கணவரை சந்திக்க சசிகலாவுக்கு 5 நாள் பரோல்: பெங்களூரு சிறை நிர்வாகம் அனுமதி!
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை 5 நாள் பரோல் வழங்கியுள்ள்து. இதனையடுத்து, அவர் இன்று மாலை சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள பார்ப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகலா தனது கணவரை சந்திக்கச் செல்வதற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் சோமசேகரிடம் நேற்று முன்தினம் விண்ணப்பித்தார்.
சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா என அனுமதி கோரி கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக், உள்துறை மற்றும் சட்ட அமைச்சகத்துக்கு சோமசேகர் கடிதம் அனுப்பினார். மேலும், சசிகலா சென்னை வருவதால் ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்படுமா? அவருக்கு ஆபத்து உள்ளதா? போதிய பாதுகாப்பு வழங்கப்படுமா? போன்ற விஷயங்களில் தடையில்லா சான்று வழங்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அவர் கடிதம் அனுப்பினார். அதன்பேரில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் நேற்று தடையில்லா சான்றிதழின் நகலை மின்னஞ்சலில் சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தார்.
இதேபோல கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சசிகலா பரோலில் செல்ல அனுமதி அளித்தார். மாநில உள்துறை செயலர் பசவராஜ், சிறைத்துறையின் விதிமுறையின்படி சசிகலாவுக்கு பரோல் வழங்கலாம் என பார்ப்பன அக்ரஹார சிறைக்கு ஒப்புதல் கடிதத்தை அனுப்பினார்.
சசிகலாவுக்கு பரோல் வழங்குவதற்கு சட்டத்துறை இன்று (அக்.6) ஒப்புதல் அளித்த நிலையில், அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
சசிகலா ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.