தியானம் செய்த தீபா, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விரும்பும் தன்னை சிலர் மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த வைகை செல்வன், “ஜெயலலிதாவின் நினைவிடம் வருவதற்கான தகுதியை தீபா இழந்து விட்டார். பொய்யான குற்றசாட்டுகள் கூறுவதை தீபா நிறுத்திக்கொள்ள வேண்டும். உண்மை என்றால், தன்னை மிரட்டியவர்கள் யார் என தீபா வெளிப்படையாக சொல்ல வேண்டும்” என்று கூறினார்.